கோலமாவு கோகிலா,Kolamavu Kokila

கோலமாவு கோகிலா - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

நடிகர்கள் : நயன்தாரா, யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன், ஜாக்குலின், ஆர்.எஸ்.சிவாஜி
இசை : அனிருத்
இயக்கம் : நெல்சன் திலீப்குமார்
தயாரிப்பு : லைகா புரொடக்ஷ்ன்

தமிழ் சினிமாவில் சமீப காலங்களில் பிளாக் காமெடி வகைப் படங்கள் அதிகம் வருகின்றன. அவற்றில் சில படங்கள் மட்டுமே ரசிகர்கள் ரசிக்க வைக்கும் விதத்தில் அமைந்து பிளாக்கில் டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் அளவிற்கு அமைகின்றன. மற்ற படங்கள் தியேட்டர் வருமானத்தையும் பிளாக் செய்ய வைக்கும் படமாக அமைந்து விடுகின்றன.

அறிமுக இயக்குனர் நெல்சன் இந்த கோலமாவு கோகிலா படத்தை வண்ணக் கோலமாகப் படைக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், வண்ணங்கள் முழுமை பெறாமல் பிளாக் காமெடி படத்தை அடிக்கடி பிளாக் ஆக்கி வைக்கிறது.

நயன்தாரா போன்ற முன்னணி நடிகை தன் முதல் படத்திலேயே நடிக்க அமைந்ததை கருத்தில் கொண்டு திரைக்கதையில் இன்னும் உழைத்திருந்தால் இந்த கோகிலா கொண்டாட்டமான கோகிலாவாக அமைந்திருப்பார்.

நோயாளி அம்மா சரண்யா, நோயாளி அப்பா ஆர்.எஸ்.சிவாஜி, கல்லூரி படிக்கிற தங்கை ஜாக்குலின் என மூத்த மகள் நயன்தாரா அவருடைய குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறார். அம்மா சரண்யாவுக்கு கேன்சர் இருப்பது தெரிய வர சிகிச்சைக்காக 15 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. இதற்காக சந்தர்ப்பவசத்தால் கோகைன் போதைப் பொருள் கடத்தலில் இறங்குகிறார் நயன்தாரா. அதில் வரும் சிக்கல்களை அவர் எதிர்கொண்டு தன் அம்மாவைக் காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

கோகிலாவாக நயன்தாரா. ஒரு ஏழைக் குடும்பத்தின் மூத்த மகள். அவருடைய தோற்றமும், பேச்சும் நானும் ரௌடிதான் நயன்தாராவை அப்படியே ஞாபகப்படுத்துகிறது. குறைந்தபட்சம் நயன்தாராவின் ஆடையிலாவது கொஞ்சம் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனாலும், கோகிலா கதாபாத்திரத்தில் அப்படியே செட்டாகியிருக்கிறார் நயன்தாரா. அந்த அப்பாவித்தனமான முகமும், பேச்சும் கோகிலா கதாபாத்திரத்தை தூக்கலாகக் காட்டியிருக்கின்றன. படம் முழுவதிலும் கதாபாத்திரத்தின் தன்மை ஒரே மாதிரியாகவே இருப்பது ஒரு குறை.

படத்தில் கொஞ்ச நஞ்ச சிரிப்புக்கு காரணமாக இருப்பவர் யோகி பாபு. படத்தின் ஆரம்ப அரை மணி நேரத்தைக் காப்பாற்றுபவர் அவர்தான். இடைவேளைக்குப் பிறகு இன்னும் கொஞ்சம் காப்பாற்றுகிறார். யோகி பாபு இல்லை என்றால் கோலமாவு கொஞ்சம் கோணலாகிப் போயிருக்கும்.

அம்மா சரண்யா, அப்பா சிவாஜி, தங்கை ஜாக்குலின், அக்கா நயன்தாரா என குடும்பமே கடத்தலில் ஈடுபட ஆரம்பித்ததும் நடிப்பில் கோடி ரூபாய்க்கு நடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

மற்ற கதாபாத்திரங்களில் டோனியாக நடித்திருக்கும் ரெடின், ஜாக்குலின் காதலனாக நடித்திருக்கும் அன்புதாசன் அசத்தியிருக்கிறார்கள்.

அனிருத் இசையில் கல்யாண வயசு.. பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் அடிக்கடி வருகின்றன. அவை ஒரே பாடலா, வெவ்வேறு பாடலா என்பதில் வித்தியாசம் தெரியவில்லை.

சென்னை புறநகர்ப்பகுதியான கும்மிடிப்பூண்டி தான் படத்தின் கதைக்களம். அந்தப் பின்னணி படத்தின் கதைக்கு வித்தியாசமான உணர்வைக் கொடுத்திருக்கிறது.

நயன்தாரா நடித்துள்ள படம் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள். அந்த நம்பிக்கையை கொஞ்சமாகக் காப்பாற்றியிருக்கிறார் இயக்குனர்.

இன்னும் கொஞ்சம் பொறுமையாக யோசித்து இந்த பிளாக் காமெடி கோலமாவில் பல வண்ணங்களைச் சேர்த்திருந்தால் கிடைக்கும் கோடிகள் இன்னும் அதிகமாகக் கிடைத்திருக்கும்.

 

பட குழுவினர்

கோலமாவு கோகிலா

  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓