2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - மாலி மான்வி மூவி மேக்கர்ஸ்
இயக்கம் - விக்னேஷ் கார்த்திக்
இசை - ஜஸ்டின் பிரபாகரன்
நடிப்பு - ஜிவி பிரகாஷ்குமார், கவுரி கிஷன்
வெளியான தேதி - 25 ஆகஸ்ட் 2023
நேரம் - 2 மணி நேரம் 19 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

அறிவியல் பூர்வக் கதைகள்ள தமிழ் சினிமாவில் அபூர்வமாகத்தான் வருகிறது. இந்த 'அடியே' டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்ட ஒரு அறிவியல் பூர்வக் கதை.

Alternate Reality (மாற்று உண்மை), Parallel World (இணை பிரபஞ்சம்) என சில நம்ப முடியாத விஷயங்களை படத்தில் வைத்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். சுவாரசியமான கதை, திரைக்கதை, காட்சிகள் என படம் நகர்கிறது. ஒரு உலகத்தில் உதவாக்கரையாக இருக்கும் ஒருவன், இணையான உலகத்தில் ஒரு திறமைசாலியாக இருப்பதுதான் படத்தின் கதை.

பெற்றோரை இழந்த ஜிவி பிரகாஷ்குமார் நண்பர்கள் தயவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு தன்னுடன் பள்ளியில் படித்த கவுரி கிஷன் மீது காதல். ஆனால், அதை சொல்லாமலேயே இருக்கிறார். அவரிடம் காதலைச் சொல்லலாம் என செல்லும் போது விபத்தில் சிக்கி, இணை பிரபஞ்சத்திற்குப் போய்விடுகிறார். அங்கு அவர் ஒரு இசையமைப்பாளர், அவரது மனைவியாக கவுரி கிஷன் இருக்க குழம்பிப் போகிறார் ஜிவி. சில அனுபவங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த பிரபஞ்சத்திற்கு வருகிறார். வந்தால் கவுரி கிஷனை அவரது நண்பரே ஏமாற்றி திருமணம் செய்ய இருக்கிறார். இந்த சிக்கலில் இருந்து அவர் எப்படி விலகினார், கவுரி கிஷனை கை பிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் 'டைம் டிராவல்' என்பதை சுவாரசியமாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார். இந்த உலகத்தில் இருப்பவர்கள் இணை உலகத்தில் வேறு விதமாக இருப்பார்கள் என்பதெல்லாம் புதிதாக உள்ளவை. அறிவியல் கதையாக இருந்தாலும் காதலைப் பற்றிய கதையாகக் கையாண்டிருக்கிறார். சில நீளமான காட்சிகள் மட்டும் பொறுமையை சோதிக்கின்றன. கிளைமாக்ஸ் முன்பாக நம்மை நிறையவே குழப்பியிருக்கிறார். இணை உலகத்தில் ஜிவி பிரகாஷின் தோற்றத்தில் கொஞ்சம் மாற்றத்தைக் கொடுத்திருந்தால் இந்தக் குழப்பம் வந்திருக்காது.

நிஜமாக இல்லாத ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது ஒரு சவாலான விஷயம். இந்த உலகத்தில் ஒரு கதாபாத்திரம், இணை உலகத்தில் வேறொரு கதாபாத்திரம் என சமாளித்தாக வேண்டும். இரண்டையுமே சவாலுடன் சமாளித்திருக்கிறார் ஜிவி. காதல் நடிப்பிலும், ஏக்கமான நடிப்பிலும் உருக வைக்கிறார்.

ஜிவியின் காதலியாக கவுரி கிஷன். அமைதியாக, பாந்தமாக இருந்தாலும் அவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது, அதை நம்மை அவரது கதாபாத்திரத்துக்குள் ஈர்க்கிறது. ஜிவி, கவுரி இவர்கள் இருவரைச் சுற்றியே மொத்த படமும் நகர்கிறது.

இந்த உலகத்தில் ஆராய்ச்சியாளராக, இணை உலகத்தில் சினிமா இயக்குனராக நடித்திருக்கிறார் வெங்கட் பிரபு. ஜிவி, கவுரிக்குப் பிறகு படத்தில் இவருக்குத்தான் கொஞ்சம் முக்கியத்துவம். ஜிவியின் நண்பனாக ஆர்ஜே விஜய், அவ்வப்போது வந்தாலும் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். மற்றொரு நண்பராக வந்து கொஞ்சம் அதிர்ச்சியைத் தருகிறார் மதும்கேஷ்.

ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. பாடல்களில் அவர் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். கோகுல் பினாய் ஒளிப்பதிவு தரம். குழப்பம் ஏற்படாத வகையில் படத்தைத் தொகுத்திருக்கிறார் எடிட்டர் முத்தையன். ஆனாலும், கிளைமாக்சில் குழம்பிப் போவது தனிக் கதை.

புதிதாக முயற்சித்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் முத்திரை பதிக்கும் படமாக அமைந்திருக்கும்.

அடியே - உலகம் மாறினாலும் ஒரே காதல்

 

அடியே தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

அடியே

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

ஜி.வி.பிரகாஷ் குமார்

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் தான் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். 1987ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி, சென்னையில் பிறந்த ஜி.வி.பிரகாஷ், ஆரம்பத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை குரூப்பில் பணி செய்தார். ஏ.ஆர்.ரஹ்மான் தவிர்த்து ஹாரிஸ் ஜெயராஜிடமும் பணியாற்றியிருக்கிறார். பின்னர் வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ், முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். தொடர்ந்து தமிழில் பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். குறுகிய காலத்தில் 50 படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளரும் இவர் தான். இசையமைப்பாளராக மட்டுமல்லாது, ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்துள்ளார் ஜி.வி. தனது படங்களில் ஏராளமான பாடல்களை பாடிய பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் விமர்சனம் ↓