ப்ரின்ஸ்,Prince

ப்ரின்ஸ் - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ், சாந்தி டாக்கீஸ்
இயக்கம் - கேவி அனுதீப்
இசை - தமன்
நடிப்பு - சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ்
வெளியான தேதி - 21 அக்டோபர் 2022
நேரம் - 2 மணி நேரம் 23 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

நகைச்சுவை கலந்த விதத்தில் தனது படங்களின் கதைகளைத் தேர்வு செய்து, அதை அனைத்து ரசிகர்களுக்கும் ரசிக்கும் விதமான படமாகக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருப்பவர் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தில் கதை இல்லை என்று தெரிந்தே தான் தேர்வு செய்து நடித்திருக்கிறார்.

அதனால்தான், யாரும் அதிகம் எதிர்பார்த்து வந்துவிடக் கூடாதென, படம் வெளியாகும் இன்று காலையில் டுவிட்டரில், “இந்த பண்டிகை சீசனில் அனுதீப் ஸ்டைல் நகைச்சுவை உங்களை மகிழ வைக்கும். உங்கள் நண்பர்கள், குடும்பத்துடன், இந்த எளிதான, லேசான ஆனால், ஜாலியான படத்தை அனுபவியுங்கள்” என ரசிகர்களை முன் கூட்டியே தயார்படுத்தி, படத்தின் எல்லா ரிசல்ட்டுக்கும் இயக்குனர்தான் காரணம் எனப் பதிவிட்டுள்ளார்.

பிரிட்டிஷ்காரர்களால் சுதந்திரப் போராட்ட காலத்தில் கொல்லப்பட்ட தனது தாத்தாவின் பெருமையைப் பேசிக் கொண்டிருப்பவர் சத்யராஜ். தெரியாத விஷயங்களையும் தெரிந்தது போல காட்டிக் கொள்பவர். அவருடைய மகன் சிவகார்த்திகேயன், பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறார். அவரது பள்ளியில் புதிதாக ஆசிரியையாகச் சேரும் பிரிட்டிஷ் பெண்ணான மரியாவைக் காதலிக்கிறார். தாத்தாவைக் கொன்ற பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த பெண் மரியா தனது மகன் சிவாவைக் காதலிப்பதை எதிர்க்கிறார். மரியாவின் அப்பாவும் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். அப்பாக்கள் எதிர்ப்பை மீறி காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தியேட்டரில் பார்ப்பதால் இதைப் படம் என்று நினைத்துக் கொண்டு பார்க்க வேண்டும். மற்றபடி டிவிக்களில், யூடியூப்களில் வரும் துண்டு துண்டு நகைச்சுவைக் காட்சிகளைக் கோர்த்து ஒரு படத்தைப் பார்க்கும் உணர்வே நமக்கு ஏற்படும். ஆனாலும், சில பல காட்சிகளில் சிரிக்க வைக்கிறார் இயக்குனர் அனுதீப். அதற்கு தமிழ் வசனங்களை எழுதிய பிரபாகரன், ஆனந்த் நாராயணன் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.

தனது கதாபாத்திரத்திற்காக பெரிய மெனக்கெடல் எதுவும் செய்யவில்லை சிவகார்த்திகேயன். அப்படியே ஜாலியாக வந்து நடித்து விட்டுப் போயிருக்கிறார். காதலிப்பது, நடனமாடுவது என வழக்கமாகச் செய்வதை அன்பு கதாபாத்திரத்தில் அப்படியே செய்திருக்கிறார்.

பிரிட்டிஷ் பெண்ணாக மரியா ரியபோஷப்கா. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா, அவருக்கும் அதிகம் தெரியாத ஆங்கிலத்தில்தான் தமிழ் வசனங்களை எழுதி வைத்து பேசியிருப்பார். எதிரில் இருப்பவர்கள் தமிழில் பேசி நடிக்க அதைப் புரிந்தது போல காட்டிக் கொண்டு எக்ஸ்பிரஷன் கொடுப்பதெல்லாம் சாதாரண விஷயமில்லை. சின்னச் சின்ன முகபவாங்களில் கூட தேர்ந்த நடிகை போல நடித்திருக்கிறார். இவருக்கும் சிவாவுக்குமான காதலில் ஒரு நெருக்கம், ஒரு பீலிங் எதுவுமில்லை. அவர்கள் சேர்ந்தால் என்ன, சேரவில்லை என்றால் என்ன என்றுதான் படம் பார்க்கும் நமக்கும் தோன்றுகிறது.

சிவாவின் அப்பாவாக சத்யராஜ். அரசுப் பணியில் இருந்து ஒய்வு பெற்றவர். ஊரார் தன்னைப் பற்றி புகழ்ந்து பேச வேண்டும் என்று நினைப்பவர். பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து தனது தாத்தா போராடி குண்டடி பட்டு உயிரிழந்தவர் என்பதை அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறார். நடிப்பில் வழக்கம் போல அசத்தினாலும் அவரது முகத்தில் அவ்வளவு களைப்பு தெரிகிறது.

சிவாவின் நண்பர்களாக சதீஷ், ராகுல், பாரத் நடித்திருக்கிறார்கள். கதாநாயகனுக்கு நண்பர்கள் இருக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். யாரும் பெரிதாக சிரிக்க வைக்கவில்லை. சில காட்சிகளில் வந்து போகிறார்கள். பிரேம்ஜி தான் படத்தின் குட்டி வில்லன். ஊரில் ஏமாற்றித் திரியும் ஒரு கதாபாத்திரம். ஒரே ஒரு காட்சியில் சூரி வந்து போகிறார். ஏதோ செய்யப் போகிறார் என்று பார்த்தால், அட போங்கப்பா என சொல்ல வைக்கிறார்.

தமன் இசையில், “ஜெஸிகா, பிம்பிலிக்கி பிலாப்பி” சிவா ரசிகர்களுக்கான பாடல். பின்னணி இசைக்கெல்லாம் படத்தில் வேலையில்லை. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவா என்பது ஆச்சரியமாக உள்ளது. பல காட்சிகள் 'ப்ளீச்' ஆனது போலவே உள்ளது.

படத்திற்கு பெரிய செலவில்லை, சில பல கோடிகளிலேயே சிம்பிளாக முடித்துவிட்டார்கள். நான்கு காட்சிகளில் நகைச்சுவை கொடுத்து சிரிக்க வைத்தால் போதும், ரசிகர்கள் திருப்தியடைந்துவிடுவார்கள் என சிவகார்த்திகேயன் நினைத்திருந்தால் அப்படிப்பட்ட எண்ணத்தை மாற்றிக் கொள்வது நல்லது.

தேசபக்தி பேசுபவர்களைக் கிண்டலடிக்கும் வசனங்கள், காட்சிகள் எதற்கு ?.

ப்ரின்ஸ் - புவர் ப்ரின்ஸ்

 

ப்ரின்ஸ் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ப்ரின்ஸ்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓