Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

வத்திக்குச்சி

வத்திக்குச்சி,Vathikuchi
  • வத்திக்குச்சி
  • திலீபன்
  • அஞ்சலி
  • இயக்குனர்: கின்ஸிலின்
02 ஏப், 2013 - 12:37 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » வத்திக்குச்சி

    

தினமலர் விமர்சனம்



பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் தம்பி திலீபன், அண்ணன் முருகதாஸின் தயாரிப்பில் கதாநாயகராக களம் இறங்கி இருக்கும் படம்தான் "வத்திக்குச்சி!" முருகதாஸின் உதவியாளர் கின்ஸிலின் எழுதி-இயக்கி இருக்கும் இந்தப்படத்தில் அஞ்சலி கதாநாயகி என்பது பலம்!

சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள சமத்துவபுரம் குடியிருப்பில் வசிக்கும் ஷேர்ஆட்டோ டிரைவர் திலீபனுக்கு அதே குடியிருப்பில் வசித்தபடி ஸ்ப‌ோக்கன் இங்கிலீஷ் இன்ஸ்டியூட்டில் படிக்கும் அஞ்சலிக்கும் காதல்! அந்த காதலை திலீபன் தன் ஷேர் ஆட்டோவில் அடிக்கடி பயணிக்கும் அஞ்சலியிடம் சொல்லிவிட, அஞ்சலியோ மனதில் ஆசையிருந்தாலும் அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் இழுத்தடிக்கிறார். இந்நிலையில் ஊருக்கு உதவப்போய் உபத்திரத்தில் மாட்டிக்கொள்ளும் திலீபனை போட்டு தள்ள துடிக்கின்றனர் லோக்கல் தாதா சம்பத் தலைமையிலான கூலிப்படையும், அவர்களுக்கு பணஉதவி செய்யும் நகைக்கடை அதிபர் ஜெயபிரகாஷூம் அவரது மகனும். இவர்கள் தவிர்த்து திலீபனின் வீட்டிற்கு எதிர்வீட்டிலேயே வசிக்கும் காமெடி ஜெகனும், அவனது நண்பகளும் வேறு திலீபனை தீர்த்து கட்ட துப்பாக்கியும் கையுமாக திரிகின்றனர். அத்தனைபேரிடமிருந்தும் தப்பித்து திலீபன் அஞ்சலியை கரம் பிடிக்கிறாரா.? அல்லது அஞ்சலி, திலீபனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறாரா...? என்பது சஸ்பென்ஸ்கள் பல நிறைந்த க்ளைமாக்ஸ்!

புதுமுகம் திலீபன், இவருக்கு நடிப்பை விட ஆக்ஷ்ன் நன்கு வருகிறது. ஆக்டிங் சீன்களைக் காட்டிலும், ஆக்ஷ்ன் சீன்களில் அடித்து தூள்பரத்துகிறார் மனிதர். கலையான தமிழ்முகம், காளை போன்று ஆஜானுபாகுவான உடல்வாகு, அதற்கேற்ற உயரம் என எல்லாம் இருந்தும் திலீபனிடம் ஏதோ ஒன்று குறைகிறது. அதை அடுத்தடுத்த படங்களில் அவர் சரி செய்து கொள்வது அவருக்கும் ரசிகர்களுக்கு நலம் பயக்கும்!

நாயகி அஞ்சலி, ஏதா "எங்கேயும் எப்போதும்" வெற்றிப்படத்தில் முருகதாஸ் தன் தயாரிப்பில் நடிக்க வைத்ததற்கு நன்றி கடனாக, இந்தப்படத்தில் அவரது தம்பி திலீபன் ஜோடியாக நடிக்க சம்மதித்தது மாதிரி தெரிகிறது! வருகிறார்... போகிறார்... டயலாக் பேசுகிறார்... என்ற அளவிலேயே ஒட்டியும் ஒட்டாமலும் நடித்திருக்கும் அஞ்சலி, மற்ற படங்களைக்காட்டிலும் இந்தப்படத்தில் காஸ்டியூம் விஷயத்திலும் சரியாக கவனம் செலுத்தாமல் பட்டும்படாமல் இருந்திருப்பது ஏன் என்பது புரியாதபுதிர். பாவம் ரசிகர்கள்!

ஹீரோவின் அப்பாவாக பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவும், அம்மாவாக சரண்யாவும் வரவர போரடிக்கிறார்கள். இவர்களை இப்படி பார்த்து பார்த்து சலித்து போய்விட்டதை கோலிவுட் டைரக்டர்கள் எப்போது புரிந்து கொள்வார்களோ...?! அஞ்சலியின் அம்மாவாக ஸ்ரீரஞ்சனி, வில்லன்கள் ஜெய்பிரகாஷ், சம்பத், ஜெகன் என ஏகப்பட்ட பேர், அதில் காமெடி ஜெகன் சொபஸ்டிக் வில்லதனத்திற்கு அன்பிட்!

ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு, எம்.ஜிப்ரானின் இசை உள்ளிட்ட ப்ளஸ்பாயிண்ட்டுகள் "வத்திக்குச்சி"யை "பத்திக்கிச்சு" என பாராட்டி சொல்ல வைத்தாலும், பி.கின்ஸ்லினின் எழுத்து-இயக்கத்தில், நல்ல கதையில் கோர்வை இல்லாமல் வரும் காட்சிகள், ‌தொடர் இல்லாமல் வரும் சம்பவங்கள், தன் கையாளாக இருந்து கைமாறிப் போனவனை ரயிலில் தள்ளி தீர்த்துகட்டும் தாதா சம்பத், ஹீரோவை தீர்த்து கட்ட மட்டும் தாமதம் பண்ணும் மர்மம், காரணம் தேடும் கவனம்...உள்ளிட்ட லாஜிக் மிஸ்டேக்குகள் "வத்திக்குச்சி"யை பாதி "பத்திக்கிச்சு" என்றும் மீதி "நமத்து‌ப்போச்சு" என்றும் சொல்ல வைக்கின்றன!

மொத்தத்தில், "வத்திக்குச்சி" - ஹீரோயிஸத்துக்கு பக்க(கா) "வாத்தியக்குச்சி!"



--------------------------------------------------------------


குமுதம் சினிமா விமர்சனம்




ஏ.ஆர்.முருகதாஸின் முதல் படமான அஜித் நடித்த “தீனா’ படத்தில் வந்த பாடல் “வத்திக்குச்சி பத்திக்காதுடா’ அதையே தன் தம்பியைக் கதாநாயகனாக வைத்து தயாரிக்கும் படத்துக்குத் தலைப்பா வைத்திருக்கிறார்!

கதை கொஞ்சம் புதுசு. மூன்று தனித்தனிக் கதைகளை ராஜேஷ்குமார் நாவல் பாணியில் சொல்லி கடைசியில் முடிச்சை அவிழ்க்கிறார்கள். இயக்கம் கின்ஸ்லின்.

தான் உண்டு, தன் ஷேர் ஆட்டோ டிரைவர் வேலை உண்டு, சின்னதாய் அஞ்சலியுடன் காதல் உண்டு என்று அப்பாவியாய் இருக்கிறார் திலீபன். ஆனால் அவரைக் கொலை செய்ய 3 பேர் திட்டமிடுகிறார்கள். அவர்கள் யார்? எதற்காக இவரைக் கொலை செய்ய வேண்டும்? என்பதெல்லாம் தெரிந்த பிறகு பிரகாசமாய் எரிகிறது வத்திக்குச்சி.

ஷேர் ஆட்டோ ஓட்டுநர் வேடத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார் திலீபன். சண்டைக்காட்சிகளில் பெடலெடுக்கிறார்.

அஞ்சலி வழக்கம் போல, தன்னை காதலிக்கும் நாயகனிடம், “நீ வேணும்னா என்னைக் காதலிச்சுக்க. ஆனா நான் உன்னைக் காதலிக்கலப்பா’ என்று உசுப்பேற்றுகிறார். அவரது ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ் அலட்டல் அழகு!

கொலை செய்யப்போகும் வில்லன் தன் திட்டத்தை ரொம்ப சத்தமாக ரோட்டில் சொல்வானாம். அதை ஹீரோ கேட்பாராம். இதெல்லாம் ரொம்ப ஓவருங்கண்ணா...

ஜிப்ரானின் இசையில் “குறுகுறு கண்ணாலே’ பாடல் மட்டும் எஃப்.எம்.களின் உதவியால் ஏற்கெனவே ஹிட் அடித்திருக்கிறது.

வத்திக்குச்சி - மெதுவா பத்திக்கிச்சு!

குமுதம் ரேட்டிங் - ஓகே



----------------------------------------------------------


கல்கி சினி விமர்சனம்



* ச்சும்மா இருக்கிற வரைக்கும்தான் நான் ஈர்க்குச்சி. என்னை உரசிப் பார். அப்புறம் தெரியும் நான்தான் வத்திக்குச்சி - பிரபல ஹீரோக்கள் நடித்திருந்தால் இப்படி பஞ்ச் டயலாக் பேச ஸ்கோப் உள்ள படம் வத்திக்குச்சி.

* சம்பந்தமே இல்லாத மூன்று நபர்கள் ஒரு ஆட்டோ டிரைவரைப் போட்டுத் தள்ள நினைத்துக் காய்களை நகர்த்தும் திரைக்கதையில் இருக்க வேண்டிய அனல் இருக்கவே செய்கிறது!

* வில்லன்கள், ஹீரோ கோணத்தில் கதையை நகர்த்தியும் ஃப்ளாஷ்பேக் உத்தியில் திரைக்கதையை முடுக்கியும் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் கின்ஸ்லின்

* இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் தம்பி திலீபன்தான் ஹீரோ! ஆட்டோ ஓட்டுனராக ஓ.கே. முகத்தில் காட்டும் உணர்ச்சிகளில் நோ.கே! துள்ளத் துடிக்க நடிக்க வேண்டிய இடத்திலெல்லாம் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....

* எப்பவும் போல அஞ்சலி அசத்தல்; அரட்டை; துறுதுறு; குளுகுளு. “உன்னையெல்லாம் காதலிக்க மாட்டேன்’ என்று சொல்லும்போதே காதலிக்கத் தோன்றும் அழகு.

* ஜெகன் போடும் ப்ளான் எல்லாம் எத்தனை சினிமாவில் பார்ப்பது? குழந்தையைக் கடத்த திலீபனைக் கொல்ல நினைப்பது கொஞ்சமல்ல... நிறையவே ஓவர்...!

* உடம்பைத் தேற்றுவதும், மர்டர் விஷயங்களைப் பொது இடங்களில் கோஷமிட்டுப் பேசுவது போல பேசுவதெல்லாம் கோடம்பாக்க ஹீரோக்களான பில்டப்தானே?

* குருதேவின் ஒளிப்பதிவில் திகுதிகு நெருப்பு என்றால் ராஜசேகரின் ஆக்ஷ்ன் பயிற்சியில் அனல் பொறி.

* வில்லன்களிடம் திலீபன் தப்பித்த பிறகு திரைக்கதை ஏகப்பட்ட நொண்டியாட்டம் ஆடுவது ஏன்? உடற்பயிற்சி பில்டப் எல்லாம் கிக்லிபிக்லி கிச்சுகிச்சு!

* முன்பாதியில் ஏற்றப்பட்ட எதிர்பார்ப்பை பின்பாதியிலும் தொடர்ந்து இருந்தால் வத்திக்குச்சி ச்சும்மா சுர்ர்ர்ர்னு பத்தியிருக்கும்!

* மென்மையாகத் தாலாட்ட மட்டும்தான் ஜிப்ரானின் இசை! வன்மையாக இறங்கி அடிக்க இன்னும் இன்னும் வேணும் பாஸ்.

* வத்திக்குச்சி - வெளிச்சம் அதிகம்; சூடு கம்மி.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

வத்திக்குச்சி தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in