இடி மின்னல் காதல்,Idi Minnal Kadhal
Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - பாவகி என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - பாலாஜி மாதவன்
இசை - சாம் சிஎஸ்
நடிப்பு - சிபி, பவ்யா த்ரிகா, யாஷ்மின் பொன்னப்பா
வெளியான தேதி - 29 மார்ச் 2024
நேரம் - 2 மணி நேரம் 11 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

ஒரு விபத்தின் பின்னணியில் திரைக்கதை அமைத்து, சில பல கிளைக் கதைகளுடன் அனைத்தையும் ஒரே நேர்க்கோட்டில் கொண்டு முடிக்கும்படியான ஒரு படம். கதையாக யோசித்த இயக்குனர் பாலாஜி மாதவன், அதை சொல்லும் விதத்தில் கொஞ்சம் சுவாரசியம் சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

சிபி, பவ்யா த்ரிக்கா இருவரும் காதலர்கள். சில நாட்களில் அமெரிக்கா செல்ல வேண்டிய சிபி, காதலி பவ்யாவுடன் காரை ஓட்டிச் செல்லும் போது ஒருவரை இடித்துக் கொன்று விடுகிறார். காரை நண்பனின் காரேஜில் மறைத்து வைக்கிறார். விபத்தில் இறந்த மனோஜ் முல்லத் மகன் ஜெய் ஆதித்யா, தனது அப்பா இன்னும் வீட்டிற்கு வராததால் மனமுடைந்து அழுகிறார். ஏற்கெனவே அம்மாவை இழந்த ஜெய் ஆதித்யாவுக்கு அந்த சமயத்தில் ஆறுதல் சொல்கிறார் பாலியல் தொழில் செய்யும் யாஷ்மின் பொன்னப்பா. தனது தம்பியைக் கொன்றுவிட்டார் என்ற ஆத்திரத்தில் மனோஜைத் தேடி சென்னை வருகிறார் வில்லன் வின்சென்ட். மனோஜ் இறந்து போனது தெரியாமல் அவர் வரும் வரை அவரது மகன் ஜெய் ஆதித்யாவை இழுத்துக் கொண்டு போகத் துடிக்கிறார். இவற்றிற்கான தீர்வு என்ன என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

சிபி, பவ்யா ட்ரிக்கா காரை ஏற்றி ஒருவரைக் கொலை செய்துவிட்ட தவிப்பில் இருக்கிறார்கள். ஆனால், அந்த விபத்தைப் பற்றி வெளியில் சொல்லாமல் அதை மறைப்பதிலும், தாங்கள் தப்பிப்பதிலுமே குறியாக இருக்கிறார்கள். அதனால், அவர்கள் மீது அனுதாபம் வரவேயில்லை. கடைசியில் ஜெய் ஆதித்யாவை சிபி காப்பாற்றும் போதுதான் அந்த அனுதாபம் வருகிறது.

படத்தின் நாயகியாக பவ்யாவை சொல்வதை விட சிறுவன் ஜெய் ஆதித்யாவைக் காப்பாற்றத் துடிக்கும் யாஷ்மின் பொன்னப்பாவை கதாநாயகி எனச் சொல்லலாம். பாலியல் தொழில் செய்தாலும் அவர்களுக்கும் நல்ல குணம் இருக்கும் என்பதை அவரது கதாபாத்திரம் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர். யாஷ்மின் தோற்றம் ரிச் ஆகத் தெரிந்தாலும் நடிப்பில் அதை மறைக்க முயல்கிறார். ஜெய் ஆதித்யா சில காட்சிகளில் யதார்த்தமாகவும், சில காட்சிகளில் ஓவராகவும் நடித்திருக்கிறார்.

ஜெய் ஆதித்யாவின் அப்பா மனோஜ் காணாமல் போன வழக்கை விசாரிக்கும் தலைமைக் காவலராக பாலாஜி சக்திவேல். எப்படியாவது அவருக்கு உதவ வேண்டுமென துடிக்கிறார். சிபிக்கு உதவும் நண்பனான ஜெகன், காமெடி செய்யாமல் அடக்கி வாசித்துள்ளார். வில்லனாக வின்சென்ட், காட்சிக்குக் காட்சி ஓவர் நடிப்பு. ஜெய் ஆதித்யாவுக்கு உதவி செய்யும் பாதிரியாராக ராதாரவி. வில்லன் வின்சென்ட் உடன் ஒரு பாதிரியார் அடியாள் போல ஏன் கூடவே போகிறார் எனத் தெரியவில்லை.

சாம் சிஎஸ் பின்னணி இசை படத்தை ஆங்காங்கே காப்பாற்றுகிறது. இரவு நேரக் காட்சிகள் படத்தில் அதிகம் உள்ளது. ஜெயசந்தர் பின்னம்னேனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தில் உள்ள கிளைக்கதைகள் ஒவ்வொன்றும் தனித் தனியாகப் பயணிக்கிறது. கிளைமாக்சில்தான் ஒன்றிணைகிறது. அதுவரையிலும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் நகரும் உணர்வையே நமக்குத் தருகிறது. அதுதான் படத்தின் மைனஸ் ஆக அமைந்துவிட்டது.

இடி மின்னல் காதல் - புயலில் சிக்கிய…

 

பட குழுவினர்

இடி மின்னல் காதல்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓