தீதும் நன்றும்
விமர்சனம்
தயாரிப்பு - என்எச் ஹரி சில்வர் ஸ்க்ரீன்ஸ்
இயக்கம் - ராசு ரஞ்சித்
இசை - சத்யா
நடிப்பு - ராசு ரஞ்சித், ஈசன், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ்
வெளியான தேதி - 12 மார்ச் 2021
நேரம் - 2 மணி நேரம் 23 நிமிடம்
ரேட்டிங் - 3/5
ரவுடியிசப் படங்கள் தமிழ் சினிமாவில் அடிக்கடி வெளிவரும். எளிதில் கையாளக் கூடிய ஒரு ஆக்ஷன் படமாக அந்தப் படங்கள் அமைந்துவிடும். அனுபவ இயக்குனர்கள் முதல் அறிமுக இயக்குனர்கள் வரை பலரும் அப்படியானப் படங்களை விதவிதமாகக் கொடுத்துள்ளார்கள். அதிலும் குறிப்பாக வட சென்னையை மையப்படுத்தி பல ரவுடியிசப் படங்கள் ஒவ்வொரு வருடமும் தவறாமல் வருவதுண்டு.
அந்த வரிசையில் இந்த வருடத்தில் வந்துள்ள முதல் வட சென்னை ரவுடியிசப்படம் தீதும் நன்றும். அறிமுக இயக்குனர் ராசு ரஞ்சித் கொஞ்சம் ஆச்சரியப்படும் விதத்தில் ஒரு யதார்த்தமான படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார். அவரே நாயகர்களில் ஒருவராகவும் நடித்துள்ளார். இரண்டிலுமே அவருக்கு பாஸ் மார்க் கிடைத்துள்ளது.
ராசு ரஞ்சித், ஈசன், சந்தீப் ராஜ் மூவரும் நண்பர்கள். இரவு நேரங்களில் பணப்புழக்கம் இருக்கும் இடங்களாகப் பார்த்து முகமூடி அணிந்து கொள்ளை அடிப்பவர்கள். ஈசனுக்கும் அபர்ணா பாலமுரணிக்கும் காதல் கலப்புத் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப் பிறகு கணவன் ஈசன் கொள்ளை அடிக்கும் வேலைக்குச் செல்வது அபர்ணாவுக்குப் பிடிக்கவில்லை. அப்படி ஒரு நாள் அவரது பேச்சை மீறி ஈசன் மற்றும் ராசு ரஞ்சித், சந்தீப் ராஜ் ஆகியோர் டாஸ்மாக் கடை ஒன்றில் கொள்ளை அடிக்கச் செல்லும் போது மாட்டிக் கொள்கிறார்கள். சந்தீப் ராஜ் மற்றம் தப்பித்துவிடுகிறார். ராசு ரஞ்சித், ஈசன் குண்டர் சட்டத்தில் ஒரு வருட சிறைத்தண்டனையைப் பெறுகிறார்கள்.
சிறையிலிருந்து வந்தபின் மீண்டும் வரும் சந்தீப் ராஜ், பெரிதாக ஒரே ஒரு வேலையை மட்டும் செய்யலாம் என வற்புறுத்துகிறார். அவர் வைத்த பொறியில் ஈசன் கொல்லப்பட ராசு ரஞ்சித் தப்பிக்கிறார். நண்பனின் கொலைக்குக் காரணமான சந்தீப்பை பழி வாங்கத் துடிக்கிறார் ராசு ரஞ்சித். அதைச் செய்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தின் யதார்த்தத்திற்கு முக்கியக் காரணமாக அதன் கதைக்களம் அமைந்துள்ளது. ஏற்கெனவே பல படங்களில் பார்த்த இடங்கள்தான் என்றாலும் படத்தில் நடித்திருக்கும் அனைவருமே அவர்களது யதார்த்த நடிப்பால் அதை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர்கள் கூட சினிமாத்தனமான முகமில்லாமல் அந்தப் பகுதி மக்களில் ஒருவராகவே தெரிகிறார்கள். அதற்குக் காரணமான இயக்குனரையும் மற்றவர்களையும் இந்த இடத்தில் பாராட்டாமல் இருக்க முடியாது.
ராசு ரஞ்சித், ஈசன் இருவரும்தான் படத்தின் கதாநாயகர்கள். இருவருமே எந்தக் காட்சியில் நடித்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லவே முடியாது. அப்படியே சிவா, தாஸ் என அவரவர் கதாபாத்திரங்களில் தங்களை புகுத்திக் கொண்டுள்ளார்கள். இப்படியான இயல்பான நடிகர்கள் தமிழ் சினிமாவிற்குள் வருவது ஆரோக்கியமான ஒன்று.
அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் படத்தின் இரண்டு கதாநாயகிகள். இருவருமே மலையாள நடிகைகள், ஆனால், வட சென்னையில் பிறந்து வளர்ந்தவர்களைப் போல அச்சு அசுலாக அப்படியே தங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அபர்ணாவை விட லிஜோமோல் கொஞ்சம் கூடுதலாக கவனம் ஈர்க்கிறார்கள். அதற்குக் காரணம், அவரது கண்கள். அவர் நடிக்க வருவதை அந்தக் கண்களே முந்திக் கொண்டு காட்டிவிடுகின்றன, குறிப்பாக காதல் காட்சிகளில். இரண்டு பேரும் இந்தப் படத்தின் பிரமோஷனுக்கு வராமல் தவிர்த்ததற்கு பிற்காலத்தில் நிச்சயம் வருத்தப்படுவார்கள்.
ராசு ரஞ்சித் காதலி லிஜோவைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம் கூடவே செல்லும் நண்பனாக இன்பா. கிடைக்கும் சந்தர்ப்பங்களில் காமெடி கவுன்ட்டர் கொடுத்து சிரிக்க வைக்கிறார். முயன்றால் நிறைய வாய்ப்புகளைப் பெறலாம். வில்லன்களாக காலயன் சத்யா, கருணாகரன். லோக்கல் தாதாக்களாக நிறைவாகவே நடித்திருக்கிறார்கள்.
சத்யாவின் இசையில் பின்னணி இசை ரசிக்க வைத்துள்ளது. ஒளிப்பதிவாளரும், கலை இயக்குனரும் நம்மையும் வட சென்னை பகுதிக்குள் ஒருவராக நுழைந்து விட்ட உணர்வை ஏற்படுத்தியுள்ளார்கள்.
வழக்கமான மோதல், அடிதடி, பழிக்குப்பழி என்ற வட்டத்துக்குள்ளேயே படம் நகர்வது மட்டும்தான் குறையாகத் தெரிகிறது. புதிதாக இதுவரை சொல்லப்படாத ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்லியிருந்தாலும் இந்தப் படத்தை மிக நன்று எனச் சொல்ல வைத்திருக்கும்.
தீதும் நன்றும் - நன்று
தீதும் நன்றும் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
தீதும் நன்றும்
- நடிகை
- இயக்குனர்