தினமலர் விமர்சனம்
மை டியர் டெஸ்பெரடோ என்ற கொரிய படத்தின் ரீமேக்காக வந்திருக்கிறது காதலும் கடந்து போகும். "சூது கவ்வும்" இயக்குனர் நலன் குமாரசாமி - நாயகர் விஜய் சேதுபதி வெற்றி கூட்டணி இப்படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறது.... என்பது சிறப்பு!
காதலும் கடந்து போகும் படத்தின் கதைப்படி, சாப்ட்வேர் இன்ஜினியரிங் படித்த நாயகி மடோனா செபாஸ்டின் தன் பெற்றோரின் எதிர்ப்பை பொருட்படுத்தாது
சென்னையின் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். அவர் வேலை பார்த்த நிறுவனம் திடீரென மூடப்படுகிறது. இதனால் வேலைபறிபோகும் மடோனா, எங்கே தன் ஊருக்கு, வீட்டுக்கு சென்றால் தனக்கு உடனடியாக திருமணம் செய்து வைத்துவிடுவார்களோ.... என்னும் யோசனையிலும், பயத்திலும் சென்னையில் சுமாரான ஏரியாவில் குறைந்த வாடகைக்கு வீடெடுத்து வேறு வேலைத்தேடுகிறார்.
மடோனாவின் எதிர் வீட்டில் ஒரு அசால்ட் கேசுக்காக சில வருடங்கள் உள்ளே போய் வந்த விஜய் சேதுபதி குடியிருக்கிறார். சிறைக்கு போய் வந்த செல்வாக்கில்(?) பார் அதிபராக வேண்டும் என்னும் கனவில் இருக்கும் விஜய்க்கும், மடோனாவிற்கும் ஒரு சில சந்திப்புகள், உதவிகள் ஒத்தாசைகளால் நெருக்கம் ஏற்படுகிறது. அந்த நெருக்கம், கொஞ்சநாளில் காதலானதா? நாயகர் விஜய் சேதுபதியின் கனவு நிறைவேறியதா?, நாயகி மடோனாவிற்கு அவர் விரும்பியபடி ஐ.டி கம்பெனி வேலை கிடைத்ததா? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு விலாவாரியாக, வித்தியாமாக விடை சொல்கிறது... காதலும் கடந்து போகும் படத்தின் மொத்தகதையும்!
சல்பி சேகராக, இப்படத்தில் விஜய் சேதுபதி., காமெடி ரவுடியாக, கலக்கியிருக்கிருக்கிறார். பெரிய ஹோட்டல் கள்ல, ட்ரங்க் பிரான் அப்படின்னு ஒரு டிஷ் கொடுப்பாங்க.... அது என்னன்னு தெரியுமா? ஒரு பவுல்ல சரக்கை ஊற்றி அதுக்குள்ள உயிரோட ஒரு பிரானை ( இறால்) பிடிச்சுப்போட்டு அது அந்த சரக்கை முழுசா உறிஞ்சி முடிச்சதும் அதை உயிரோட கொதிக்கிற எண்ணெயில் வறுத்து எடுத்து திங்க கொடுப்பாங்க .... அப்படி இருக்கு ..இப்ப நீ எனக்கு ஏற்படுத்தி கொடுத்திருக்கிற சூழல்... என நாயகியை பார்த்து விஜய் பதறும் இடமாகட்டும், "எல்லார்கிட்டேயும் பூனை மாதிரி பம்முற என்கிட்ட மட்டும் எகிறி எகிறி பேசற..., என்னடி உனக்கு என்னை பார்த்து பயம் வரலை.. என ஹீரோயினன பார்த்து ஹீரோ பயமுறுத்திக் கேட்கும் இடமாகட்டும்...
இன்னும், ஒருபடி மேலே போய், "நீ கோபக்காரின்னு நினைக்கிறேன... வேலை கிடைக்கணுமுன்னா கால்ல விழுந்துடணும் வேலை கிடைக்கும்... என்று நாயகிக்கு நாயகர் அட்வைஸிப்பது, சின்ன மயக்கத்திற்கு 3 கி.மீ நாயகியை தூக்கி கொண்டு ஆஸ்பத்ரி ஓடி நாயகிக்கு செலவு வைத்து வழிவது, கோட்டு- சூட்டுடன் நாயகி யின் அப்பாவிடம் மாட்டிக் கொண்டு முழிப்பது.... என ஒவ்வொரு காட்சியிலும், இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா, நானும் ரவுடிதான் உள்ளிட்ட படங்களின் பாணியில், மிகவும் யதார்த்தமான நடிப்பை இதிலும் வழங்கியிருக்கிறார் விஜய் சேதுபதி. அடியாள்னா அடிச்சிட்டே இருப்பாங்களா ? அப்பப்போ அடி வாங்கவும் செய்வாங்க., என மொடா குமாரின் ஆட்கள் தன்னை செமையாய் செய்ததை., நாயகி மடோனாவிடம் மூடிமறைக்க பார்க்கும்.... விஜய் ஹாசம்.
விஜய் தான் அப்படி என்றால், நாயகி மடோனா செபாஸ்டின், அதே அடிபட்ட விஷயத்திற்கு "நீங்க கொஞ்சம் அதிகமா அடி வாங்குவீங்களோ..? "என விடாமல் விஜய் சேதுபதியை தொலைத்து எடுக்கும் மடோனாவின் நடிப்பும் இது மாதிரி எண்ணற்ற காட்சிகளில் டபுள், டிரிபிள் ஹாசம். மலையாளத்தில் பிரேமம் படத்தில் ரசிகர்களை தன்வயப்படுத்தி மடோனா, இப்பட யாழினி பாத்திரம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் நாடித்துடிப்பையும் எகிற வைக்கிறார் என்றால் அது மிகையல்ல!
மொடாக்குமார் எனும் மொரட்டுக்குமாராக மாஜி போலீஸாக, மாமூல் போலீஸாக சமுத்திரகனி, சபாஷ் கனி! என சொல்ல வைக்குமளவிற்கு நடித்திருக்கிறார். ஜி.எம்.சுந்தர், டிஆர்கே.கிரண், வெங்கடேஷ், ரிந்து, ரவி, மணிகண்டன் உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்!
அவ்வப்போது பின்னணியில் ஒலிக்கும் ஒரு ஊர்ல ஒரே ஒரு வீரன்... சல்பி சேகர் போங்கு... உள்ளிட்ட துண்டு துக்கடா பாடல்களும், கக் கக்கபோ... பாடலும் இசையாளர் - சந்தோஷ் நாராயணன் இசையில் சிறப்பு.
ஓளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், அதனை படமாக்கியிருக்கும் விதமும் ஒட்டு மொத்த இப்படத்தின் ஓளிப்பதிவும் கூட நிச்சயம் மேலும் சிறப்பு, லியோ ஜான்பாலின் படத்தொகுப்பு, ஹரி தினேஷின் சண்டைப்பயிற்சி உள்ளிட்டவை இப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது..
"கொட்டும் மழையில் குடை வாங்க காசு கொடுத்து, சீப்பா உள்ளதா வாங்கி வாங்க... என்பது, போகும் வழியில் விஜய் விழுந்து எழுந்து அந்த வலி தெரியாது குடையை தந்து செல்வது, நாயகி யாழினியை டான்ஸ் ஆட சொல்லி ஒரு ஐ.டி கம்பனி சீப்கள், ரொம்பவும் சீப்பாய் டைம்பாஸ் இண்டர்வியூ நடத்துவது,
எஸ்கிமோக்களின் நாய் கட்டிப் பிடித்து தூங்கும் கதை, பிளாக் பாரஸ்ட் - கேக்கிற்கு கருப்பு காடு மொழிபெயர்ப்பு உள்ளிட்ட இன்னும் பல "நச்சென்ற காட்சி களை உள் வைத்து இயக்குனரால் பார்த்து, பார்த்து செதுக்கப்பட்டுள்ளது மொத்த படமும் .
மை டியர் டெஸ்பெரடோ என்ற கொரிய படத்தின் உரிமை பெற்ற ரீமேக்காக., சூதுகவ்வும் படத்தின் வெற்றிக்குப் பிறகு நலன் குமரசாமி இப்படத்தை இயக்கியிருக்கிறார். உங்க ஊத்த வாயில இருந்து நாலு பல்லு பார்சல் வேணும், ஏய்ப்க்கத்து வீட்டு பொண்ணு, எஸ்கிமோன்னு ஓரு இனம் ரொம்ப குளிர் காலத்தில் நாயை கட்டிப்பிடித்து தூங்குவாங்க... இப்படி, ஏகப்பட்டஹாஸ்ய, சுவாரஸ்ய விஷயங்களை தேடிப் பிடித்து கதையோட்டத்தில் கலந்திருக்கும் இயக்குனர் நலன், ஆனால் க்ளைமாக்ஸில் கதாநாயகியின் இரண்டு வருடங்களுக்கு பிந்தைய கனவில் ஹீரோ உயிரோடு இருக்கிறாரா? அல்லது நிஜத்தில் இருக்கிறாரா... என்பதை புரியாத புதிராக குழப்பி இருப்பது சந்றே ரசிகனின் பொறுமையை சோதிக்கிறது.
மற்றபடி, இது மாதிரி குறைகள் கடந்து போகட்டும்.... என ரசிகன் ரசித்துப் பார்த்தால், நிச்சயம் "காதலும் கடந்து போகும்" - கலக்கலாக கலெக்ஷ்ன் அள்ளும்!
-------------------------------------------------------------------
குமுதம் விமர்சனம்
'சூது கவ்வும்' வெற்றிக்குப் பிறகு நலன் குமாரசாமி இயக்கியிருக்கும் கொரியன் படம் ஸாரி.. ரீமேக் காமெடி படம்.
நண்பனுக்காக ஜெயிலுக்குப் போய் வந்து ஒரு பார் ஓனராக வேண்டும் என்ற கனவில் திரியும் ஏரியா ரவுடி விஜய் சேதுபதி. விழுப்புரத்தில் இருந்து பெற்றோரை ஏமாற்றி விட்டு ஐ.டி. வேலைக்காக சென்னை வரும் மடோனா. ஐ.டி. வேலை பறிபோனதும் ஹீரோ வீட்டிற்கு எதிராக குடியேறி அவரோடு டாம் அண்ட் ஜெர்ரி பாணியில் ஊடலும் கூடலுமாக பாதிப்படம் நகர்கிறது. ஹீரோ பார் ஓனரானாரா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா என்பது மீதிக்கதை.
எப்போதும் அடிவாங்கும் ரவுடி என்றாலும் கெத்தாக வருகிறார் விஜய் சேதுபதி. தன்னை ஒரு நெட்ஒர்க் மேனேஜராக பொய் சொல்லும் இடம் சிரிப்பு வெடி.
துக்கடா இன்ஜினியரிங் கல்லூரிகளில் படித்தவிட்டு வேலை கிடைக்காமல் அலையும் இளம் பெண்களின் மனநிலையை நேரில் நிறுத்துகிறார் மடோனா செபாஸ்டியன். விஜய் சேதுபதியுடனான மோதலும் காதலும் செம தத்ரூபம்.
சத்திரகனி பெரிதாக ஓட்டவில்லை. 'தமிழ்நாட்டில் யார்தான் இன்ஜினியர்கள் இல்லை' இப்படி சபாஷ் வாங்கும் வசனங்கள் அதிகம். ஒளிப்பதிவு யதார்த்தம். பின்னணி இசை பொருத்தம். 'ககக போ' பாடல் அருமை.
வேலை தேடும் பெண்களை இன்டர்வியூவில் ஆடச் சொல்வது பாடச் சொல்வது ஆசைக்கு இணங்கச் சொல்வது போன்ற சமூக அவலத்தை தோலுரித்துக் காட்டுகிறார் நலன். திரைக்கதையில் கொஞ்சம் வேகம் காட்டியிருக்கலாம் என்றாலும், அந்தக் குறை தெரியாமல் நகைச்சுவையில் ஸ்கோர் செய்கிறார் இயக்குநர்.
காதலும் கடந்து போகும்: காமெடி கலாட்டா.
குமுதம் ரேட்டிங் ஓ.கே
-----------------------------------------------------------
கல்கி விமர்சனம்
'Nae Khangpae Kateun Aein' என்ற கொரியத் திரைப்படத்தைத் தழுவி எடுத்திருக்கிறார்கள். முன்னாள் கைதியும், பார் ஓனராக விரும்பும் இன்னாள் அடியாளுமான கதாநாயகனுக்கும், வேலை தேடும் பொறியியல் பட்டதாரிப் பெண்ணுக்கும் இடையேயான காதலை மென்மையாகச் சொல்லியிருக்கிறது படம்.
'இதுவும் கடந்து போகும்' என்பது இணையத்தில் பெருவாரியாகப் புழங்கிவரும் ஆறுதல் சொலவடை. அதை லேசாக டிங்கரிங் செய்து தலைப்பாய் வைத்திருக்கிறார்கள்.
படம் திருப்பங்கள் ஏதுமின்றி மெல்ல நகர்கிறது. பொறுக்கிகளை மேல்தட்டு வர்க்கம் காதலிப்பதைக் காட்டி அலுத்துவிட்டதால், முன்னாள் கைதியை குல்ஃபி ஐஸ்கிரீம் மாதிரியான பெண் காதலிப்பதாக ஜல்லியடித்திருக்கிறார்கள்.
பொதுவாகக் கதாநாயகன் எதிரிகளை விட்டு விளாசிக் கும்மியெடுத்துவிட்டு நடந்துவரும்போது ரசிகர்கள் கைதட்டுவார்கள். ஆனால் விஜய்சேதுபதி எகிடு தகிடாக அடிவாங்கித் திரும்பும்போது விசில் பறக்கிறது. அவர் என்ன செய்தாலும் ரசிப்பதற்கென்று ஒரு கூட்டம் இருக்கிறது. Note the point Mr. Vijay Sethupathy!
கொலைப் பழியை ஏற்றுச் சரணடையத் தயாராக இருக்கும் வேளையிலும், 'மழை வர்ற மாதிரி இருக்கு' என்று ரசனையோடு அடியாளின் அடியாள் கூறும் காட்சி நச். (அதே காட்சி மூலத்திலும் இருப்பதாக இணையத்தில் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.)
அந்தக் கால சுகன்யா போல, மடோனா வித்தியாசமான மூக்கு அமைப்புடன் நடிப்பில் கலக்குகிறார். மலையாள 'பிரேமம்' படத்தில் தூள் கிளப்பிய அதே மடோனாதானுங்க! இயல்பான நடிப்பு இவரது தனித்துவம். வாழ்த்துக்கள் மடோ!
சமுத்திரக்கனிக்கு இன்னும் அழுத்தமான வேடம் கொடுத்திருக்கலாம். அவரைக் கதாநாயகன் கொல்ல வலுவான காரணம் ஏதும் சொல்லப் படவில்லை.
எளிமையான திரைக்கதையை சிக்கல் இல்லாமல் படமாக்கியிருக்கிறார் நலன் குமரசாமி, சந்தோஷ் நாராயணின் இசை படத்தோடு ஒட்டிப் போகிறது. அதிலும் 'காகாபோ' பாட்டின்போது அரங்கமே கை தட்டல், விசிலால் அதிருகிறது.
'எஸ்கிமோ நாய்' என உவமிக்கப்படும்போது விஜய் சேதுபதியின் கோபம் சூப்பர். கதாநாயகி அப்பாவின் ஆன்மிக உரையாடலின்போது சேதுபதி காட்டும் ரியாக்ஷன் சிரிப்போ சிரிப்பு.
கதாநாயகி மதுவருந்தும் காட்சிகள் சர்வசாதாரணமாகக் காட்டப்படும் கலிகாலம் இது! அதுவும் குடித்துவிட்டு ஓர் ஆணை அணைத்தபடி ஒரே அறையில் உறங்குவது போலக் காட்டுவதெல்லாம் ரொம்ப ஓவர்! தவிர்க்க வேண்டிய காட்சி அது!
நிறுவனம் வேலையைவிட்டுத் தூக்கியதும் விரக்தியில் தனது அடையாள அட்டையைக் கதாநாயகி புதைப்பது, நேர்முகம் செய்பவர்களை சேதுபதி படுத்தி எடுப்பது போன்ற ரசிக்கத் தகுந்த காட்சிகள் அநேகம்.
காதலும் கடந்து போகும் - காண்பவரைக் கவர்ந்து போகும்!
திரையரங்கில் நெசப்பாக்கம் சி. கண்ணன் கருத்து: வித்தியாசமான கதை, படம் முழுக்க காமெடி, சோகமாயிருக்கிறவர்கள் பார்த்தால் நிச்சயம் வருத்தம் மறையும். படம் பிடிச்சிருக்கு