ஜின் தி பெட்
விமர்சனம்
தயாரிப்பு : பேரி டேல் பிக்சர்ஸ்
இயக்கம் : டி.ஆர்.பாலா
நடிகர்கள் : முகேன் ராவ், பவ்யா தரிக்கா, பால சரவணன், வடிவுக்கரசி, ராதாரவி, நிழல்கள் ரவி, வினோதினி, ரித்விக்
வெளியான தேதி : 30.05.2025
நேரம் : 2 மணி நேரம் 32 நிமிடம்
ரேட்டிங் : 2.5/5
கதைக்களம்
மலேசியாவில் வேலை செய்து வரும் முகேன் ராவ், சொந்த ஊருக்கு வரும் போது 'ஜின்' என்ற வீட்டில் வைத்து வளர்க்கக்கூடிய பேய் ஒன்றை வாங்கி வருகிறார். அந்த ஜின்னை ஒரு பெட்டிக்குள் அடைத்து வைத்து பால், பிஸ்கட் எல்லாம் கொடுத்து செல்ல பிராணி போல் வளர்த்து வருகிறார். ஜின் வந்த நேரம் அவருக்கு சில நல்ல விஷயங்கள் நடக்கிறது. இதனால் லக்கியாக நினைக்கிறார். அதேநேரம் வீட்டில் இருப்பவர்களுக்கு சில கெட்ட விஷயங்கள் நடக்கிறது.
இந்நிலையில் ஒரு நாள் வெளியே சென்று விட்டு முகேன் ராவ் வீடு திரும்பும் போது அவரது மனைவி பவ்யா தரிக்கா ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடக்கிறார். மனைவியின் இந்த நிலைக்கு தான் வளர்க்கும் ஜின் தான் காரணம் என எண்ணி ஜின்னை வீட்டுக்கு வெளியே பெட்டியோடு தூக்கி வீசி விடுகிறார். கொஞ்ச நாட்களுக்கு பிறகு, தனது மனைவி பவ்யாவை கொலை செய்ய முயற்சித்தது ஜின் இல்லை என்ற உண்மை அவருக்கு தெரிய வருகிறது. அதன் பிறகு நடந்தது என்ன? பவ்யாவை கொலை செய்ய முயற்சித்தது யார்? எதற்காக அது நடந்தது? ஜின் நிலைமை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.
நம்முடைய வீடுகளில் செல்லப்பிராணி, வாஸ்து மீன், லக்கி மரம் போன்றவற்றை வளர்ப்பது போல் வெளிநாடுகளில் ஜின் என்ற ஒருவகை அமானுஷ்ய சக்தியை வீட்டில் வளர்ப்பது வழக்கம். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் இந்த ஜின் என்ற பேயை வைத்து கொண்டு புதுவகை கதை களத்துடன் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் டி.ஆர்.பாலா.
காமெடி ஹாரர் கலந்த பேண்டஸி திரில்லர் படமாக இதை கொடுத்துள்ளார். ந்த புதுமையான கதைக்கு கிரிப்பிங் ஆன திரைக்கதை இல்லாததால் பல இடங்களில் படம் தடுமாறுகிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் டிராக்கை விட்டு ட்ரெயின் இறங்கியது போல் கதை எங்கெங்கோ செல்கிறது. இருப்பினும் கலகலப்பாக ஓரளவுக்கு ரசிக்கும்படி தந்திருக்கிறார்.
பணக்கார வீடுகளில் நாய்க்குட்டி வளர்ப்பது போல் இந்த படத்தில் ஜின்னை வளர்க்கிறார் முகேன் ராவ், ஜின்னோடு பழகும் காட்சிகளிலும், பவ்யாவுடன் காதல் காட்சிகளிலும் அவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது. இருப்பினும் இன்னும் கொஞ்சம் நடிப்பை மெருகேற்ற வேண்டும்.
பவ்யா தரிக்கா வழக்கமான ஸ்மைலுடன் அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார். முகேன் ராவுக்கும் அவருக்கும் இடையிலான காதல் காட்சிகள் செம ரொமான்ஸ். இறுதியில் ஆக்ரோஷமாக போராடும் சீன்களில் அவரது நடிப்பு படத்துக்கு பெரிய பலமாக இருக்கிறது. பாலசரவணன் டைமிங் காமெடி சிரிக்க வைக்கிறது. இவர்களுடன் சாமியாராக வரும் இமான் அண்ணாச்சி, வினோதினி, வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, ராதா ரவி ஆகியோர் நடிப்பு கூடுதல் பலம் சேர்த்து உள்ளது.
விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசையில் மிரட்டி உள்ளனர். அர்ஜுன் ராஜாவின் ஒளிப்பதிவில் மலேசியா மற்றும் சென்னை அழகாக தெரிகிறது. குறிப்பாக ஜின் காட்சிகளை படமாக்கிய விதம் சிறப்பு.
பிளஸ் & மைனஸ்
ஒரு பேய் படத்தை பயமில்லாமல் கலகலப்பாக பார்க்க வைப்பதுடன் ஜின் சண்டை போடும் காட்சிகளும், அதனின் குரலும் ரசிக்க வைக்கிறது. இவ்வளவு ஆர்டிஸ்ட் இருந்தும் படத்தை எங்கேஜ் ஆக கொடுக்க முடியாதது ஏமாற்றம். அதோடு பல இடங்களில் லாஜிக் மீறல்கள் இருப்பதும் மைனஸ்.
ஜின் - பேண்டஸி