Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

புத்தன் பணம் (மலையாளம்)

புத்தன் பணம் (மலையாளம்),Puthan panam
மம்முட்டி-ரஞ்சித் கூட்டணியில் வெளியாகியுள்ள மற்றுமொரு படம் தான் புத்தன் பணம்.
18 ஏப், 2017 - 16:51 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » புத்தன் பணம் (மலையாளம்)

நடிகர்கள் : மம்முட்டி, இனியா, ஷீலு ஆப்ரஹாம், மம்முக்கோயா, சாய்குமார், சித்திக், இந்திரன்ஸ், நிரஞ்சனா மற்றும் பலர்

இசை : ஷான் ரஹ்மான் - அச்சு ராஜாமணி

ஒளிப்பதிவு : ஓம் பிரகாஷ்

டைரக்சன் : ரஞ்சித்

மம்முட்டி-ரஞ்சித் என்பது மலையாளத்தில் ஒரு ஸ்பெஷலான கூட்டணி. இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ள இந்த 'புத்தன் பணம்' செல்லாத நோட்டு அறிவிப்பு பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. ரசிகர்களை எந்த அளவுக்கு இந்தப்படம் கவர்ந்துள்ளது..? பார்க்கலாம்.

கேரளாவின் வடக்கு பகுதியில் உள்ள காசர்கோடு பகுதியை சேர்ந்தவர் மம்முட்டி. பணம் கொடுக்கல் வாங்கல், அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என பல விதங்களில் பணம் ஈட்டும் கோடீஸ்வரர்.. நண்பரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சாய்குமாருடன் இணைந்து செயல்பட்ட வியாபாரத்தில் சாய்குமாரின் நடவடிக்கை திருப்தியில்லாததால் தனது பங்கை திருப்பி கேட்கிறார்..

இதோ அதோ என பல மாதங்களாக இழுத்தடித்து வந்த சாய்குமார், சரியாக நவ-8ஆம் தேதி மாலை 4 மணிக்கு மம்முட்டிக்கு சேர வேண்டிய 25 கோடி ரூபாய் தொகையை ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக மம்முட்டியின் கையாளிடம் ஒப்படைக்கிறார். ஆனால் சரியாக அன்றிரவு 8 மணிக்குத்தான், பிரதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கிறார்.

மத்தியில் செல்வாக்குள்ள சாய்குமார் இந்த செல்லாத நோட்டு அறிவிப்பை முன்கூட்டியே தெரிந்துகொண்டுதான் தனக்கு வேண்டுமென்றே ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை தந்ததாக ஆத்திரப்படும் மம்முட்டி, தனது ஆட்களுடன் கோழிக்கோட்டுக்கே நேரில் வந்து சாய்குமாரை மிரட்டி பணத்தை கேட்கிறார். இந்த களேபரத்தில் மம்முட்டியின் துப்பாக்கியை வைத்திருந்த கையாள் ஒருவர் அதை தவறுதலாக அழுத்திவிட தோட்டா பாய்ந்து சாய்குமார் இறக்கிறார்.

கோழிக்கோட்டின் மிகப்பெரிய லாயர் ஒருவரின் ஆலோசனைப்படி மம்முட்டியும் அவரது ஆட்களும் கோழிக்கோடு நகரத்திற்குள்ளேயே தலைமறைவாகின்றனர். போலீஸ் சோதனையின்போது சிக்கிக்கொள்வோம் என்பதால், தனது துப்பாக்கியை ஒரு இடத்தில் அடையாளம் பார்த்து காரில் போகும்போதே வீசிவிட்டு செல்கிறார் மம்முட்டி.

மறுநாள் வந்து பார்த்தால், அந்த இடத்தில் துப்பாக்கி இல்லை. அந்தப்பகுதியில் பழைய பொருட்கள் விற்கும் இந்திரன்ஸ் என்பவர் மூலமாக, அது போலீஸ் அதிகாரி ஒருவரின் வீட்டில் வேலை செய்யும் இனியாவின் மகனிடம் உள்ளது என்பதை அறிந்து கொள்கிறார் மம்முட்டி. நிலைமையை மேலும் சிக்கலாக்க விரும்பாமல், அவனிடமிருந்து சாத்வீகமான முறையில் துப்பாக்கியை கைப்பற்ற முயற்சிகிறார். அதேசமயம், அந்த சிறுவன் தன்னையும், தனது தாயையும் அடிக்கடி அடித்து மிரட்டும் தனது குடிகார தந்தையை மிரட்டுவதற்காக, அவரது காலில் சுடுகிறான்.. அதை தொடர்ந்து தனது நண்பன் ஒருவனின் தோழிக்கு உதவி செய்வதற்காக ரவுடி ஒருவனை பயமுறுத்த சுடுகிறான்.

முன்னாள் மந்திரி, சிறுவனின் தந்தை இருவர் மேல் பாய்ந்ததும் ஒரே ரக துப்பாக்கி என்பதை அறிந்த போலீஸ் துப்பாக்கியை தேடும் பணியை தீவிரப்படுத்துகிறது. இந்நிலையில் தனி லாட்ஜில் தங்கி இருந்த மம்முட்டியின் கூட்டாளிகள் நால்வர் போலீசில் சிக்க, விஷயம் சிக்கலாகிறது. அந்த நால்வரும் முன்னாள் மந்திரி கொலை பற்றி போலீஸில் வாய்திறந்தார்களா..? மம்முட்டி அந்த சிறுவனிடம் இருந்து துப்பாக்கியை கைப்பற்றினாரா..? இல்லை அந்த சிறுவன் துப்பாக்கியை வைத்து இன்னும் ஏதாவது விபரீதங்களுக்கு வித்திட்டானா என்பது மீதிக்கதை.

நடுத்தர வயதை கடந்த கோடீஸ்வரர் நித்யானந்த ஷெனாய் ஆக மம்முட்டியின் உருவம், நடிப்பு இரண்டிலும் கம்பீரம். துப்பாக்கியை தொலைப்பதற்கு முன் அவர் காட்டும் அதிரடி, தொலைந்தபின் அதை திரும்ப பெறுவதற்காக அவர் காட்டும் சாத்வீகம் என இருவிதமான நடிப்பை வழங்கியுள்ளார்..

கமிஷனர் வீட்டு வேலைக்காரியாக, தமிழ்ப்பெண்ணாகவே நடித்துள்ளார் இனியா. அவரது மகனாக வரும் அந்த விடலைப்பையன் துப்பாக்கியை வைத்துக்கொண்டு ரெண்டும் கெட்டான் ஆட்டம் ஆடும்போது, ஏதாவது விபரீதமாக செய்து விடுவானோ என நம்மை பதறவும் அதேசமயம் கோபப்படவும் வைக்கிறான். படத்தின் மற்ற கதாபாத்திரங்களும் தங்களது பங்களிப்பை நிறைவாக செய்துள்ளனர்..

நடப்பில் மக்களை ரொம்பவே சிரமப்படுத்திய ஒரு விஷயத்தை கையில் எடுத்து படம் இயக்க துணிந்த இயக்குனர் ரஞ்சித்தை பாரட்டலாம்.. ஆனால் அதை சரியான விதத்தில் படமாக்காததற்காக அந்த பாராட்டை திருப்பி வாங்கிக்கொள்ளவும் செய்யலாம். அதுதான் நியாயம். அதற்கான காரணங்களை பார்ப்போம்...

லைசென்ஸுடன் துப்பாக்கியை வைத்திருக்கும் மம்முட்டி அதை மிகுந்த கவனக்குறைவாக தனது அல்லக்கையிடம் கொடுத்து முன்னாள் மந்திரியை மிரட்ட சொல்கிறார். அவ்வளவு தெளிவான ஆளாக இருக்கும் மம்முட்டி இப்படி செய்வதில் ஒரு லாஜிக் வேண்டாமா..?

சிறுவனிடம் மாட்டிக்கொண்ட துப்பாக்கியை கைப்பற்றுவதற்காக மம்முட்டி சோன்பப்டி விற்பவராக நடிப்பது, அந்த சிறுவனுக்கு ஐஸ்கிரீம் வாங்கித்தந்து நைச்சியம் பண்ணுவது என மூட்டைப்பூச்சியை உரலில் போட்டு இடித்துக்கொள்வது போல, தலையை சுற்றி மூக்கை தொடும் வேலையை செய்வது ஏனோ..? அந்த சிறுவனை ஈசியாக ஹேண்டில் செய்து வாங்குவது அவ்வளவு பெரிய டானான மம்முட்டிக்கு ஒன்றும் பெரிய கஷ்டம் இல்லையே.

ஒரு சிறுவன் வீட்டிற்குள் நிஜ துப்பாக்கியை கொண்டு வந்து வைத்தால், அவனுடைய அம்மா அதை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாளா..? ஆனால் இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியின் வீட்டில் வேலைபார்க்கும் இனியா, தனது மகனின் கையில் இந்த துப்பாக்கி இருக்கும் விஷயத்தையும், தனது கணவன் தங்களை துன்புறுத்தி வீட்டை விட்டு துரத்த நினைப்பதையும் அந்த போலீஸ் அதிகாரியிடம் ஏன் சொல்லாமல் விட்டார்..? சொல்லியிருந்தால் பிரச்சனை சுமூகமாக முடிந்திருக்குமே..?

இப்படி இன்னும் பல லாஜிக் ஓட்டைகள் இருக்கின்றன. இடைவேளை வரை விறுவிறுப்பாக செல்லும் கதை, இடைவேளைக்குப்பின் பண விவகாரத்தில் இருந்து விலகி, துப்பாக்கியின் மீது ட்ராவல் பண்ண ஆரம்பிக்கும்போதே அதன் சுவாரஸ்யத்தை இழந்து விடுகிறது. செல்லாத நோட்டு விவகாரத்தை வைத்து இன்னும் நன்றாக விளையாடி இருக்கலாம். களம் கிடைத்தும் வெறும் பயிற்சி ஆட்டம் மட்டுமே ஆடியுள்ளார் இயக்குனர் ரஞ்சித்..

இதற்கு முந்தைய ரஞ்சித்-மம்முட்டி படங்களை பார்த்த நாம், இப்போது இவர்கள் கூட்டணியில் இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை..

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ரஞ்சித்!வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in