ராக்கி - தி ரிவெஞ்ச்,Rocky the Revenge

ராக்கி - தி ரிவெஞ்ச் - பட காட்சிகள் ↓

Advertisement
2

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ஸ்ரீகாந்த், இஷான்யா, நாசர், பிரம்மானந்தம் மற்றும் பலர்
தயாரிப்பு - பிஎம்பி மியூசிக் & மேக்னெட்டிக்ஸ்
இயக்கம் - கே.சி. பொக்காடியா
இசை - பப்பி லஹரி, சரண் அர்ஜுன்
வெளியான தேதி - 12 ஏப்ரல் 2019
நேரம் - 1 மணி நேரம் 42 நிமிடம்
ரேட்டிங் - 2/5

ஹிந்தியில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவரும், இயக்கியவருமான கே.சி.பொக்காடியா தமிழில் இயக்கியிருக்கும் முதல் படம் இது. படத்தின் பெயரைப் பார்த்ததும் இது ஒரு டப்பிங் படமோ என்று பலரையும் யோசிக்க வைத்திருக்கும். ஆனால், இது ஒரு நேரடி தமிழ்ப் படம் என்பது படத்தைப் பார்த்த பிறகே நமக்கும் புரிந்தது.

80, 90களில் ஹிந்தியில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்தான் பொக்காடியா. அவரது இயக்கத்தில் அமிதாப்பச்சன், தர்மேந்திரா, ரஜினிகாந்த், வினோத் கண்ணா, அஜய் தேவகன், அக்ஷய் குமார், கோவிந்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இந்த ராக்கி படத்தில் அவர் நடிகர்களை விடவும் நாயைத்தான் அதிகம் நம்பியிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நாயின் சாகசங்களை இந்தப் படத்தில் பார்க்க முடிகிறது. படத்தின் ஹீரோவே ராக்கி என்கிற அந்த நாய்தான். தேவர் பிலிம்ஸ், ராம நாராயணன் ஆகியோருக்குப் பிறகு கே.சி. பொக்காடியா ஒரு நாயையும் அருமையாக நடிக்க வைத்திருக்கிறார். அதிலும் சென்டிமென்ட் காட்சிகளில் அந்த நாயின் கண்களில் கண்ணீரெல்லாம் வருகிறது. நாயின் பயிற்சியாளருக்குத்தான் அந்தப் பாராட்டுகள் போய்ச் சேரும்.

கதை எந்த ஊரில் நடக்கிறது என்பது சரியாகக் காட்டப்படவில்லை. சில காட்சிகளின் பின்னணியில் தெலங்கானா போலீஸ் என்றெல்லாம் இருக்கிறது. ஊரைப் பார்ப்பதற்கும் ஐதராபாத் போல இருக்கிறது. ஆனால், கதாபாத்திரங்கள் அனைத்தும் தமிழ் பேசுகிறது.

ஸ்ரீகாந்த் உதவி போலீஸ் கமிஷனர். எம்எல்ஏ சாயாஜி ஷிண்டே ஆதரவில் இருக்கும் ரவுடி ஓஎகே சுந்தரை கைது செய்து லாக்கப்பில் அடைக்கிறார். அவரை மீட்க வந்த எம்எல்ஏவையும் லாக்கப்பில் தள்ளுகிறார். இதனால் அவமானமடையும் சாயாஜி, ஸ்ரீகாந்தைப் பழி வாங்கத் துடிக்கிறார். அவர் கீழ் வேலை பார்க்கும் இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டருடன் சேர்ந்து ஸ்ரீகாந்தைக் கொலை செய்கிறார். அதை ஸ்ரீகாந்த் வளர்க்கும் நாயான ராக்கி பார்த்துவிடுகிறது. பின்னர் அது கொலையாளிகளை எப்படி பழி வாங்குகிறது என்பதுதான் படத்தின் கதை.

ஸ்ரீகாந்த் இடைவேளை மட்டுமே வருகிறார். மனைவி இஷான்யா மகேஸ்வரியுடன் ரொமான்ஸ் செய்கிறார். ராக்கி மீது அதிக பாசம் காட்டுகிறார். எம்எல்ஏ மீதும் அவருடைய ஆளான ரவுடி ஓஎகே சுந்தர் மீதும் கோபம் காட்ட முயற்சிக்கிறார். தமிழில் தெரிந்த ஒரு முகம் வேண்டும் என்பதற்காக ஸ்ரீகாந்தை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

கமிஷனராக நாசர், எம்எல்ஏவாக சாயாஜி ஷிண்டே, ரவுடியாக ஓஎகே சுந்தர். இதற்கு முன் பல படங்களில் நடித்த கதாபாத்திரங்கள்தான். ஸ்ரீகாந்த் மனைவி இஷான்யா கொஞ்சம் ரொமான்ஸ் செய்து, பின்னர் கணவரை இழந்து அழ ஆரம்பித்து விடுகிறார்.

பிரம்மானந்தம் போலீஸ் நாய்களின் பயிற்சியாளராக வருகிறார். அவர் செய்யும் அமெச்சூரான நகைச்சுவை நமக்கு சிரிப்பை வரவழைக்கவில்லை.

படத்தின் கதையும், திரைக்கதையும், வசனங்களும் 1980களில் வந்த படங்களைப் போலவே உள்ளன. பப்பி லஹரி பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் போலிருக்கிறது. சரண் அர்ஜுன் பின்னணி இசையில் எந்த அழுத்தமும் இல்லை.

அந்தக் காலத்தில் பல ஹிட் படங்களைக் கொடுத்த கே.சி.பொக்காடியா இந்தக் காலத்திற்கேற்றபடி இன்னும் அப்டேட் ஆகாமல் இருக்கிறார் போலிருக்கிறது.

நாய் செய்யும் சாகசம் என்றால் குழந்தைகளுக்குப் பிடிக்கும். அதிலும் இடைவேளைக்குப் பின் இரண்டு நாய்கள் ஆக்ஷன் நடிப்பில் அசத்துகிறது. குழந்தைகளுக்கு வேண்டுமானால் இந்த மாதிரியான படம் பிடிக்கலாம்.

ராக்கி - நாயின் பாசம்

 

பட குழுவினர்

ராக்கி - தி ரிவெஞ்ச்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓