3.5

விமர்சனம்

Advertisement

சூரரைப் போற்று - விமர்சனம்

நடிப்பு - சூர்யா, அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், ஊர்வசி
தயாரிப்பு - 2டி என்டர்டெயின்மென்ட், சிக்யா என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - சுதா கோங்கரா
இசை - ஜி.வி.பிரகாஷ்குமார்
வெளியான தேதி - 12 நவம்பர் 2020
நேரம் - 2 மணி நேரம் 29 நிமிடம்
ரேட்டிங் - 3.5/5

ஓடிடி தளங்களில் இதுவரையில் வெளியான நேரடி புதுப் படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்தவேயில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. அந்தக் குறையை இந்தப் படம் போக்கியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் 'பயோபிக்' படங்கள் வருவது மிகவும் அரிது. அந்தக் குறையையும் இந்தப் படம் நிவர்த்தி செய்திருக்கிறது. இந்திய பயணிகள் விமான சேவையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் இது. அதை உணர்வுபூர்வமாகவும், நல்லதொரு தயாரிப்புத் தரத்துடனும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுதா கோங்கரா.

வாழ்க்கை வரலாற்றுக் கதைகளை திரைப்படமாக மாற்றும் போது அதை ரசிகர்களும் ரசிக்கும் விதத்தில் கொடுக்க வேண்டும் என்பது பெரும் சவாலாக இருக்கும். அதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் இரண்டரை மணி நேரம் போவது தெரியாமல் தந்திருக்கிறார் சுதா.

இந்திய விமானப் படையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று வந்தவர் சூர்யா. சாதாரண ஏழை மக்களும் விமானத்தில் பயணிக்க, குறைந்த விலை பயணிகள் விமான சேவையைத் தர வேண்டும் என நினைக்கிறார். அதற்காக ஒரு விமான நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார். தன்னைப் போலவே சுய முயற்சியில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் அபர்ணா பாலமுரளியைத் திருமணம் செய்து கொள்கிறார். விமான நிறுவனம் ஆரம்பிக்கும் முயற்சியில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுகிறார் சூர்யா. ஆனால், அவரது முயற்சியை முன்னணி தனியார் விமான சேவை நிறுவன அதிபரான பரேஷ் ராவல் தன் பண பலத்தாலும், அதிகார பலத்தாலும் தடுக்கிறார். அதையும் மீறி தன் முயற்சியில் சூர்யா வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் 'சூரரைப் போற்று'.

படத்தின் கதைக்குப் பொருத்தமான தலைப்பு, பொருத்தமான நடிகர்கள், இயல்பான கதைக்களம் என ஆரம்பத்திலேயே ஒரு படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வு ஏற்படாமல் நெடுமாறன் ராஜாங்கம் என்ற துடிப்பான இளைஞனின் வாழ்க்கைப் போராட்டத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வே ஏற்படுகிறது.

நெடுமாறன் ராஜாங்கம் கதாபாத்திரத்தில் சூர்யாவின் நடிப்பு வேறொரு தளத்தில் பரிணமளிக்கிறது. இந்த அளவிற்கு உணர்ச்சி பொங்க நடித்திருக்கும் சூர்யாவின் கதாபாத்திரத்தில் வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மாறன் கதாபாத்திரத்தில் தன்னை அப்படியே புகுத்திக் கொண்டுள்ளார். தன்னால் செய்து முடிக்க முடியும் என்ற கர்வம், எதையும் எதிர்த்து நிற்கும் துணிச்சல், எந்த சந்தர்ப்பத்திலும் பின்வாங்காத விடாமுயற்சி என அவரது கண்கள் முதல் கால்கள் வரை மாறன் கதாபாத்திரம் நடித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். சூர்யாவின் திரையுலகப் பயணத்ததில் இந்த 'சூரரைப் போற்று' இன்னும் பல வருடத்திற்குப் போற்றக் கூடிய ஒரு படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

அபர்ணா பாலமுரளியை படத்தின் நாயகி என்று சொல்வதை விட கதையின் நாயகி என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்க்கையில் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் அபர்ணா கதாபாத்திரம் போன்ற மனைவி கிடைத்தால் எந்த ஒரு சூழ்நிலையிலும் சிறிதும் பின்னடைவை சந்திக்க மாட்டார்கள். மதுரைத் தமிழ் பேசிக் கொண்டு தன் கதாபாத்திரத்தை மற்றவர்களும் பேச வைத்திருக்கிறார். சூர்யாவின் நடிப்புக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார்.

படத்தின் வில்லன் என்று சொல்வதைவிட எவனையும் வளரவிடக் கூடாதென நினைக்கும் கார்ப்பரேட் முதலாளி கதாபாத்திரத்தில் பரேஷ் ராவல். பணபலமும், அதிகார பலமும் உள்ள ஒருவர் நினைத்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கு இந்தக் கதாபாத்திரம் பெரும் உதாரணம். விமானப்படையில் சூர்யாவின் மேலதிகாரியாக மோகன் பாபு. இவருடைய கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்றாலும் முக்கியமான சந்தர்ப்பத்தில் கை கொடுக்கும் ஒரு கதாபாத்திரமாக அமைந்துள்ளது.

சூர்யாவின் ஊர் நண்பராக காளி வெங்கட், சக விமானப்படை நண்பர்களாக விவேக் பிரசன்னா, கிருஷ்ணகுமார், சூர்யாவின் அம்மாவாக ஊர்வசி, அபர்ணவின் சித்தப்பாவாக கருணாஸ் என மற்ற கதாபாத்திரங்களுக்கும் படத்தில் முக்கியத்துவம் உண்டு. அவரவர் கதாபாத்திரத்தில் தங்களின் நடிப்பு இயல்பாக பதிவு செய்துள்ளார்கள்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் பொருத்தமான இடங்களில் பொருத்தமான பாடல்கள். பின்னணி இசையில் படத்திற்கு உண்டான கூடுதல் நெகிழ்ச்சியை தன் இசை மூலம் பதிவு செய்திருக்கிறார். நிகேத் பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவும், சதீஷ் சூர்யாவின் படத் தொகுப்பும் படத்தின் தரத்திற்கு முக்கியமான காரணங்கள்.

படம் ஆரம்பமான காட்சியிலிருந்து கடைசி கிளைமாக்ஸ் வரை சீரியஸ் ஆக மட்டுமே நகர்கிறது. ஆரம்பத்தில் மட்டும் சூர்யா-அபர்ணாவின் ஓரிரு காதல் காட்சிகள் மட்டுமே கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக உள்ளது. சினிமாவுக்குரிய பெரிய திருப்பங்கள் என்று எதுவும் கிடையாது. பரேஷ் ராவலுடன் மட்டுமே சூர்யா போட்டி போடுவதாக காட்சிகள் உள்ளன. மற்ற தடங்கல்களையும் கொஞ்சம் காட்டியிருக்கலாம். அரசியல் இடர்ப்பாடுகள் என எதுவும் படத்தில் இல்லை.

சூரரைப் போற்று - விருது கொடுத்து போற்றலாம்...!

 

பட குழுவினர்

சூரரைப்போற்று

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

சூர்யா

நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா. வஸந்த் இயக்கிய நேருக்கு நேர் படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை துவக்கிய சூர்யா, தனது நடிப்பாலும், ஸ்டைலாலும் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்த போது ஜோதிகாவுடன் ஏற்பட்ட நட்பு, பின்னர் காதலாக மாறியது. 2006ம் ஆண்டு அவரை திருமணமும் செய்து கொண்டார். அவருக்கு தியா, தேவ் என்ற குழந்தைகள் உள்ளனர்.

மேலும் விமர்சனம் ↓