திட்டம் இரண்டு,Thittam Irandu

திட்டம் இரண்டு - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ஐஸ்வர்யா ராஜேஷ், சுபாஷ் செல்வம்
தயாரிப்பு - சிக்சர் என்டர்டெயின்மென்ட், மினி ஸ்டுடியோ
இயக்கம் - விக்னேஷ் கார்த்திக்
இசை - சதீஷ் ரகுநாதன்
வெளியான தேதி - 30 ஜுலை 2021 (ஓடிடி)
நேரம் - 2 மணி நேரம் 3 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் சொல்லாத ஒரு கதையைத் தேடிப் பிடிக்க வேண்டும் என படத்தின் இயக்குனர் தீயாய் தேடியிருப்பார் போலிருக்கிறது. வாட்சப், பேஸ்புக், கூகுள் என எதில் கிடைத்ததோ அல்லது அவருக்குத் தெரிந்தவர்கள் மூலம் கிடைத்த கருவோ கிளைமாக்ஸ் வரை சஸ்பென்ஸ் என்ன என்பதை யூகிக்க முடியாத ஒரு திரைக்கதை.

கிளைமாக்ஸில் வைக்கப்பட்டுள்ள அந்த டுவிஸ்ட் அதிர்ச்சியோ அதிர்ச்சி என்றாலும் உணர்வு ரீதியாக வைத்து விட்டதால் ஐயோ என்று சொல்ல வைக்காமல் அச்சச்சோ என்று பாவப்பட வைத்துவிட்டார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

திருச்சியிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வருகிறார் இன்ஸ்பெக்டர் ஐஸ்வர்யா ராஜேஷ். பேருந்தில் உடன் பயணிக்கும் சுபாஷ் செல்வமை பார்த்ததும் மனசுக்குள் காதல் அரும்புகிறது. சென்னை வந்து காவல்நிலையத்தில் பொறுப்பேற்றதும், அவருடைய நெருங்கிய தோழி அனன்யா ராம்பிரசாத் காணாமல் போய்விட்டதாக புகார் வருகிறது. தோழியின் கணவர் கோகுல் ஆனந்திடம் விசாரிக்கிறார் ஐஸ்வர்யா. சில நாட்கள் கழித்து அனன்யாவின் கார் ஹைவேஸில் மரத்தில் மோதி எரிந்த நிலையில், அனன்யாவும் எரிந்து எலும்புக் கூடாகக் கிடைக்கிறார். அது விபத்தல்ல, கொலையாகத்தான் இருக்கும் என சந்தேகப்படுகிறார் ஐஸ்வர்யா. தீவிர விசாரணையை ஆரம்பிக்கும் அவர் சூர்யாவின் கொலைக்குக் காரணம் என்ன என்பதைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு க்ரைம் த்ரில்லர் ஆக ஆரம்பமாகும் கதை, பரபரப்பாக நகராமல் கொஞ்சம் தடுமாறி பின்னர் வேகமெடுத்து எதிர்பாராத அதிர்ச்சித் திருப்பத்துடன் கிளைமாக்சை நோக்கி சென்று உணர்வுபூர்வமாக முடிகிறது. இடையில் உள்ள சில திரைக்கதை தடுமாற்றங்களை சரி செய்திருந்தால் இன்னும் பர்பெக்ட் ஆன த்ரில்லர் படமாக அமைந்திருக்கும்.

ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைக் கதாநாயகியாக இந்தப் படம் மூலம் பிரமோஷன் ஆகியிருக்கிறார். காவல்துறைக்கு உரிய கம்பீரத்தை முகத்தில் காட்ட கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். பேச்சிலும், உடல்மொழியிலும் அதை சரி செய்ய முயற்சித்திருக்கிறார். சென்னைக்கு வந்த உடனேயே நெருங்கிய தோழியின் கொலையைப் பற்றி விசாரிக்க வேண்டிய சூழலில் அந்த கம்பீரத்தைக் காட்டுவது கடினமானதுதான் என்றாலும் இன்னும் கொஞ்சம் கோபம், ஆற்றாமை ஆகியவற்றை தன் நடிப்பில் சேர்த்திருக்கலாம். ஆனாலும், காதல் காட்சிகளில் இயல்பாய் நடித்திருக்கிறார். போலீஸ் ஆக நடிக்க நான்கு விஜயசாந்தி படத்தைப் பார்த்துப் பழகியிருக்கலாம்.

கதாநாயகி ஐஸ்வர்யாவை விழுந்து விழுந்து காதலிப்பவராக சுபாஷ் செல்வம். தங்கள் மீது அதிக அக்கறை செலுத்தும் இப்படியான ஒரு காதலன் தனக்குக் கிடைக்க மாட்டாரா என ஐஸ்வர்யாவை மட்டுமல்ல படம் பார்ப்பவர்களையும் ஏங்க வைக்கும் நடிப்பு. ஒரு கட்டத்தில் இவர் தான் சூர்யாவைக் கொன்றவராக இருப்பாரோ என இவர் கதாபாத்திரம் மீதான காட்சிகளை அழுத்தத்துடன் பதிய வைக்கிறார் இயக்குனர். ஐஸ்வர்யா சொல்வதைப் போல எங்கேயோ பார்த்த முகமாகவே இருக்கிறார். முயன்றால் தமிழ் சினிமாவில் இன்னும் முன்னேறலாம்.

ஐஸ்வர்யாவுடன் சிறு வயதிலிருந்தே நெருக்கமான தோழியாக இருக்கும் கதாபாத்திரத்தில் அனன்யா ராம்பிரசாத். இவர் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்காக ரெபரென்ஸ் கிடைப்பதெல்லாம் கொஞ்சம் கடினமானதுதான். இயக்குனர் சொல்வதை வைத்து, தனது கற்பனையையும் சேர்த்து அனுதாபம் வரும் அளவிற்கு நடித்திருக்கிறார்.

கொலைக் கதை என்றால் ரசிகர்களைக் குழப்புவதற்காக நான்கைந்து கதாபாத்திரங்களைப் படத்தில் வைப்பார்கள். அந்த வழக்கத்தை மாற்றாமல் இந்தப் படத்திலும் அப்படியான சில கதாபாத்திரங்கள் இருக்கின்றன. அனன்யாவின் கணவராக கோகுல் ஆனந்த், சப் இன்ஸ்பெக்டர்களாக முரளி ராதாகிருஷ்ணன், ஜீவா ரவி, அனன்யாவின் முன்னாள் காதலரான பாவல் நவகீதன் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரத்தில் இயக்குனர் சொன்னதை சரியாகச் செய்திருக்கிறார்கள்.

கோகுல் பினாயின் ஒளிப்பதிவில் இரவு நேரக் காட்சிகளும், த்ரில்லர் படங்களுக்கே உரிய பிரேமிங்குகளும் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு தீம் மியுசிக்கை சரியாக உருவாக்கிவிட்டு, அதை படம் முழுவதும் அடிக்கடி பொருத்தமாக பயன்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் சதீஷ் ரகுநாதன்.

படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கும் தாங்களே கூட பயணிப்பது போல ஒரு உணர்வை க்ரைம் த்ரில்லர் படங்கள் ஏற்படுத்த வேண்டும். அப்படியான ஒரு பயணத்தை ஆரம்பத்தில் இந்தப் படம் ஏற்படுத்தத் தடுமாறினாலும், போகப் போக ஏற்படுத்திவிட்டார்கள்.

கிளைமாக்ஸ் டுவிஸ்ட், அதில் சொல்லப்படும் காரணம், மனரீதியான, உடல்ரீதியான சில விஷயங்கள் ரசிகர்களுக்குப் பிடித்துப் போனால், இந்தப் படம் திகட்டாத த்ரில்லர் படமாக அமையலாம்.

திட்டம் இரண்டு - தோல்வியல்ல...

 

திட்டம் இரண்டு தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

திட்டம் இரண்டு

  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓