கமலி From நடுக்காவேரி,Kamali from Naducauvery

கமலி From நடுக்காவேரி - பட காட்சிகள் ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ஆனந்தி, ரோகித், பிரதாப் போத்தன்
தயாரிப்பு - அப்புண்டு ஸ்டுடியோஸ்
இயக்கம் - ராஜசேகர் துரைசாமி
இசை - தீனதயாளன்
வெளியான தேதி - 19 பிப்ரவரி 2021
நேரம் - 2 மணி நேரம் 37 நிமிடம்
ரேட்டிங் - 3/5

தமிழ் சினிமாவில் மக்களுக்குத் தேவையான சில நல்ல கருத்துள்ள படங்கள் அபூர்வமாகத்தான் வெளிவரும். அந்த விதத்தில் வந்துள்ள ஒரு படம் தான் இது.

மாநகரங்கள், நகரங்களில் பிறந்து வளர்ந்து படிக்கும் மாணவ, மாணவிகளுக்குக் கிடைக்கும் வசதி, வாய்ப்பு சிறு ஊர்களில், கிராமங்களில் படிக்கும் மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. அதை இந்தப் படம் முன்னெடுக்கிறது. ஆனால், அதை மேலோட்டமாகச் சொல்லி நழுவுவது போலவே திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் ராஜசேகர் துரைசாமி. அதை இன்னும் அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் சொல்லியிருந்தால் தமிழ் சினிமாவில் காலம் காலமாக பேசப்படும் படங்களில் ஒன்றாக இந்தப் படம் அமைந்திருக்கும்.

நடுக்காவேரி என்ற சிறிய ஊரில் பள்ளியில் படித்துக் கொண்டிருப்பவர் ஆனந்தி. + 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவரது பேட்டியை டிவியில் பார்த்ததும் அவர் மீது காதல் கொள்கிறார். எப்படியாவது தானும் + 2 முடித்தபின் அந்த மாணவர் படிக்கும் ஐஐடி-க்குச் சென்று படிக்க ஆசைப்படுகிறார். அவரது ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு சிறு ஊரில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு வசதி வாய்ப்புகள் இருக்காது. சரியான ஆலோசனை கிடைக்காது. லைப்ரரி, இன்டர்நெட் போன்ற வசதிகள் இருக்காது. பெற்றோர்கள் சீக்கிரமே திருமணம் செய்து வைக்க வேண்டுமென இருப்பார்கள். இப்படி பல தடைகள் உள்ளன. ஆனால், படத்தில் அனைத்தையும் சொல்ல முற்படவில்லை இயக்குனர். அந்த மாணவ, மாணவிகளுக்குக் கிடைக்காத வசதி வாய்ப்புகளைப் பற்றி கொஞ்சம் விரிவாகச் சொல்லும் வாய்ப்புகள் இருந்தும் அவற்றை அவர் கண்டுகொள்ளவில்லை என்பது ஏன் எனத் தெரியவில்லை. இருந்தாலும் பார்ப்பதற்கு நெருடல் இல்லாத, உறுத்தல் இல்லாத விதத்திலும், சில பல யதார்த்தமான மனதைத் தொடும் கதாபாத்திரங்களையும் வைத்து அந்தக் குறைகளை பெரிதாகப் பேச விடாமல் செய்திருக்கிறார்.

படத்தின் நாயகி பற்றி சொல்வதற்கு முன்பாக படத்தில் உள்ள இரண்டு நல்ல ஜீவன்களைப் பற்றி முதலில் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். ஒருவர் நாயகி கதாபாத்திரமான கமலியின் தோழி கதாபாத்திரம், மற்றொருவர் கமலிக்கு ஐஐடி-யில் சேருவதற்குப் பயிற்சி கொடுக்கும் ஓய்வு பெற்ற பேராசிரியர் கதாபாத்திரம். தோழியாக ஸ்ரீஜா, பேராசிரியராக பிரதாப் போத்தன். நமக்காக உதவும் இரண்டு நல்ல ஜீவன்கள் இப்படி நம் வாழ்க்கையில் அமைந்தால் போதும். வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம். இருவருமே அவரவர் கதாபாத்திரங்களில் யதார்த்தமாக நடித்து நம்மைக் கவர்கிறார்கள்.

நம் மண் சார்ந்த எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் அப்படியே தன்னைப் பொருத்திக் கொள்கிறார் ஆனந்தி. இப்படத்தில் கமலி கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளார். ரோகித் மீது ஏற்படும் ஒரு தலைக்காதல், ஐஐடி நுழைவுத் தேர்வுக்காக விடா முயற்சியுடன் படிப்பது, ஐஐடி சென்று சேர்ந்த பின் சக அறைத் தோழியிடம் அவமானப்படுவது, கல்லூரியில் அவமானப்படுவது, பின்னர் ரோகித்திடமும் அவமானப்படுவது என விதவிதமான உணர்ச்சிகளைக் காட்டும் கதாபாத்திரம். இந்த ஆண்டுக்கான விருதுப் பட்டியலில் இந்த கமலியையும் கண்டிப்பாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

படத்தின் நாயகன் ரோகித்திற்கு அதிக வேலையில்லை. ஓரிரு காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார். கிளைமாக்ஸ் குவிஸ் காட்சியில் மட்டும் நடிக்க முயற்சித்திருக்கிறார்.

ஆனந்தியின் அப்பா அழகம் பெருமாள், அம்மா ரேகா சுரேஷ், ஆனந்தியின் பாட்டி, அண்ணன், ஆசிரியர் இமான் அண்ணாச்சி என அனைவருமே படத்தில் யதார்த்தமாய் தெரிகிறார்கள்.

ஜெகதீசன் லோகய்யன் ஒளிப்பதிவு படத்தை பீல் குட் மூவி என சொல்ல வைக்கிறது. தீனதயாளன் இசையமைப்பில் பாடல்கள் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம். பின்னணி இசை பரவாயில்லை. படம் மிக மெதுவாக நகர்வது சோர்வைத் தருகிறது. எடிட்டரிடம் எடுத்துச் சொல்லி விறுவிறுப்பைக் கூட்டியிருக்கலாம் இயக்குனர்.

மோடிவேஷன் படமாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் ஒரு இன்ஸ்பிரேஷன் படமாகவே இருப்பதுதான் படத்தின் மைனஸ் பாயின்ட். காதலையெல்லாம் படத்தில் சேர்த்திருக்கவே தேவையில்லை. சில குறியீடுகளை வேண்டுமென்றே வைத்திருக்கிறார் இயக்குனர். அழுத்தமாகச் சொல்ல வேண்டிய சில விஷயங்களைத் தவிர்த்திருப்பது மிகவும் ஏமாற்றம்.

கமலி from நடுக்காவேரி - பாடம்

 

பட குழுவினர்

கமலி From நடுக்காவேரி

  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓