அவுனு படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை அடுத்து அவுனு 2 படத்தை எடுத்துள்ளனர். அவுனு ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் ஆகும். அவுனு படத்தின் இறுதியில் கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும், ஆவி கேப்டன் ராஜுக்கும் என்ன நடந்தது என்பதனை அறிய அவுனு 2 பார்க்க வேண்டும். அவுனு படத்தின் முடிவில் ஒரு தொடக்கத்தை இயக்குனர் வைத்திருந்தார். அதை தற்போது மீண்டும் துவக்கி இருக்கிறார்.
அவுனு படத்தின் முடிவில் ஆவி, கேப்டன் ராஜு, கதாநாயகன் மற்றும் கதாநாயகியை கடுமையாக தாக்கி இருக்கும். அவர்கள் திருமணமானவர்கள். அவுனு 2 வில் கணவன் மனைவி ஹர்ஷா ( ஹர்ஷவர்தன் ரானே) மற்றும் மோகினி (பூர்ணா) ஆகியோர் ஐதராபாத்தில் ஒரு புதிய வீட்டிற்கு குடி ஏறுகின்றனர். ஹர்ஷாவுக்கு ஏற்பட்ட காயங்கள் குணமானதை அடுத்து, இருவரும் காசி காசிக்கு செல்கின்றனர். அங்கு ஹர்ஷா தனது தாய் தந்தைக்கு திதி கொடுக்கின்றான். பின்னர் அங்கு ஒரு சாமியாரை பார்த்து தங்களுடைய மோசமான ஆவி அனுபவங்களை சொல்கிறார்கள். அவர் ஒரு தாயத்து தருகிறார். அதை பூர்ணா அணிந்து கொள்கிறார். பின்னர் அவர்கள் ஊர் திரும்பி விடுகின்றனர். அவர்கள் கொஞ்ச காலம் நிம்மதியாக வாழ்கின்றனர்.
இந்நிலையில் மீண்டும் ஆவி தொந்தரவு செய்ய ஆரம்பிக்கின்றது. அதனை அடுத்து ஹர்ஷா, சஞ்சனாவை (சஞ்சனா) அழைத்து வீட்டில் நடக்கும் அமானுஷ்யங்களை தெர்மல் கேமரா மூலம் படம் பிடிக்க சொல்கிறார். அவர்கள் ஆவியிடம் இருந்து எப்படி தப்பித்தனர்?அவர்கள் என்னென்ன செய்தனர்? கேமராவில் என்ன பதிவானது?இது தான் மீதி படம். இந்த படத்தின் முடிவும் ஒரு தொடக்கத்தை நோக்கியே சென்று இருக்கின்றது.
பூர்ணாவின் நடிப்பு பாராட்டத்தக்க வகையில் இருக்கின்றது. மொத்த படத்தையுமே அவர் தான் நேர்த்தியாக நகர்த்துகிறார். ஒரு புதிதாக திருமணமான பெண், ஆவி பயத்தில் என்னென்ன செய்வாரோ அதனை சிறப்பாகவே செய்து இருக்கிறார். இயக்குனர் ரவி பாபுவும் நன்றாகவே கையாண்டு இருக்கிறார். படம் 100 நிமிடங்கள் மட்டுமே ஓடுவதால் அலுப்பு ஏற்படாமல் விறுவிறுப்பாக செல்கின்றது. ஹீரோ ஹர்ஷவர்தன் ரானேயும் நன்றாக நடித்துள்ளார். சஸ்பென்ஸ் த்ரில்லர் என்றால் எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்க வேண்டும். ஆனால் அது மிஸ்ஸிங். ஒளிப்பதிவாளர் புபேஷ் பூபதி காட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். சேகர் சந்திராவின் பின்னணி இசை குறிப்பிடும்படியாக இல்லை.
மொத்தத்தில், அவுனு-2 எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமே...!