Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

நண்பேன்டா

நண்பேன்டா,Nanbenda
11 ஏப், 2015 - 10:11 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » நண்பேன்டா

தினமலர் விமர்சனம்


ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் படங்களைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் நடித்து வௌிவந்திருக்கும் மூன்றாவது படம் தான் நண்பேன்டா!


மூன்றாவது படத்திலேயே உச்ச நட்சத்திரமாகி விட்ட எண்ணத்தில் ஒவ்வொரு சீனிலும் உதயநிதி தவறாமல் தலை காட்டுவதும், ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களின் சாயலிலேயே சந்தானம் சதாய்ப்பதும் தான் நண்பேன்டா படத்தின் பலம், பலவீனம் எனலாம்!


தஞ்சாவூரை சேர்ந்தவர்கள் உதயநிதியும், சந்தானமும். சின்ன வயதிலிருந்தே நண்பர்களான இருவரில், சந்தானத்திற்கு திருச்சியில் வேலை! திருச்சியில் ஒரு மேன்சனில் அறை எடுத்து தங்கியிருக்கும் சந்தானத்தை தேடி வருகிறார் உதயநிதி. வந்த இடத்தில் தனியார் வங்கியில் வேலை பார்க்கும் நயன்தாராவை பார்த்ததும் பார்த்த மாத்திரத்திலேயே காதல் கொள்கிறார். உதயநிதி காதலிப்பதற்கு வசதியாக சந்தானத்தின் மேன்சன் எதிரிலேயே இருக்கும் லேடீஸ் ஹாஸ்டலில் தான் நயன்தாராவும் இருக்கிறார். இது உதயநிதிக்கு வசதியாக போய்விடுகிறது. ஆனால் நயன்தான் பாவம், உதயநிதி மீது உடனடியாக காதல் வர மறுக்கிறது நயனுக்கு! விடுவாரா., உதயநிதி..? சந்தானம் வேலைபார்க்கும் 2.5 ஸ்டார் ஹோட்டலிலேயே ஒரு வேலையை வாங்கி கொண்டு நயனை விடாமல் துரத்துகிறார்.


கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் எனும் பழமொழிக்கு ஏற்ப ஒருக்கட்டத்தில் நயன், உதயநிதியின் லவ்வுக்கு ஓ.கே., சொல்கிறார். கூடவே தான் ஒரு கொலைகாரி என்றும், ஒரு கொலையை செய்துவிட்டு சிறை தண்டனை அனுபவித்து திருந்தியவள்... என்றும் ஒரு குண்டைத் தூக்கி போடுகிறார். இதில் அதிர்ச்சியாகும் உதயநிதி, அதன்பின்பும் நயனை காதலித்து, கரம்பிடித்தாரா.? நயன் செய்த கொலைதான் என்ன...? எனும் கேள்விகளுக்கு, சந்தானம், கருணா, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்வர்களின் காமெடி கலாட்டக்களையும் கலந்துகட்டி விடை சொல்ல முயன்றிருக்கிறது நண்பேன்டா படத்தின் மீதிக்கதை. அதை கொஞ்சம் புதுசாகவும், வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருந்தால் நண்பேன்டா ரசிப்போம்டா எனும் ரீதியில் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும்!


ஹீரோ உதயநிதி ஸ்டாலின், நண்பர் சந்தானத்துடன் சேர்ந்து செய்யும் சேட்டைகள் முன்கூட்டியே பல படங்களில் பார்த்த மாதிரியும், யூகிக்கும் படியாகவும் இருப்பது பலவீனம். அதேநேரம் முந்தைய படங்களைக்காட்டிலும் ஆட்டம் பாட்டத்தில் அதிக கவனம் செலுத்தி இருக்கும் உதய்யை பாராட்டலாம்! நயன் ஆத்திரத்தில் நாயை கொன்று தான் சிறைக்கு சென்றார்... என்பதை ஊரெல்லாம் சொல்லி சிரிப்பதும், அவரது காதலுக்கு அவரே ஆப்பு வைத்துக் கொள்வதும், இந்த விமர்சனத்தில் நண்பேன்டா படத்தின் பிரதான சஸ்பென்ஸான நயன், நாயை கொன்றதை நாம் குறிப்பிட்டுள்ளது மாதிரியே ஓவராக தெரிகிறது. எதில் எதில் எல்லாம் காமெடி என்பதை இயக்குநரும், உதயநிதியும் இன்னம் கொஞ்சம் யோசித்திருக்கலாம்!


நயன்தாரா வழக்கம் போலவே நச் என்று இருக்கிறார், நடித்'திமிரு'க்கிறார். நயன்தான், நண்பேன்டா படத்தின் பெரும்பலம்!


சந்தானம் முன்பாதி படத்தை கலகல என்றும், பின்பாதி படத்தை வளவள என்றும் வறுத்தி இருக்கிறார்.


கொஞ்சம் குண்டடித்த ஷெரீன் இன்னும் செக்ஸி குயின்! காமெடி சந்தானத்திற்கு சாலப்பொருத்தமாக இருக்கிறார் அம்மணி!


தஞ்சையில் உதயநிதி, சந்தானத்துடன் ஒன்றாக படித்து இன்ஸ் ஆக திருச்சி வரும் கருணாவின் இம்சை கூடுதல் காமெடி! நான் கடவுள் ராஜேந்திரன், ஹோட்டல் முதலாளி சித்ரா லெட்சுமணன் உள்ளிட்டவர்களின் சிரிப்பு சேட்டைகளும் ஓ.கே.! மனோபாலா தான் கடி! அவரது நாயை நயன் எட்டி உதைத்து, அது அரை தென்னைமரம் உயரத்திற்கு பறந்து போய் விழுந்து இறப்பதும், அதை ஆதங்கமாக உதயநிதியிடம் சொல்வதும், நயனின் காதலுக்காக காத்திருக்கும் அவர் இதை ஊரெல்லாம் சொல்லி சிறைக்கு சென்றவர்களுக்கு தான் அந்த வலியும், வேதனையும் தெரியும் என்று கூறி செல்வதும், அதனால் நண்பர் சந்தானத்தையும் கூட்டிக் கொண்டு, செய்யாத ஒரு குற்றத்திற்காக உதய்., மறுப்பேதும் பெரிதாக காட்டாது ஜெயிலுக்கு செல்வதும், அங்கிருந்து தப்பிப்பதும், மறுநாள் ரிலீஸ் என்பது தெரிந்ததும் மீண்டும் சிறைக்கு செல்வதும்... யப்பா... ரசிகர்களை ஜெயிலில் தள்ளும் அளவிற்கு இழுவையாக படம் பிடிக்கப்பட்டிருப்பது கொட்டாவி விட வைக்கிறது! (என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா.?)


இதுமாதிரி விஷயங்களை கம்மி பண்ணி உதயநிதியின் பெற்றோராக வரும் ஷாயாஜி ஷிண்டே, ஸ்ரீரஞ்சனியின் எபிசோட், நயனின் தோழி பூஜா, நான் கடவுள் ராஜேந்திரன், ராஜசிம்மன் உள்ளிட்டவர்களின் சீன்களை இன்னும் கொஞ்சம் பில்டப் செய்திருக்கலாம்!


பாலசுப்ரமணியத்தின் ஔிப்பதிவும், ஹாரீஸின் இசையும் வழக்கம் போலவே படத்திற்கு பெரும்பலம். விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பு பல் இளிப்பது பலவீனம்!


மொத்தத்தில், புதியவர் ஏ.ஜெகதீஷின் இயக்கத்தில், நண்பேன்டா - முன்பாதி ரசிகர்களுக்கு தோழனடா! பின்பாதி துரோகமடா!!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

நண்பேன்டா தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in