2.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - பாம்பூ ட்ரீஸ் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - நம்பிக்கை சந்துரு
இசை - ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்
நடிப்பு - சாண்டி, ஸ்ருதி செல்வம்
வெளியான தேதி - 10 டிசம்பர் 2021
நேரம் - 2 மணி நேரம் 4 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

உளவியல் ரீதியான படங்கள் தமிழ் சினிமாவில் அபூர்வமாகத்தான் வருகின்றன. அப்படி வரும் படங்கள் சாதாரண ரசிகர்களை அவ்வளவு சீக்கிரம் கவரும் விதத்தில் அமைவதில்லை. இந்தப் படமும் ஒரு உளவியர் ரீதியான படம் தான். அதை மாறுபட்ட விதத்தில் கொடுக்க வேண்டுமென முயற்சிக்கிறார் இயக்குநர் நம்பிக்கை சந்துரு.

சாண்டி, லோன் வாங்கி ஏதாவது தொழில் செய்ய வேண்டுமென இருப்பவர். கணவனால் கைவிடப்பட்ட அக்கா, அக்கா மகள், அம்மா என சிறு வீட்டில் வசிக்கிறார். 3.33 மணியில் பிறந்த அவருக்கு அந்த நேரத்தில் ஏதோ ஒன்று நடக்கிறது. கெட்ட, கெட்ட கனவாக வருகிறது. அவரைச் சுற்றி 'நெகட்டிவ்' சக்திகள் அதிகம் இருக்கிறது என்கிறார் பாதிரியார். இது ஒரு உளவியல் ரீதியான பிரச்சினை என்கிறார் டாக்டர். இதனால், மனதளவில் கடும் தடுமாற்றத்தில் இருக்கும் சாண்டி அதிலிருந்து விடுபட்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு வீட்டுக்குள்ளேயே படத்தை நகர்த்தியிருப்பது பாராட்டுக்குரியது. அதில் முடிந்த அளவிற்கு விதவிதமான கோணங்களில் ஒளிப்பதிவு அமைத்து ஒரே வீட்டில் படம் நகர்வது போன்ற உணர்வை ஏற்படுத்தாமல் இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

சாண்டியை டிவி நிகழ்ச்சிகளில் கலகலப்பான ஒருவராகத்தான் பார்த்துள்ளோம். இந்தப் படத்தில் படம் முழுவதும் அவரை மிகவும் சீரியசான ஒரு இளைஞராகப் பார்க்க முடியவில்லை. அவரும் தன்னால் முடிந்த வரையில் இயல்பாக நடித்திருக்கிறார். ஆனால், சாண்டி என்றாலே ஏரியாவில் ஒரு கலகலப்பு இருக்கும், அது இந்தப் படத்தில் மிஸ்ஸிங்.

சாண்டிக்குப் பிறகு அவரது அம்மா ரமா, அக்கா ரேஷ்மா ஆகியோரும் படம் முழுவதும் வருகிறார்கள். இருவரும் திடீரெனப் பேயாக மாறி நம்மை பயமுறுத்துகிறார்கள்.

சாண்டியின் காதலியாக ஸ்ருதி செல்வம். காதலன் சாண்டிக்கு ஆதரவாக இருக்கிறார். ஆனால் அவரும் ஒரு கட்டத்தில் சாண்டியை பயமுறுத்தும் விதத்தில் நடந்து கொள்கிறார்.

படத்தின் டீசர், டிரைலர்களில் கவுதம் மேனன் பெயர் வருவதால் படம் முழுவதும் இருப்பார் போலிருக்கிறது என்பதில் ஏமாற்றம். இரண்டே இரண்டு காட்சியில் தான் நடித்திருக்கிறார். படத்திற்கு ரசிகர்களை வரவழைப்பதற்காக அவருடைய பெயருக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏமாற்றியிருக்கிறார்கள். சரவணன், மைம் கோபி ஒரே ஒரு காட்சியில் வந்து போகிறார்கள்.

ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் ஒரு ஹாரர் படத்திற்கு பின்னணி இசையால் என்ன பயத்தை ஏற்படுத்த முடியுமோ அதைச் செய்திருக்கிறார். சதீஷ் மனோகரன் ஒளிப்பதிவு ஒரு வீட்டுக்குள்ளேயே அசத்தலாய் அமைந்துள்ளது.

ஒரு ஹாரர் படம் என்றால் விறுவிறுப்பாக நகர வேண்டும். ஆனால், மிக மெதுவாக காட்சிகளை நகர்த்தியிருக்கிறார்கள். 3.33 பிரச்சினையை ஒரே முறை காட்டினாலே போதும், அதைத் தொடர்ந்து வெவ்வேறு விதத்தில் காட்டி பொறுமையை சோதிக்கிறார்கள்.

3.33 - 2.25

 

பட குழுவினர்

3.33

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓