தினமலர் விமர்சனம்
ஸ்லீப்லெஸ் நைட்ஸ் எனும் பிரெஞ்சு நாவல் மற்றும் சினிமாவின் தழுவல் தான் கமல் நடித்துள்ள தூங்காவனம் படம்! வேட்டையாடு விளையாடு படத்திற்குப் பின் கமல் போலீஸ் அதிகாரியாக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படமான தூங்காவனம் .படத்தில் கமல் , நல்ல போலீஸா? கெட்ட போலீஸா..? அல்லது , நல்ல,கெட்ட .. போலீஸா ..? என்பது கடைசி வரை சஸ்பென்ஸ் . கூடவே, நாயகி த்ரிஷாவும் முதன்முதலாக போலீஸ் என்பது கூடுதல் சுவாரஸ்யம்!
ஒரு நேர்மையான காவல் அதிகாரி சற்றே நேர்மை தவறி,பணத்திற்காக செய்யக்கூடாததை எல்லாம் தன் அதிகாரத்தை பயன்படுத்தி செய்கிறார்... அவர் தான், போலீஸ் அதிகாரி கமல். ஒருநாள் போதைபொருள் கடத்தல் மாபியா பிரகாஷ்ராஜிடம் இருந்து, விலைமதிப்புமிக்க போதைப்பொருளை கமலே கடத்துகிறார்.இது,பெண் போலீஸ் த்ரிஷாவின் கண்களில் சிக்குகிறது.
இதற்கு பதிலடியாக, பல கோடி மதிப்புள்ள போதைப்பொருளை தன்னிடமிருந்து களவாடிய கமலிடமிருந்து தனது பொருளை திரும்பப்பெற, கமலின் மகனை கட்டம் கட்டி ,திட்டம் தீட்டி,கடத்துகிறார் பிரகாஷ்ராஜ்.
தான் கடத்திய விலைமதிப்புமிக்க போதைப்பொருளை, மகனை மீட்பதற்காக திருப்பிக்கொடுக்கும் முடிவிற்கு வருகிறார் கமல்.அந்த பொருளை தான் ஒளித்து வைத்த இடத்தில் போய் பார்க்கிறார். அங்கு அது இல்லை. கடத்தல் மாபியா பிரகாஷிடமிருந்து கமல் கடத்திய பொருள்போன இடம் எது ? கமல் அதைக் கண்டு பிடித்தாரா ?மகனை மீட்டாரா .? படத்தில் நாயகி த்ரிஷாவின் ரோல் என்ன..? கடத்தல்காரர் பிரகாஷிடமிருந்து, கமல், சரக்கை கடத்த காரணம் என்ன? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், ரசிகர்களை தியேட்டரில் தூங்கவிடாவண்ணம் விடை சொல்கிறது தூங்காவனம் படத்தின் மீதிபாதிக் கதை!
உலகநாயகன் கமல்ஹாசன் , நல்ல, கெட்ட போலீஸ் என்றாலும் ஆக்ஷனில் வழக்கம்போலவே. அசத்தியிருக்கிறார். கமலின் சமீபத்திய உத்தம வில்லன் , பாபநாசம் இரண்டு படங்களும் அவரது நடிப்பில் பேமிலி சென்டிமெண்ட்,டிராமாவுக்கு முக்கியத்துவம் அளித்து வந்ததாலோ என்னவோ , இதில் ஆக்ஷனில் தனக்கே உரிய ஸ்டைலில் டபுள் கோல் போட்டிருக்கிறார் எனலாம். கட்ஸாய் நடிக்கவும் , மிடுக்காய் உடம்பு காட்டவும் தமிழ் சினிமாவில் கமலை அடித்துக் கொள்ள ஆள் கிடையாது என்பதை மனிதர் மீண்டும் நிரூபித்திருக்கிறார். வாவ்!
த்ரிஷாவும் போலீஸ் டிரஸ்ஸில் அழகாக பொருத்தி அம்சமாக நடித்திருக்கிறார் ஆக்ஷனில் புயலாய் புறப்பட்டு இருக்கும் த்ரிஷாவிற்கு இப்படம் நிச்சயம் ஒரு மைல்கல் எனலாம்!
பிரகாஷ்ராஜ் கொஞ்சம் கேப்பிற்கு அப்புறம் தமிழ்த்திரையில் மிரட்டிஇருக்கிறார் அதுவும் கமலையே ஆட்டிவைத்திருக்கும் காட்சிகளில் பட்டையை கிளப்பி இருக்கிறார் .
கமல்,த்ரிஷா மாதிரி போலீஸாக வரும் கிஷோரும் கனஜோர். கமலின் சமீபத்திய ஆஸ்தான நடிகை ஆஷாசரத்,சம்பத், ஜெகன் ஆகியோரும் தாங்கள் ஏற்றிருக்கும் கேரக்டருக்கு வலு சேர்த்துள்ளனர் .
ஒளிப்பதிவாளர் சனு ஜான்வர்க்கீஸின் ஒளிப்பதிவு அட்டகாசம் . படத்தொகுப்பாளர் ஜான் மொகமத்தின் படத்தொகுப்பும் பலே , பலே ... தொகுப்பு !
ஜிப்ரானின் பின்னணி இசையும், வைரமுத்துவின் வைர வரிகளில் வரும் ஒரே ஒரு பாடலும் அதன்காட்சிபடுத்தலும் ரசனை!
இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வாவின் எழுத்து , இயக்கத்தில் , ஒரு சில, சின்ன சின்ன குறைகள் இருப்பினும் ., தூங்காவனம் திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு புதியதொரு விடியலை ஏழெட்டு வகையிலாவது ஏற்படுத்தி தரும் ...என நம்பலாம்.
ஆக மொத்தத்தில் , கமலின் தூங்காவனம் , வித்தியாசம், விறுவிறுப்பு விரும்பும் ரசிகர்களை தூங்கவிடாவண்ணம் நிச்சயம் படமாக்கப்பட்டிருக்கிறது எனலாம்!