நானும் சிங்கிள்தான்,Naanum single thaan

நானும் சிங்கிள்தான் - பட காட்சிகள் ↓

Advertisement
1.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - த்ரி இஸ் எ கம்பெனி புரொடக்ஷன்
இயக்கம் - கோபி
இசை - ஹிதேஷ் மஞ்சுநாத்
நடிப்பு - தினேஷ், தீப்தி
வெளியான தேதி - 12 பிப்ரவரி 2021
நேரம் - 1 மணி நேரம் 57 நிமிடம்
ரேட்டிங் - 1.5/5

தமிழ் சினிமாவில் இரட்டை அர்த்த வசனங்களுடன் படம் எடுத்தால் இளைஞர்களைக் கவர்ந்து படத்தை வெற்றி பெற வைத்துவிடலாம் என சில இயக்குனர்கள் கொடுத்த தவறான முன்னுதாரணத்தால் வெளிவந்துள்ள மற்றுமொரு படம் இது.

பல இளம் இயக்குனர்கள் தங்களது முதல் படங்களில் தடம் பதிக்க வேண்டும் என தரமான படங்களைக் கொடுக்க முயற்சித்து வருகிறார்கள். ஆனால், சில இயக்குனர்கள் தவறான படங்களைக் கொடுத்து தடம் மாறிவிடுகிறார்கள். இந்தப் படத்தின் அறிமுக இயக்குனர் கோபி இதில் இரண்டாவது வகையில் சேர்ந்திருக்கிறார்.

90ஸ் கிட்ஸ் என சமூக வலைத்தளங்களில் அடிக்கடி 1990களில் பிறந்தவர்கள் எதையாவது சுவாரசியமாக பதிவிடுவது வழக்கம். அதையே தன்னுடைய முதல் படத்திற்கான மையக்கருவாக வைத்துக் கொண்டுள்ளார் இயக்குனர் கோபி.

டாட்டூ போடும் கடை நடத்தி வரும் தினேஷ், திருமண ஆசையில் உள்ளவர். நயன்தாரா போன்று அழகான ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர். அவருக்கு தீப்தியைப் பார்த்ததும் காதல் வருகிறது. அவருடன் நட்பாகப் பழக ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிகிறார்கள். தீப்தி லண்டன் சென்று விடுகிறார். அவரைத் தேடி தனது நண்பர்களுடன் லண்டன் செல்கிறார் தினேஷ். அங்கு லவ் குருவாக இருக்கும் மொட்ட ராஜேந்திரன் உதவியை நாடுகிறார்கள். மீண்டும் தீப்திக்கு காதல் தொந்தரவு கொடுக்க ஆரம்பிக்கிறார் தினேஷ். அதன் பின் இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இத்தனை படங்களில் நடித்த பிறகும் தட்டுத் தடுமாறி தான் நடிக்கிறார் தினேஷ். வசனங்களை தெளிவாக உச்சரிப்பதை இன்னும் அவர் கற்றுக் கொள்ளவில்லை. இதில் அடிக்கடி ஆங்கிலம் வேறு பேசுகிறார் இந்தப் படத்தில். தனக்குப் பொருத்தமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்தால் அவருக்கு நல்லது.

அறிமுக கதாநாயகியாக தீப்தி. ஓரளவிற்கு நடிக்க முயற்சித்திருக்கிறார். தன்னை அடிக்கடி தொந்தரவு செய்யும் தினேஷிடமிருந்து தப்பிக்க கடைசியாக அவர் எடுக்கும் முடிவு அதிர்ச்சிகரமானது. இப்படியெல்லாம் வித்தியாசமாகக் கொடுத்தால் ரசிகர்கள் ரசிப்பார்கள் என இயக்குனர் அபத்தமான காட்சியை வைத்திருக்கிறார்.

தினேஷின் நண்பர்கள் என மூவர் வருகிறார்கள். பேசிப் பேசியே நம் நிம்மதியைக் குலைக்கிறார்கள். ஒரு காட்சியில் கூட சிரிப்பு வரவில்லை. படத்தில் இவர்கள் பேசும் பல இரட்டை அர்த்த வசனங்களை சென்சார் மொத்தமாகவே கட் செய்திருக்கலாம். சில காட்சிகள் வரம்பு மீறல். அந்தக் காட்சிகளை அனுமதித்ததே தவறு.

லண்டனில் பல காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். ஆனால், அது படத்திற்கு எந்த விதத்திலும் உதவவில்லை. இசை, ஒளிப்பதிவு எல்லாமே மிகச் சுமார் தான்.

ஏதோ, ஆரம்பித்து, எங்கெங்கோ சுற்றி, கடைசியில் எப்படியோ முடிகிறது படம். இலக்கில்லாமல் அலைகிறது திரைக்கதை. பல காட்சிகள் நாடகத்தனமாக உள்ளன.

நானும் சிங்கிள்தான் - டபுள் மீனிங் தான்...

 

நானும் சிங்கிள்தான் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

நானும் சிங்கிள்தான்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓