தினமலர் விமர்சனம்
பேய் பட சீசனில் வெளிவந்திருக்கும் மற்றுமொரு பேய் படம்! ஆனால் படமே பயமுறுத்துவதுதான் யூகனின் யூகிக்கமுடியாத சிறப்பு!..
நான்கு ஐ.டி.இளைஞர்கள், விளையாட்டுத்தனமான இவர்களை அவர்களது போக்கிலேயே தட்டிக்கொடுத்து வேலை வாங்கத் தெரியாது கண்மூடித்தனமாக கண்டிக்கும் லேடி டீம் லீடரை பழிவாங்குவதாக நினைத்து போட்டி கம்பெனிக்கு இவர்களது டீம் லீடர் உருவாக்கிய புரொஜெக்ட்டை அவரது இ.மெயில் ஐ.டி.யில் இருந்து அவனுக்கு தெரியாமல் அவர் அசந்த நேரம் அனுப்பி வைத்து விடுகின்றனர். இதனால் இவர்களது ஐ.டி.நிறுவனம் பெரும்நஷ்டத்தை சந்திக்கிறது. அதனால், குறுகிய காலத்தில் முன்னேறிய அந்த லேடி டீம் லீடருக்கு செம டோஸ் விழுகிறது. கூடவே போலீஸ் கேஸ்...என்று பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டிய சூழல்! அதனால் தற்கொலை செய்து கொள்கிறார் டீம் லீடர் நாயகி!
இந்தே விஷயம் தெரிந்த டீம் லீடர் நாயகியின் காதலர்., நான்கு நண்பர்களுடன் புதிய நண்பராய் கலந்து லேடி டீம் லீடரின் ஆவி உதவியோடு நால்வரையும் தீர்த்து கட்டுவதும், அதை போலீஸ், புலன்விசாரணை செய்து நாயகரை கைது செய்ய முயல்வதும் தான் யூகன் படத்தின் கரு, கதை, களம் எல்லாம்! இதை "யூகிக்க முடியாத அளவிற்கு படம் பண்ணுகிறேன்...பேர்வழி..." என யூகன் டீம் மொத்தமும் நம்மை ஒரு வழி பண்ணிவிடுவது தான் கொடுமை!
வினய் - யஷ்மித், டேவிட் - சித்து, ராகுல் - ஷாம், அமீர் - பிரதீப் பாலாஜி, அருண் - மனோஜ், பூஜா - சாக்ஷி அகர்வால், சக்தி - தருண் சக்ரவர்த்தி, ரகு - சுரேஷ்பிள்ளை, ராதா - மீனா, ரேகா - ஆயிஷா உள்ளி்ட்ட ஒவ்வொருவரும் புதுமுகங்கள் என்பதையும் தாண்டி பாத்திரமறிந்து பயமுறுத்தி, பயந்திருக்கின்றனர்!.
ரஷாந்த்சுர்வினின் இசையும், ரவி ஆறுமுகத்தின் ஒளிப்பதிவும் மிரட்ட முயன்று மிரண்டிருக்கின்றன!. கமல்.ஜி.யின் படத்தொகுப்பு, எழுத்து, இயக்கம் உள்ளிட்டவைகளில் எழுத்தில் இருக்கும் பெப் படத்தொகுப்பிலும், இயக்கத்திலும் இல்லாதது வருத்தம்!.
மொத்தத்தில் "யூகன்- பாவம் ரசிகன்!"