ஹமாரி அதுரி கஹானி படம், பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத்திறமை கொண்ட மகேஷ் பட்டின் பெற்றோர்களான நானாபாய் பட் மற்றும் ஷிரின் முகம்மது அலி இடையேயான காதல் கதையே ஆகும். படம் தற்போது வெளியாகியுள்ளது. படம் நன்றாக உள்ளதா....இல்லையா என இனி காண்போம்...
வசுதா பிரசாத் (வித்யா பாலன்), தன் இளம்வயது மகனுடன் வசித்து வருகிறார். வசுதாவின் கணவர் ஹரி (ராஜ்குமார் ராவ்), சில ஆண்டுகளுக்கு முன் மாயமாகிறார். வசுதா, ஒரு ஹோட்டலில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில், அந்த ஹோட்டலுக்கு வரும் பெரும்செல்வந்தரான ஆரவ் ருபரேல் ( இம்ரான் ஹாஸ்மி), வசுதா மீது காதல் வயப்படுகிறார். நீண்ட மறுப்புகளுக்கிடையே, வசுதாவும், ஆரவ் மீது காதல்வயப்பட துவங்குகிறாள். இருவரும் சிறந்த காதலர்களாக வாழ்நது வருகின்றனர். இதனால், வசுதாவின் இருண்டகாலத்தில், சிறிது வசந்தம் வீச துவங்குகிறது. வசுதாவின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை படத்தின் மீதிக்கதை..
ஆஸிக் 2 மற்றும் ஏக் வில்லன் என்ற காதல் படங்களை இயக்கிய இயக்குநர் மோஹித் சூரி, இப்படத்தில் தோல்வியடைந்துவிட்டார் என்றே கூற வேண்டும். படத்தின் கதை மற்றும் களம் சிறப்பாக இருப்பினும், அதை தனது இயக்கத்தால், சுவாரசியமாக தர, இயக்குநர் மோஹித் தவறிவிட்டார். படத்தின் சில இடங்கள், தேவையற்றதாகவே உள்ளன. இதனால், படத்திற்கும், படம் பார்ப்பவர்களுக்கும் இடையே, ஒரு பெரிய இடைவெளி ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகிறது. ஷாகுப்தா ரபீக்கின் வசனங்கள், உணர்ச்சி கிலோ என்ன விலை என்று கேட்க வைக்கிறது. சீரியசான காட்சிகளிலும், வசனங்கள் சிரிப்பையே வரவைக்கின்றன.
இம்ரான் ஹாஸ்மி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இம்ரானுக்கு போட்டியாக, வித்யா பாலனும் போட்டி போட்டுக்கொண்டு நடித்துள்ளார். சிறந்த நடிப்பை இம்ரான் ஹாஸ்மி கொடுத்திருக்கும்போதிலும், அவரது நடிப்பில் இன்னும் மெருகேற வேண்டும். ராஜ்குமார் ராவ், சிறந்த சைக்கோ கணவராகவே வாழ்ந்திருக்கிறார்.
ஹமாரி அதுரி கஹானி படம், போர் அடிக்க செய்கிறது. உண்மையான காதலை விரும்புபவர்களுக்கு படம் நிச்சயம் பிடிக்கும்.