2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - நெல்சன் திலீப்குமார்
இசை - அனிருத்
நடிப்பு - சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன் மற்றும் பலர்
வெளியான தேதி - 9 அக்டோபர் 2021
நேரம் - 2 மணி 28 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

ஆள் கடத்தல் எனறால் அந்தக் கால சினிமா என்று சொல்லி விடுவார்கள். அதையே, ஆங்கிலத்தில் ஹியூமன் டிராபிக்கிங் என்று சொல்லிப் பாருங்கள், அட ஹாலிவுட் கதையா எனக் கேட்பார்கள்.

தமிழ் சினிமாவில் வந்துள்ள மற்றுமொரு ஆள் கடத்தல் கதைதான் இந்த டாக்டர். படத்தின் கதாநாயகன் ஒரு டாக்டர். அதனால்தான் படத்தின் பெயரும் டாக்டர். ஆனால், டாக்டர் என்பதால் படத்தின் ஹீரோ, எந்த விதமான ஹீரோயிசத்தையும் செய்யவில்லை என்பதும் உண்மை.

இயக்குனர் நெல்சன் அவருடைய முதல் படத்தில் போதைப் பொருள் கடத்தல் எனக் கதையமைத்திருந்தார். இந்த இரண்டாவது படத்தில் பெண் குழந்தைகள் கடத்தல் எனக் கதை எழுதியிருக்கிறார். அடுத்து விஜய் நடிக்க அவர் இயக்கும் பீஸ்ட் படத்திலும் ஏதோ ஒரு கடத்தலைத்தான் கதையாக வைத்திருப்பார் போலிருக்கிறது.

மிலிட்டரியில் டாக்டராக இருக்கும் சிவகார்த்திகேயனுடன் நிச்சயமான திருமணத்தை வேண்டாம் என்கிறார் படத்தின் கதாநாயகி பிரியங்கா அருள்மோகன். இவரது அண்ணன் மகள் திடீரென காணாமல் போக களத்தில் இறங்குகிறார் சிவகார்த்திகேயன். அதற்காக அவருக்கு பிரியங்காவின் குடும்பமே உதவியாக இருக்கிறது. காணாமல் போன அந்த சிறுமியைக் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

சிறு வயதிலிருந்தே நிறைய கடத்தல் கதைகளையும், செய்திகளையும் படத்தின் இயக்குனர் நெல்சன் படித்திருப்பார் போலிருக்கிறது. அந்த தாக்கத்தில் மீண்டும் ஒரு கடத்தல் கதையை எடுத்திருக்கிறார். ஆனால், படத்தின் நாயகன் மிகச் சுலபமாக வில்லனை ரீச் செய்வதெல்லாம் சினிமாத்தனத்தின் உச்சம். திரைக்கதை டிவிஸ்ட்டுக்கெல்லாம் இயக்குனர் மெனக்கெடவில்லை. பீஸ்ட் படத்தில் இப்படியெல்லாம் வச்சிடாதீங்க பாஸ், விஜய் ரசிகர்கள் திட்டுகிறார்களோ இல்லையோ, அஜித் ரசிகர்கள் உங்களை கழுவி ஊற்றிவிடுவார்கள்.

சட்டை போடும் போது காலர் பட்டனையும் சேர்த்து போடும் அப்பாவி டாக்டர் சிவகார்த்திகேயன். தன்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கும் கதாநாயகி வீட்டில் ஒரு சிறுமி காணாமல் போனதும் அமைதியான ஆக்ஷன் ஹீரோவாக களத்தில் இறங்குகிறார். சிவகார்த்திகேயனை இப்படியெல்லாம் அமைதியாகப் பார்க்க நமக்குப் பொறுமை வேண்டும். எப்போதும் சிரிக்க வைக்கும் சிவகார்த்திகேயன்தான் ரசிகர்களுக்கு வேண்டும், சீரியசாக இருக்கும் சிவகார்த்திகேயனை ரசிகர்கள் ரசிக்க மாட்டார்கள் என்பதை இந்தப் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனே புரிந்து கொள்வார்.

படத்தின் கதாநாயகி என பிரியங்கா அருள்மோகனைத் தனியாகக் குறிப்பிட முடியாது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடி மாதிரி என்பதற்காக வேண்டுமானால் அவரைக் கதாநாயகி எனச் சொல்லலாம். மற்றபடி படத்தில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த இளவரசு, அர்ச்சனா, அருண் அலெக்சாண்டர், தீபா ஆகிய அனைவருக்குமே முக்கியத்துவம் உண்டு.

யோகி பாபு படம் முழுவதும் வருகிறார். ஆனால், ஒரு சில காட்சிகளில் மட்டுமே சிரிக்க வைக்கிறார். ரெடின் கிங்ஸ்லி நம் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறார். மிலிந்த் சோமன் போன்ற நடிகர்களை இரண்டு காட்சிகளில் காட்டி வீணடித்திருக்கிறார்கள்.

வினய் தான் படத்தில் வில்லன். ரிசார்ட் நடத்திக் கொண்டு சிறுமிகளைக் கடத்தும் தொழில் செய்பவர். அவரைப் பார்த்தெல்லாம் எந்த பயமும் வரவில்லை என்பது உண்மை.

மெட்ரோ ரயிலில் ஒரு நீ.....ளமான சண்டைக் காட்சி இருக்கிறது. எதற்கு அவ்வளவு நீளமான காட்சி என்றே தெரியவில்லை. படத்தின் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து இரண்டு பாடல்கள் வந்துவிடுகிறது. ஆனால், அனிருத் இசையில் சூப்பர் ஹிட் பாடலான செல்லம்மா... பாடலை வைக்க சரியான இடமில்லாமல், படம் முடிந்தன் பின் அந்தப் பாடலைப் போடுகிறார்கள். தியேட்டரில் பாட்டைப் பார்த்துட்டு போங்க சார் என கதவைத் திறக்க மறுக்கிறார்கள் தியேட்டர்காரர்கள். ஒரு ஹிட்டான பாடலை ஒரு கனவுப் பாடலாகவாவது வைத்திருக்கலாமே இயக்குனர் சார் ?.

சிவகார்த்திகேயனுக்குப் பதிலா ஜெய்சங்கர், வினய்க்குப் பதிலா அசோகன் என நடிகர்களை மாற்றிப் பார்த்தால் 1970களில் இந்தப் படம் வந்திருந்தால் ஒரு வேளை ஹிட் ஆகியிருக்கலாம்.

சரி, படத்தில் பாராட்ட ஏதாவது இருக்குமே என யோசித்து, யோசித்து, யோசித்துப் பார்த்தால்...சாரி, அப்படி எதுவுமே ஞாபகத்திற்கு வரவில்லை. இந்த ஆள் கடத்தல், ஹியூமன் டிராபிக்கிங் இதுக்கெல்லாம் கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க டைரக்டர்ஸ்.

டாக்டர் - பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

 

டாக்டர் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

டாக்டர்

  • நடிகர்
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓