Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

அசல்

அசல்,Asal
14 பிப், 2010 - 00:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » அசல்

தினமலர் விமர்சனம்

ஆக்ஷன் படம் என்றாலும் அஜித்தின் அசல் குடும்ப கதைதான்! ஆமாம் பின்னே., சொத்துக்காக அஜித்தை கொல்லத்துடிக்கும் அவரது அண்ணன் - தம்பிகளின் ஆக்ஷனும், அதற்கு இவரது ரீயாக்ஷனும்தான் படம் என்றால் அசல் குடும்ப கதைதானே?

கதைப்படி பிரான்ஸ் நாட்டில் வசிக்கிறது அஜித்தின் மொத்த குடும்பமும். அஜித்தின் அங்கீகாரமில்லாத மனைவியின் வாரிசு அஜித். (என்ன குழப்பம்? படத்துல தல... அப்பா - மகன்னு டபுள் ஆக்ட்டுங்க!) அவரை அப்பா அஜித்தின் அங்கீகரிக்க்பட்ட மனைவியின் வாரிசுகள் சம்பத்துக்கும், ஆஹா ராஜீவ் கிருஷ்ணாவுக்கும் சின்ன வயது முதலே ஆகாது. எனினும் அப்பாவின் ஆசைப்படி அண்ணன் - தம்பியுடன் ஒற்றுமையாக வாழ்ந்து நேர்மையாக தொழில் செய்யத் துடிக்கும் அஜித்துக்கு குறுக்கே நிற்கின்றனர் மேற்படி இருவரும். அஜித்துக்கு தெரியாமல் ஆயுதக் கடத்தல், சட்டவிரோதம், தப்பு தண்டாக்கள் என வாழ ஆரம்பிக்கும் சகோதரர்கள் இருவரும் ஆரம்ப கட்டத்திலேயே சிக்கலில் மாட்டிக் கொள்ள, அவர்களுக்காக இந்தியா வரும் அஜித் சகோரர் ராஜீவ் கிருஷ்ணாவை கடத்தி வைத்திருக்கும் மும்பை நிழல்உலக தாதாவிடம் இருந்து அவரை அதிரடி ஆக்ஷனில் இறங்கி மீட்கிறார். ஆனாலும் அண்ணனுக்கும், தம்பிக்கும் அஜித் மீது பாசம் வரவில்லை. பகையே கூடுகிறது. மொத்த சொத்தையும் அப்பா அஜித், மகன் அஜித்துக்கு எழுதி வைத்திருப்பதால் மகன் அஜித்தை சுட்டு விட்டு மீண்டும் பிரான்ஸ் சென்று பெரிய வாழ்வு வாழ ஆரம்பிக்கின்றனர். அஜித் உண்மையிலேயே இறந்தாரா? இல்லை மீண்டும் உயிர்த்தெழுந்து பிரான்ஸ் சென்று சகோதரர்களை பழிவாங்கினாரா? சமீரா ரெட்டி - பாவனா என இரண்டு கதாநாயகிகளுக்கு படத்தில் என்ன வேலை.? யூகி சேது, பிரபு உள்ளிட்டவர்களுக்கு படத்தில் என்ன கேரக்டர்..? உள்ளிட்ட இன்னும் பல கேள்விகளுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பதில் சொல்கிறது அசல்!

கதை, திரைக்கதை, வசனம் என மூன்றிலும் அஜித், சரண், யூகிசேது கூட்டணி சும்மா ஜமாய்த்திருக்கிறது சபாஷ்!!

அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் அஜித் சும்மா தாடியும் - மீசையுமாக சக்கை போடு போடுகிறார்.  ராயல் லுக்கில் கோட்டும் சூட்டுமாக கலக்குகிறார். சண்டைக் காட்சிகளில் கரா‌த்தே, குங்பூ என அதிக சிரத்தை எடுத்திருக்கும் அஜித் அதை சாங் - டான்ஸ் காட்சிகளிலும் எடுத்திருந்தால் இன்னும் பேஷாக இருந்திருக்கும்.

பாவனா, சமீரா ரெட்டி என இரண்டு நாயகிகள். 15 வருடமா அஜித்துடன் பிரான்சில் இருந்தே பழகும் சமீராவைக் காட்டிலும், பத்தே நாளில் பாவனா அஜித்துடன் பச்சக் என ஒட்டிக் கொள்வது போலவே நம் மனதிலும் இடம் பிடித்து விடுகிறார். பலே பாவனா!

வில்லன்கள் சம்பத், ராஜீவ்கிருஷ்ணா, பிரான்ஸ் போலீஸ் சுரேஷ் (அட... நம்ம மாஜி ஹீரோ சுரேஷா இது?), பிரபு, சம்பத்தின் மாமா, யூகி சேது என ஒவ்வொருத்தரும் பாத்திரம் அறிந்து நடித்திருக்கின்றனர்.

பிரசாந்த் டி.மிஸ்சாலேவின் ஒளிப்பதிவு பிரான்ஸிலும் சரி, இந்தியாவிலும் சரி பிரமாதம்! பரத்வாஜின் பின்னணி இசை சூப்பர். பாடல்கள் ப்ச்!

க்ளைமாக்ஸில் போலீ்ஸ் சுரேஷ் பேசும் வசனங்களை தவிர்த்து அதுமாதிரி சீன்களை காட்சிப்படுத்தலிலேயே புரிய வைத்திருக்கலாம் என்பது உள்ளிட்ட இன்னும் சில குறைகளை நிறை செய்திருக்கலாம் இயக்குனர். என்றாலும் முதன் முதலாக அஜித்தின் இணை இயக்கமும், சரனின் இயக்கமும் ராயல்!

அசல் : ராயல் - ஸ்டைல்!

---------------------------------------
குமுதம் விமர்சனம்

அப்பா அஜித் தனது மனைவியின் மகன்களை நம்பாமல் துணைவியின் (கீப்) மகனான இளைய அஜித்துக்கு சொத்துக்களை எழுதி வைக்கிறார். இறக்கிறார். அதற்கப்புறமாக நான்தாண்டா ஒரிஜினல் என புகுந்து புறப்படுகிறார் அசல் அஜித்.

அசலை நிரூபிக்க டெக்னிக்கலாக முயற்சிக்கிறார்கள். பிரான்ஸ், மலேசியா என படம் முழுவதும் ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலில் மிரட்டலாக இருக்கிறது. அஜித்தின் அறிமுகம், அதற்கான பில்டப், சுருட்டு பிடிக்கும் ஸ்டைல் வகையறாக்கள் தல ரசிகர்களை நிச்சயம் குஷிப்படுத்தக் கூடியவை. அதிக வசனம் பேசாமல் இயல்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அஜித் காட்டும் கேஷூவலான மேனரிசங்கள் நம்மை கைதட்ட வைக்கின்றன.

டான் கேரக்டருடன் எப்போதும் ஒட்டிக்கொண்டே கொஞ்சம் உயரமான பெண்ணாகத் திரியும் வழக்கமான கேரக்டரில் சமீராரெட்டி. அஜித் - சமீரா காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். லூசுப் பெண்ணாக வரும் பாவனாவின் முகபாவனைகள் வெகு அழகு.

கதை கொஞ்சம் பழசுதான் என்றாலும் படத்தில் ஸ்டைலிஷான விஷயங்கள் பழசையும் பாலிஷாகக் காட்டுகின்றன.

படம் முழுவதும் அஜித் மட்டுமே வியாபித்திருக்கிறார் என்பதால் நிறைய இடங்களில் ரசிகர்களின் உற்சாகம்! ஆனால் ஒரே நேர்க்கோட்டில் பயணப்படும் திரைக்கதையும், அஜித் வேகமாக நடைபோடுவதும் பொதுவான சினிமா ரசிகனுக்கு கொஞ்சம் பொறுமையை சோதிக்கும் விஷயம்தான்!

இது தவிர சம்பத் ராஜீவ்கிருஷ்ணா, பிரதீப், கெல்லி என ஏகப்பட்ட வில்லன்கள் இருந்தும் படத்தில் விறுவிறுப்பு மிஸ்ஸிங். கெல்லி மட்டும் கொஞ்சம் வில்லத்தனம் காட்டுகிறார். பிரெஞ்சு போலீஸாக நம் பழைய ஹீரோ சுரேஷ். க்ளைமாக்ஸில் அவர் செய்யும் உட்டாலக்கடி வேலை சுவாரஸ்யமாக இருந்தாலும் எதிர்பார்த்ததுதான் என்பதால், ஒரு இம்பாக்ட் இல்லை. மற்றபடி, மும்பையின் கடலோர போட் துரத்தல், மலேசியா காட்சிகள் என பிரசாந்தின் ஒளிப்பதிவு குற்றாலக் குளுமை. ஆண்டனியின் எடிட்டிங் அற்புதம். யூகிசேதுவின் ஜனகராஜ் ஸ்டைல் காமெடிகள் ஓரளவே எடுபடுகின்றன.

பரத்வாஜின் இசையில் துஷ்யந்தன் பாட்டைத் தவிர வேறெதுவும் பரிமளிக்கவில்லை.

அசல் - 60% முலாம்- 40%,
குமுதம் ரேட்டிங் : ஓகே

----------------------------------------
விகடன் விமர்சனம்

அசல் வாரிசுகளின் சதியை முறியடித்து ""அசல்'' இடத்தைப் பிடிக்கும் நிழலின் கதை!

உலக அமைதி நடவடிக்கைகளுக்கென நேர்மையாக(!) ஆயுத வியாபாரம் செய்கிறார் அப்பா அஜீத். அவருடைய அசல் வாரிசுகள் சம்பத் மற்றும் ராஜீவ் கிருஷ்ணா.

முறையற்ற தொடர்பு மூலம் பிறந்தவர் மகன் அஜீத். அசல் வாரிசுகள் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆயுதங்களை விற்க முற்படுகிறார்கள். மகன் அஜீத்தின் விருப்பத்துக்கு ஏற்பத் தடை போடுகிறார்  அப்பா அஜீத். பிறகு என்ன நடக்கும்  என்பதை விவரிக்கவும் வேண்டுமோ?

பார்த்துச் சலித்த பங்காளிக் கதையை கிரிஸ்டல் க்ளியர் ஒளிப்பதிவு.பாரீஸ் ஸ்டைல்  காஸ்டியூம்களுடன் ககாட்டுகிறார் இயக்குனர் சரண்.  படத்தின் மேக்கிங் கலக்கல். ஆனால், கதை, திரைக்கதை... பாகப்பிரிவினை காலத்திலேயே நங்கூரம் இட்டிருக்கிறதே?

அண்டர்ப்ளே டான் கேரக்டருக்கு அஜீத் பக்கா. அப்பா அஜீத் இரண்டு  காட்சிகள் மட்டுமே இருமி விட்டு சொர்க்கம் சேருகிறார். மகன் ஸ்டைலாக இருந்தாலும் பில்லா பார்ட்2 போலவே நிற்கிறார், நடக்கிறார், சுருட்டுப் பிடிக்கிறார்,எதிரிகளைச் சுருட்டி எடுக்கிறார். அல்டிமேட் ஸ்டார் பட்டம் துறந்து, பன்ச் டயலாக் மறந்து அஜீத் நடித்திருப்பது ஆரோக்கிய ஆரம்பம். இருந்தாலும், படத்தில் காமெடியன் முதல் கர்ணகொடூர வில்லன் வரை அத்தனை பேரும் ""தல'' புராணம் பாடி தவில் வாசித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். அஜீத்துக்கு அடுத்து படத்தில் கவரும் ஒரே அம்சம் பிரசாந்த்தின் (அறிமுகம்) ஒளிப்பதிவு. பாரீஸ் ஈஃபில் டவரின் மேல் டாப் ஆங்கிளில் மிதக்கும் முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை படத்துக்கு ராயல் கலர்.

சமீரா ரெட்டி மாங்காய் ஊறுகாய் என்றால், பாவனா ஜஸ்ட் மட்டை ஊறுகாய். பேருக்கும்,சில ஊருக்கும் வந்து போகிறார்கள். அஜீத்தை உருகி உருகிக் காதலிக்கும் சமீரா, இறுதியில் பாவனாவுக்கு அஜீத்தை விட்டுக் கொடுக்கிறார். ஏன், எதற்கு? அஜீத் சட்டையை சமீராவைக் கழற்ற வைப்பதற்காக விறுவிறுவென புதுச்சட்டை வாங்கி வரும் இடத்தில் மட்டும் பாவனா முகத்தில் மின்னல் பாவனைகள்.

சாகசம் என்கிற பெயரில் யூகிசேது செய்யும் கோமாளித் தனங்கள் எரிச்சல் ரகம். வில்லன் சகோதரனாக சம்பத்தின் நடிப்பு செம பாலீஷ். காட்சிக்குக் காட்சி "பிரெஞ்சுப் போலீஸ் மேல கை வச்சா என்ன ஆகும் தெரியுமா?'' என்று உதார் விடும் சுரேஷ், இறுதிவரை கடத்தல் கும்பலோடுதான் திரிகிறார். என்ன போலீஸோ? பரத்வாஜின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹம்மிங் ரகம். ஹாலிவுட் சினிமா ஃபீல் கொண்டுவர முனைந்திருப்பது ஓ.கே.! ஆனால், அதற்காக வெளிநாட்டு இடங்களில் ஒரு ஹிந்தி போஸ்டரை ஒட்டி வைத்து ""மும்பை'' என்று போர்டு போடுவதெல்லாம் ரொம்ப ஓவர்.

பழைய எம்.ஜி.ஆர். பங்காளிக் கதை, கிளைமாக்ஸ் சங்கிலியை அறுக்கும் ""மனோகரா'' உதை, ""பில்லா''நடை, ""வட்டாரம்'' ஆயுத வியாபாரம் எனப் படம் முழுக்க நகல். அசலா ஒரு படம் பண்ணுங்க பாஸ்!

விகடன் மார்க் : 39/100



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

அசல் தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in