பீஸ்ட்,Beast

பீஸ்ட் - பட காட்சிகள் ↓

Advertisement
2.25

விமர்சனம்

Advertisement

இயக்கம் - நெல்சன்
இசை - அனிருத்
நடிப்பு - விஜய், பூஜா ஹெக்டே
வெளியான தேதி - 13 ஏப்ரல் 2022
நேரம் - 2 மணி நேரம் 36 நிமிடம்
ரேட்டிங் - 2.25/5

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் மாஸ் ஹீரோ நடித்த ஒரு படத்தை இந்த அளவிற்குக் குறைந்த பட்ஜெட்டில், மிகச் சுமாரான கதையை வைத்து இதுவரையில் யாரும் இப்படி படமாக்கியிருக்க மாட்டார்கள்.

பெரிய சம்பளம் கொடுத்து விஜய் கால்ஷீட் வாங்கியாகிவிட்டது, படத்திற்கு இசை அனிருத் என விஜய் சொல்லியிருப்பார் போலிருக்கிறது. இயக்குனரைத் தேடிக் கொண்டிருந்த போது அனிருத் தன்னுடைய நண்பர் நெல்சனை சிபாரிசு செய்திருக்கலாம். கொரோனா காலகட்டம், ஒரே இடத்தில் நடக்கிற மாதிரி ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள் என கேட்டிருப்பார்கள் போலிருக்கிறது. இருக்கும் கடத்தல் கதைகளை அலசி ஆராய்ந்து இதுதான் சரியாக இருக்கும் என இந்த 'பீஸ்ட்' ஐ எடுத்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

தன்னுடைய முதலிரண்டு படங்களிலும் கடத்தலை மையமாக வைத்த நெல்சன் இந்தப் படத்திலும் அந்த கடத்தல் பார்முலா கை கொடுக்கும் என்று நம்பியிருக்கிறார். படத்தில் அவர் விழும் இடங்கள் நிறைய இருக்கிறது, ஆனால், ஒவ்வொரு இடத்திலும் விஜய்தான் அவருக்குக் கை கொடுத்து தூக்கி நிறுத்தியிருக்கிறார்.

சென்னையில் உள்ள பெரிய மால் ஒன்றை பாகிஸ்தான் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறார்கள். இந்திய சிறையில் இருக்கும் தங்கள் தலைவன் ஒருவரை விடுதலை செய்ய வேண்டுமெனச் சொல்கிறார்கள். அந்த மாலில் இருக்கும் முன்னாள் ரா அதிகாரியான விஜய், களத்தில் இறங்குகிறார். தீவிரவாதிகளைப் பிடித்தாரா, பணயக் கைதிகளைக் காப்பாற்றினாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

முப்பது வருடங்களுக்கு முன்பிருந்து 'ரோஜா', சில பல விஜயகாந்த், அர்ஜுன் படங்களில் பார்த்த அதே கடத்தல், அதே தீவிரவாதிகள், அதே ஆக்ஷன் ஹீரோ, ஹீரோவைக் காதலிக்கும் ஹீரோயின் என எந்த ஒரு மாற்றத்தையும் சிறிதும் யோசிக்காமல் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் நெல்சன்.

ஹீரோ அதிரடியான ஒரு ஆள், மேலதிகாரி சொல்வதைக் கூடக் கேட்கமாட்டார் என்பதற்காக படத்தின் ஆரம்பத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கே சென்று அவர் நடத்தும் 'ஆபரேஷன்' என ஆரம்பிக்கிறார்கள். படம் முடிந்துவிட்டது என எழுந்தால் இல்லையில்லை மீண்டும் ஒரு 'ஆபரேஷன்' எனக் காத்திருக்க வைக்கிறார்கள். சரி, அது முடிந்தது என மீண்டும் எழுந்தால், இருங்கள் ஒரு பாட்டை எடுத்துவிட்டோம், படத்தில் வேறு எங்கும் வைக்க இடமில்லை, கடைசியாக இதைப் பார்த்துவிட்டுப் போங்கள் என 'ஜாலி ஓ ஜிம்கானா' என ஆடுகிறார்கள், ஆளை விடுங்கடா சாமி என ஓடுகிறார்கள் ரசிகர்கள்.

எப்படி இந்தக் கதையில் விஜய் நடிக்க சம்மதித்தார் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அவருக்கு துளியும் பொருத்தமில்லாத ஒரு ஹேர் ஸ்டைல், சில இடங்களில் திருதிருவென முழிக்கும் ஒரு பார்வை என அவரை ரசிக்க விடாமல் செய்திருக்கிறார்கள். மிஷின் கன்னில் தீவிரவாதிகள் சுட்டுத் தள்ள, வழக்கம் போல ஒரு குண்டு கூட விஜய் மீது படாமல் போகிறது. ஆனால், அவர் சுடும் போது அனைத்து தீவிரவாதிகளும் சாகிறார்கள். பல இடங்களில் வெறும் கத்தியை வைத்துக் கொண்டே மிஷின் கன்னோடு வரும் தீவிரவாதிகளை கொன்று குவிக்கிறார். விஜய் இந்தப் படத்தில் எத்தனை பேரைக் கொன்றார் என ஒரு போட்டியே வைக்கலாம்.

40 வயதைக் கடந்தவர் போல இருக்கும் விஜய்க்கு 30 வயது போல இருக்கும் பூஜா ஹெக்டே ஜோடி. மீசை, தாடியில் நரை விழுந்த பின்னும் விஜய் திருமணம் செய்து கொள்ளாமலே இருப்பாராம், அவரை பூஜா விழுந்து விழுந்து காதலிப்பாராம். அதுவும் வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் ஆனவர் என்பது தனி கதை.

அவ்வளவு பெரிய மாலில் பணயக் கைதிகளாக வெறும் 200 பேர்தான் மாட்டியிருக்கிறார்கள். மக்களே வராத மால் போலிருக்கிறது. அப்படி ஒரு ஷாப்பிங் மாலைக் கடத்த எந்த தீவிரவாதி திட்டம் தீட்டுவார் ?. 'கூர்க்கா' படத்தோட கதையையே நம்மிடம் சொல்லி நம்மையும் காமெடி நடிகரா நடிக்கக் கூப்பிட்டு நடிக்க வைக்கறீங்களேடா என யோகி பாபு மைன்ஸ்ட் வாய்ஸ் பேசி நடிப்பது போலவே இருக்கிறது. எல்லாரும் பணயக் கைதிகளாக இருந்தாலும் யாரிடமும் பயமே இல்லை. விடிவி கணேஷ் ஆங்காங்கே அடிக்கும் சில டைமிங்குகள் சிரிக்க வைக்கின்றன. பூஜா ஹெக்டேவின் வருங்காலக் கணவராக சதீஷ், கடுப்பேத்துகிறார். செல்வராகவன் பாதுகாப்பு அதிகாரியாக அறிமுகமாகி உள்ளார். கௌதம் மேனன் கால்ஷீட் கிடைக்காமல் இவரை நடிக்க வைத்துவிட்டார்கள் போலிருக்கிறது.

விஜய் நடிக்கும் ஒரு படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே என்பது எவ்வளவு பெரிய சோகம். அவரது படத்தில் இடம் பெறும் ஐந்தாறு பாடல்களைப் பார்ப்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் வரும். படம் முடிந்த பின் பாடலைப் போடுவதெல்லாம் வேற ரகம். பின்னணி இசையில் அனிருத் வாசிப்பது நாம் பார்த்த தியேட்டரில் தொம், தொம் என விழுகிறது. ஒரே ஒரு மாலை எப்படி எப்படியெல்லாம் சுற்றிக் காட்ட முடியுமோ அப்படி சுற்றிக் காட்டுகிறார் ஒளிப்பதிவாளர்.

மற்ற மொழிகளில் உள்ள ஹீரோக்கள் எப்படி எப்படியெல்லாம் நடிக்கிறார்கள். பான்--இந்தியா எல்லாம் பறக்கிறார்கள் என்பதை விஜய் போன்ற மிகப் பெரும் வியாபார எல்லை உள்ள ஹீரோக்கள் கூர்ந்து கவனித்துப் பார்த்து தங்கள் படங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

பீஸ்ட் - நோ டேஸ்ட்..

 

பீஸ்ட் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

பீஸ்ட்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

விஜய்

டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா தம்பதியரின் மகன் நடிகர் விஜய். 1974ம் ஆண்டு ஜூன் 22ம்தேதி பிறந்த இவரது இயற்பெயர் ஜோசப் விஜய். 1984ம் ஆண்டு டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில், விஜயகாந்த் நாயகனாக நடித்த வெற்றி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பின்னர் 1992ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இந்த படத்தைம் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரே இயக்கினார். ஆரம்ப காலத்தில் தந்தையின் இயக்கத்தில் நடித்து வந்த விஜய் பின்னர் துறையில் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். விஜய்யின் ரசிகர்கள் அவரை "இளைய தளபதி" என்றும் இளைய சூப்பர்ஸ்டார் என்றம் பட்டப் பெயருடன் அழைக்கிறார்கள். பூவே உனக்காக, லவ் டூடே, ப்ரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும், குஷி, பிரண்ட்ஸ், கில்லி, மதுர, திருப்பாச்சி, போக்கிரி உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்திருக்கும் விஜய் தனது படங்களில் இடம் பெறும் ஏராளமான பாடல்களையும் பாடியிருக்கிறார்.

மேலும் விமர்சனம் ↓