2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - 18 ரீல்ஸ்
இயக்கம் - கின்ஸ்லின்
இசை - ஜிப்ரான்
நடிப்பு - ஐஸ்வர்யா ராஜேஷ், ஆடுகளம் நரேன்
வெளியான தேதி - 30 டிசம்பர் 2022
நேரம் - 1 மணி நேரம் 44 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் அடிக்கடி வருவதில்லை. ஆனால், சமீப காலங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் அம்மாதிரியான படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு கார் டிரைவர் கதாபாத்திரத்தில் ஒரு கதாநாயகியை நடிக்க வைப்பது தமிழ் சினிமாவுக்குப் புதியது. அப்படி புதிதாக ஒரு கதைக்களத்தை யோசிக்க இயக்குனர் கிங்ஸ்லின் கூடவே விறுவிறுப்பான திரைக்கதையையும் யோசித்திருந்தால் இந்த டிரைவர் ஜமுனா, இன்னும் ஜமாய்த்திருப்பார்.

அப்பாவின் கொலைக்குப் பிறகு அவர் செய்து வந்த கார் டிரைவர் வேலையை அவரது மகளான ஐஸ்வர்யா ராஜேஷ் செய்து வருகிறார். முன்னாள் எம்எல்ஏவான ஆடுகளம் நரேனைக் கொலை செய்ய ஒரு கூலிப்படை புறப்படுகிறது. அவர்கள் ஐஸ்வர்யா ராஜேஷின் கால் டாக்சியில் செல்ல நேரிடுகிறது. கூலிப்படையைப் பிடிக்க உதவி கமிஷனர் ஒரு பக்கம் துடித்துக் கொண்டிருக்கிறார். கூலிப்படையின் பிடியில் ஐஸ்வர்யா சிக்கித் தவிக்கிறார். ஆடுகளம் நரேனைக் கொலை செய்ய உதவியாக அவர் வீட்டிற்குள்ளேயே கூலிப்படை ஆட்கள் இறங்குகிறார்கள். இந்த சூழ்நிலையில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு கார் பயணத்தை படத்தின் மொத்த திரைக்கதையாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர். அதில் இன்னும் பல பரபரப்பான சம்பவங்களைச் சேர்த்திருக்கலாம். ஒரு பெண் கார் டிரைவர் ஆக இருப்பதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன என்பதை புதிதாகச் சொல்ல நல்ல வாய்ப்பு. அதை இயக்குனர் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டுவிட்டார்.

மற்ற முன்னணி கதாநாயகிகள் தேர்வு செய்து நடிக்கும் கதாபாத்திரங்களிலிருந்து மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தப் படத்திலும் அப்படி ஒரு கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து அதில் பொருத்தமாக நடித்திருக்கிறார். ஆனால், அவருக்கான அழுத்தமான காட்சிகளை இன்னும் வைத்திருக்கலாம். கிளைமாக்சில் மட்டும்தான் ஐஸ்வர்யாவிற்கு நன்றாக நடிக்க வாய்ப்பு. அதற்கு முன்பு வரை அவரை ஒரு பயத்துடன் இருப்பது போலவே காட்டியிருக்கிறார்கள். ஐஸ்வர்யா பற்றிய பிளாஷ்பேக்கை முன்னரே சொல்லி படம் பார்ப்பவர்களைத் தயார்படுத்தி இருந்தால் இன்னும் ஒரு அழுத்தம் கிடைத்திருக்கலாம்.

ஐஸ்வர்யா ராஜேஷ் தவிர தெரிந்த முகம் என்று பார்த்தால் ஆடுகளம் நரேன் மட்டும்தான் இருக்கிறார். அவரது மகனாக மணிகண்டன் ராஜேஷ் நடித்திருக்கிறார். ஐஸ்வர்யா காரில் பயணிக்கும் ஒரு இசையமைப்பாளராக நடித்திருக்கும் அபிஷேக் கடுப்பேற்றுகிறார். காரில் உள்ள கூலிப்படையினர் நாடகத்தனமாக நடித்திருக்கிறார்கள்.

ஒரு கார் பயணத்தை படமாக்குவது எளிதான விஷயமல்ல. ஒளிப்பதிவாளர் கோகுல் பெனாய் ரிஸ்க் எடுத்து காட்சிகளை ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் பின்னணி இசை பரவாயில்லை.

ஐஸ்வர்யா கதாபாத்திரம் மீது நமக்கு ஆரம்பத்திலேயே ஒரு அனுதாபம் வரும் அளவிற்கு திரைக்கதை அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. கிளைமாக்சில் அவர் சில பல உண்மைகளைச் சொல்லும் போது அவர் மீது நமக்கு பரிதாபம் வராமல் போவதற்கும் அதுதான் காரணம். கொஞ்சம் மாற்றி யோசித்திருக்கலாம்.

டிரைவர் ஜமுனா - மிதமான வேகம்

 

டிரைவர் ஜமுனா தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

டிரைவர் ஜமுனா

  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓