விமானம் (தமிழ்),Vimanam (Tamil)
Advertisement
2.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - கிரண் கொர்ராபட்டி கிரியேட்டிவ் ஒர்க்ஸ், ஜீ ஸ்டுடியோஸ்
இயக்கம் - சிவ பிரசாத் யனலா
இசை - சரண் அர்ஜுன்
நடிப்பு - சமுத்திரக்கனி, மாஸ்டர் துருவன்
வெளியான தேதி - 9 ஜுன் 2023
நேரம் - 2 மணி நேரம் 2 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றத்தான் அனைத்து பெற்றோர்களும் உழைப்பார்கள். தங்களது மகிழ்ச்சியை விட குழந்தைகளின் மகிழ்ச்சியே அவர்களுக்குப் பெரிய மகிழ்ச்சி. அப்படி ஒரு மகிழ்ச்சியைத் தனது மகனுக்கு நிறைவேற்றத் துடிக்கும் ஒரு அப்பாவின் கதைதான் இந்த 'விமானம்'.

தமிழில் இந்த வருடம் மார்ச் மாதம் வெளிவந்த 'ராஜா மகள்' என்ற படத்தின் கதைதான் இந்தப் படத்திலும் உள்ளது. அதில் மகள், இதில் மகன். அதில் வீடு, இதில் விமானம், அவ்வளவுதான் வித்தியாசம். விமானம் என்பதற்குப் பதிலாக 'ராஜா மகன்' என்று கூட தலைப்பு வைத்திருக்கலாம்.

சமுத்திரக்கனி ஏழைகள் அதிகம் குடியிருக்கும் காலனியில் கட்டணக் கழிப்பிடத்தை நிர்வகித்து வருகிறார். அவரது மகனுக்கு விமானத்தில் செல்ல வேண்டும் என்பது ஆசை. நன்றாகப் படிக்கும் மகனுக்கு சைனிக் பள்ளியில் சேர்க்கை கிடைத்த நேரத்தில் மகனுக்கு 'லுகேமியா' என்ற ரத்தப் புற்றுநோய் வந்துவிடுகிறது. சில மாதங்கள் மட்டுமே அவன் உயிரோடு இருப்பான் என்ற நிலை. விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற மகனின் ஆசையை நிறைவேற்றத் துடிக்கிறார் சமுத்திரக்கனி. அதற்காகப் பத்தாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. அந்தப் பணத்தைச் சேர்த்தாரா, மகனை விமானத்தில் அழைத்துச் சென்றாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகி வெளிவந்துள்ள படம். சமுத்திரக்கனி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் தமிழிலும் வியாபாரம் செய்துவிடலாம் என ஓரிரு தமிழ் நடிகர்களையும் சேர்த்து நடிக்க வைத்திருக்கிறார்கள். ஆனால், படம் முழுவதுமே தெலுங்கு வாசமே வீசுகிறது. சமுத்திரக்கனி உட்பட முக்கியக் கதாபாத்திரங்கள் தெலுங்கில் பேசி நடித்திருப்பதால் தமிழ் உச்சரிப்புகள் ஒட்டவில்லை.

அப்பாவித்தனமான கதாபாத்திரம் என்றால் கேட்கவே வேண்டாம், சமுத்திரக்கனி உருகி உருகி நடித்துவிடுவார், இதிலும் அப்படியே. மகனின் ஆசையை எப்படியாவது நிறைவேற்றத் துடிக்கிறார். அதற்காக தனக்கு நேரும் அவமானங்களையும் பொறுத்துக் கொள்கிறார்கள். அம்மா இல்லாத மகனை பாசமாக வளர்க்கும் ஒரு அப்பா.

சமுத்திரக்கனியின் மகனாக மாஸ்டர் துருவன். ராஜு கதாபாத்திரத்தில் நடிக்க சரியான தேர்வு. அனுபவம் வாய்ந்த நடிகர் போல நடித்திருக்கிறார். அவருக்கான முடிவு எப்படியிருக்கப் போகிறது என்பது நமக்குத் தெரிந்த ஒன்றாக இருந்தாலும், அதற்கான முடிவை நெகிழ்ச்சியான காட்சியுடன் வைத்திருக்கிறார் இயக்குனர்.

அப்பாவுக்கும், சிறு வயது மகனுக்கும் இடையிலான பாசத்தைப் பற்றிய கதையில் அதே பகுதியில் வசிக்கும் விலைமாது கதாபாத்திரம் படத்தில் இடம் பெறக் கூடாத ஒன்று. சிறுவர்களும், சிறுமியர்களும் இப்படத்தை எப்படிப் பார்ப்பார்கள். அதிலும் அக்கதாபாத்திரத்தில் நடித்துள்ள அனசுயா பரத்வாஜ், ஒவ்வொரு முறையும் தனக்கான விலை ஆயிரம் ரூபாய் என அடிக்கடி சொல்கிறார்கள். அனசுயாவைப் பார்த்து அலையும் கதாபாத்திரத்தில் ராகுல் ராமகிருஷ்ணா. இவர்கள் இருவரது கதாபாத்திரமுமே இப்படிப்பட்ட படத்திற்குத் தேவையில்லாத ஒன்று. சமுத்திரக்கனியின் எதிர்வீட்டு நண்பராக தன்ராஜ். மீரா ஜாஸ்மின் கிளைமாக்சில் சிறப்புத் தோற்றத்தில் வந்து உதவி செய்கிறார்.

சிறிய பட்ஜெட்டில், ஒரே ஒரு செட்டில் முழு படத்தையும் எடுத்து முடித்திருக்கிறார்கள். ஒரு திரைப்படமாக இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட படங்களை குடும்பத்தினர் கூட வந்து பார்ப்பார்களா என்பது சந்தேகம்தான்.

விமானம் - ராஜா மகன்

 

பட குழுவினர்

விமானம் (தமிழ்)

  • நடிகர்
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓