நடிகர்கள் : துல்கர் சல்மான், சுரேஷ்கோபி, ஷோபனா, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர்
இயக்கம் : அனூப் சத்யன்
மணமகன் தேவை (வரனே ஆவசியமுண்டு) என்கிற படத்தின் டைட்டில் தான் படத்தின் மொத்த கதையும்.. சென்னை தான் கதைக்களம்
கணவனை பிரிந்த ஷோபனா, மகள் கல்யாணியுடன் அபார்ட்மெண்டில் வசித்து வருகிறார். அதே குடியிருப்பில் இன்னொரு பிளாட்டில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சுரேஷ்கோபி தனி ஒரு ஆளாக வாழ்கிறார். இந்த நிலையில் தனது பாட்டி மற்றும் தம்பியுடன் அந்த அபார்ட்மெண்டுக்கு குடி வருகிறார் துல்கர் சல்மான். நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் செய்வேன் என உறுதியாக இருக்கும் கல்யாணிக்கு, தீவிரமாக மேட்ரிமோனியல் மூலம் மாப்பிள்ளை பார்க்கிறார் ஷோபனா. அதேநேரம் சுரேஷ்கோபி மீது ஷோபனாவுக்கு ஒரு ஈர்ப்பு உருவாகிறது. பல வரன்கள் தட்டிப்போன நிலையில் ஒரு கட்டத்தில் ஊர்வசியின் மகனை பிடித்துப்போய் கல்யாணிக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இந்த நிலையில் மணமகன் சில காரணங்களால் கல்யாணியை திருமணம் செய்து கொள்ள முடியாது என ஒதுக்குகிறார்..
இன்னொரு பக்கம் தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணை விரும்புகிறார் துல்கர் சல்மான். அவளோ, அமெரிக்க வேலைக்காக துல்கரை விட்டு விலகுகிறாள்.. இது ஒரு பக்கம் இருக்க சுரேஷ்கோபி - ஷோபனா காதலால் தான் தனது திருமணம் தடைபட்டது என நினைத்து தாய் மீது கோபம் கொள்கிறார் கல்யாணி. ஷோபனாவுடனான கல்யாணியின் பிணக்கு முடிவுக்கு வந்ததா..? சுரேஷ்கோபியுடனான தனது அம்மாவின் காதலை கல்யாணி அங்கீகரித்தாரா..? கல்யாணிக்கு ஏற்ற வரன் தேடி வந்ததா..? துல்கரின் காதல் என்ன ஆனது..? என்பது போன்ற கேள்விகளுக்கு கடைசி கால் மணி நேரத்தில் விடை சொல்கிறார்கள்.
குடும்பப்பாங்கான கதை.. ஆனால் இவர் தான் ஹீரோ, ஹீரோயின் என்று இல்லாமல் கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி அனைவரையும் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார் அறிமுக இயக்குனர் அனூப் சத்யன். அந்தவகையில் துல்கர் சல்மானை விட சுரேஷ் கோபி தான் ஹீரோ போன்று அதிக காட்சிகளில் வருகிறார். அவருக்கும் ஷோபனாவுக்குமான காதல் கெமிஸ்ட்ரியை பல வருடங்களுக்கு முன்பே நான் பார்த்திருந்தாலும் இந்தப் படத்தில் இவ்வளவு வருடங்கள் கழித்து பார்க்கும் போது புதிதாக இருக்கிறது.
பக்கத்து வீட்டு பையன் கதாபாத்திரத்திற்கு துல்கர் சல்மான் என்றால் கேட்கவா வேண்டும்.. செமையா செட்டாகியிருக்கிறார்.. கல்யாணி பிரியதர்ஷன் கோபம், காமெடி, சீரியஸ் என கலந்துகட்டி உணர்வுகளை வெளிப்படுத்தினாலும் அவர் முகத்தில் நிரந்தரமாக ஏதோ ஒரு சீரியஸ்னஸ் இருப்பது பல காட்சிகளில் தெரிகிறது. மணமகனின் தாயாக வரும் ஊர்வசி, வருங்கால மருமகளுக்கு தைலம் தேய்த்துவிட்டு அவளை கட்டி அணைத்தபடி படுத்திருக்கும் ஒரு காட்சியில் இப்படி ஒரு மாமியார் கிடைக்க மாட்டாரா என ஏங்க வைத்து விடுகிறார். கேபிஎசி லலிதா, பக்கத்துவீட்டு மீரா கிருஷ்ணன் மற்றும் உப கதாபாத்திரங்களில் நடித்துள்ள அனைவருமே சரியான தேர்வு என்று நிரூபிக்கிறார்கள்.
பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடுவின் மகனான அனூப் சத்யன் தந்தையை போல தானும் குடும்பப்பாங்கான கதையை கையில் எடுத்திருக்கிறார். அதேசமயம் ஆரம்ப காட்சிகளில் படம் டேக் ஆப் ஆக ரொம்பவே தடுமாறுகிறது. அதுமட்டுமல்ல துல்கர் நடிக்கும் பல படங்களில் அவர் எல்லோருக்கும் உதவி செய்வது போன்ற டெம்ப்ளேட் காட்சிகள் பெரும்பாலும் இருக்கும். இந்தப்படத்திலும் அது தொடர்கிறது.. மற்றபடி ஜாலியாக பார்த்து ரசித்து விட்டு வர, இது எந்த வகையிலும் குறை சொல்ல முடியாத ஒரு படம்தான்
மொத்தத்தில் மணமகன் தேவை ; பார்த்தால் பிடிக்கும்