ஜோ
விமர்சனம்
தயாரிப்பு - விஷன் சினிமா ஹவுஸ்
இயக்கம் - ஹரிஹரன் ராம்
இசை - சித்து குமார்
நடிப்பு - ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், பவ்யா த்ரிகா
வெளியான தேதி - 24 நவம்பர் 2023
நேரம் - 2 மணி நேரம் 27 நிமிடம்
ரேட்டிங் - 3/5
தமிழ் சினிமாவில் சொல்லப்படாத காதல் கதைகள் இன்னும் உள்ளன. அவரவர் அனுபவங்களில் இதமான காதல் கதைகளை இயக்குனர்கள் கொடுத்து வருகிறார்கள். இந்தப் படத்தின் அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம், அப்படி ஒரு காதலை அனுபவமாய் கொடுத்து எதிர்பாராத ஒரு கிளைமாக்ஸ் மூலம் இப்படத்தை மனதில் இடம் பிடிக்க வைக்கிறார்.
இஞ்சினியரிங் கல்லூரியில் படிக்கும் ரியோ ராஜுக்கு அவரது வகுப்பிலேயே சேரும் மலையாளப் பெண்ணான மாளவிகா மனோஜை முதல் முறை பார்த்ததுமே காதல் வந்துவிடுகிறது. காதலை சொல்லத் தயங்கித் தயங்கி ஒரு வழியாக சொல்லிவிடுகிறார். அடுத்த நான்கு வருடங்களுக்கு நெருக்கமான காதலர்களாக இருப்பவர்கள் கல்லூரிப் படிப்பு முடிந்ததும் பிரிகிறார்கள். மாளவிகாவை பெண் கேட்டு அவரது குடும்பத்தினரை ரியோ சந்திக்கும் போது சிறு கைகலப்பு ஏற்படுகிறது. தனது அப்பாவை ரியோ அவமானப்படுத்தியதாகத் தவறாக நினைக்கிறார் மாளவிகா. இவருக்கும் வேறு ஒருவருக்கும் திருமணம் நிச்சயமாகிறது. இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
காதல் படங்கள் என்றாலே அந்தக் காதலை உணர்வுபூர்வமாய் கடத்தும் நாயகன், நாயகி இருந்தால்தான் ரசிகர்களுக்கும் அதே போன்ற உணர்வு வரும். இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் ரியோவும், மாளவிகாவும் நிஜக் காதலர்கள் போல அவ்வளவு காதலுடன் நடித்திருக்கிறார்கள். இருவரது சண்டைகளும் சில படங்களை ஞாபகப்படுத்தினாலும் இருவரது நடிப்பும் அவரவர் கதாபாத்திரங்களாகவே நம்மை உணர வைக்கிறது. காதலனாக இடைவேளை வரையிலும், கணவனாக இடைவேளைக்குப் பிறகும் ரியோ மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ் சினிமாவிற்கு வந்துள்ள மற்றுமொரு திறமையான மலையாள நடிகையாக மாளவிகா. தொடர் வாய்ப்புகள் எளிதில் தேடி வரும்.
ரியோவின் மனைவியாக பவ்யா ட்ரிகா. எவ்வளவு சொல்லியும் ரியோ கல்யாணத்தை நிறுத்தவில்லை என வெறுப்புடனேயே இருக்கிறார். ரியோவும், பவ்யாவும் கணவன், மனைவியாக நீடிப்பார்களா அல்லது பிரிவார்களா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, அதில் எதிர்பாராத ஒரு திருப்பத்தை வைத்திருக்கிறார் இயக்குனர். இதுதான் படத்தின் ஹைலைட்.
மற்ற கதாபாத்திரங்களில் ரியோவின் நண்பர்களாக நடித்திருப்பவர்களைத்தான் குறிப்பிட வேண்டும். தமிழ் சினிமாவில் காதலிக்கும் ஒவ்வொரு கதாநாயகனுக்கும் அவரது நண்பர்கள்தான் பேருதவியாக இருப்பார்கள். அது இந்தப் படத்திலும் தொடர்கிறது. அன்புதாசன், ஏகன் இருவரும் நண்பன் ரியோவுக்காக தோழமையாக தோள் கொடுக்கிறார்கள்.
சித்துகுமார் இசையமைப்பில், “உருகி உருகி” பாடல் உருக வைக்கிறது. யுவன்ஷங்கர் ராஜா பாடியுள்ள 'ஒரே கனா..' காதலின் வலியாய் துடிக்க வைக்கிறது. ராகுல் கேஜி விக்னேஷ் காதல் படத்துக்குரிய மென்மையான ஒளிப்பதிவை தந்திருக்கிறார்.
படத்தின் ஆரம்பத்தில் ரியோ, மாளவிகா காதல் இன்னும் அழுத்தமாய் இருந்திருக்கலாம். காதல் தோல்வி என்றாலே நாயகன் தாடி வைத்து அலைவது, குடிப்பது என்ற 'க்ளிஷே' காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். படத்தில் மது அருந்துவது, புகைப்பது என நிறைய காட்சிகள். இளம் இயக்குனர்கள் இப்படி பயணிப்பதை தவிர்த்தே ஆக வேண்டும்.
ஜோ - ஜோர்