நிறம் மாறும் உலகில்
விமர்சனம்
தயாரிப்பு : சிக்னேச்சர் புராடக்ஷன்ஸ் மற்றும் ஜிஎஸ் சினிமா இன்டர்நேஷ்னல்
இயக்கம் : பிரிட்டா ஜே.பி
நடிகர்கள் : பாரதிராஜா, வடிவுக்கரசி, நட்டி, சுரேஷ் மேனன், ரியோ ராஜ், சாண்டி, யோகி பாபு, ஆதிரை, கனிகா, லவ்லின் சந்திரசேகர், ஏகன், விக்னேஷ்காந்த், மைம் கோபி, விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன், சுரேஷ் சக்ரவர்த்தி
வெளியான தேதி : 07.03.2025
நேரம் : 2 மணி நேரம் 26 நிமிடம்
ரேட்டிங் : 2.75/5
கதைக்களம்
வாழ்க்கையில் அம்மா எவ்வளவு முக்கியம் என்பதை நாலு கேரக்டர்களின் வாழ்க்கையில் நடந்ததை கதையாக யோகி பாபு விவரிக்கிறார். முதலாவதாக மும்பையில் தாதாவாக இருக்கும் நட்டி அடிக்கடி விபச்சார விடுதிக்கு செல்கிறார். அங்கு பெண்களிடம் வினோதமான ஒரு செயலை செய்கிறார். அது என்ன? அடுத்ததாக திருத்தணி அருகே ஒரு கிராமத்தில் பாரதிராஜா, வடிவுக்கரசி இருவரும் மகன்கள் தரும் பணத்தில் வாழ்க்கை நடத்துகின்றனர். பெற்ற தாய், தந்தைக்கு மகன்கள் திருப்பி என்ன செய்தனர்? மூன்றாவதாக நாகப்பட்டினம் மீனவ கிராமத்தில் சிறு வயதில் தகப்பனை இழந்து தாயின் அரவணைப்பில் வளரும் ரியோ ராஜ்க்கு அம்மா ஆதிரை தான் உலகம். மகனை நல்ல முறையில் படிக்க வைத்து எப்படியாவது கலெக்டராக வேண்டும் என்ற ஆசை என்ன ஆனது? கடைசியாக சென்னையில் ஆட்டோ ஓட்டும் சாண்டிக்கு சொந்தம் என சொல்லிக் கொள்ள யாரும் கிடையாது. இந்த நிலையில் சாண்டிக்கு, துளசி அம்மாவாகிறார். அதன் பின்னணி என்ன? இப்படியாக நான்கு பேரில் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களே படத்தின் மீதி கதை.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் இந்த படம் உண்மையிலேயே பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. தாய் என்பவள் எப்படி நிபந்தனையற்ற அன்பை தருகிறார் என்பதை அழகாக நான்கு கதைகள் மூலம் இயக்குனர் பிரிட்டா ஜே.பி. சொல்லி உள்ளார். ஒவ்வொரு கதைகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றாலும் இந்த நான்கு கதைகளுக்குமே அம்மா என்பவள் தான் மையப் புள்ளியாக இருக்கிறார்.
அதேபோல் இதில் நடித்துள்ள பாரதிராஜா - வடிவுக்கரசி, நட்டி, அதிரை - ரியோ ராஜ், சாண்டி - துளசி ஆகியோர் அந்தந்த கேரக்டராகவே வாழ்ந்துள்ளனர். அவர்களுக்கு துணையாக சுரேஷ் மேனன், ஏகன், ரிஷிகாந்த், விக்னேஷ்காந்த், மைம் கோபி, ஆடுகளம் நரேன், சுரேஷ் சக்கரவர்த்தி, அய்ரா கிருஷ்ணன் ஆகியோர் தங்கள் பங்களிப்பை சிறப்பாக தந்துள்ளனர். இவர்களோடு இந்த நான்கு கதைகளை ரசிகர்களுக்கு சொல்லும் டிடிஆர் கதாபாத்திரத்தில் யோகி பாபு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவருடன் லவ்லின் சந்திரசேகரும் ஸ்கோர் செய்கிறார். மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஆகியோரின் ஒளிப்பதிவில் படம் பளிச்சிடுகிறது.தேவ் பிரபாகரன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் ரசிக்க வைத்துள்ளார்.
பிளஸ் & மைனஸ்
கதைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் தலைப்பு வைத்துள்ளது சிறப்பு. இரண்டரை மணி நேரத்தில் நான்கு கதைகளை ஒரு டிராவல் அனுபவமாக ரசிகர்களுக்கு கொடுத்துள்ள போதிலும் நான்கு கதைகளுமே சோகத்தை பிழிந்து விடுகிறது.
நிறம் மாறும் உலகில் - சோக கீதம்
நிறம் மாறும் உலகில் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
நிறம் மாறும் உலகில்
- நடிகர்
- இயக்குனர்