தினமலர் விமர்சனம்
ஒரு வெற்றிப்படம் நீண்ட நெடுநாட்களாக வேண்டி காத்திருக்கும் நடிகர் பரத்தும், நந்திதா நாயகியாக நடித்தாலே வெற்றி! எனும் ஹிட் சென்டிமெண்ட் உடைய நடிகை நந்திதாவும் ஜோடி சேர, இளமை துள்ளலுடன், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் நல்லாசியுடன், 'ராஜம் புரொடக்ஷ்ன்ஸ்' தயாரிப்பில்(ஏன்? கவிதாலயாவுக்கு என்னாச்சு..?!) வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ''ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி''.
பரம்பரை பரம்பரையாக சித்த வைத்தியம் செய்து செம துட்டும், பெயரும் புகழும் சேர்த்து வைத்திருக்கும் குடும்பம் சிகாமணி-பரத்தின் பெரிய குடும்பம். அதனால் படிக்காமலேயே டாக்டர் ஆகிவிடும் பரத்தும், அவரது அம்மா ரேணுகாவிற்கும், படித்த பெண் ஒருத்தியை கல்யாணம் கட்ட வேண்டுமென்பது லட்சியம்! அதனால், மகளிர் கல்லூரின் ஒன்றின் முன் கிட்டத்தட்ட கால்கடுக்க தவமிருந்து நந்தினி - நந்திதாவை தேடிப்பிடித்து கரம் பிடிக்கிறார். அதுவும் பரத்தை எம்பிபிஎஸ்., டாக்டர் என நம்பும் நந்திதாவின் முரட்டு அப்பா தம்பி ராமைய்யாவின் நம்பிக்கையை கெடுக்க விரும்பாத பரத்தும், அவரது தாய் உள்ளிட்ட சித்த வைத்திய கோஷ்டியும் எம்பிபிஎஸ். டாக்டராகவே நடிக்க, பரத்-நந்திதா திருமணம் இனிதே நடந்தேறுகிறது. அப்புறம், அப்புறமென்ன.? பரத் படிக்காத சித்த வைத்திய மருத்துவர் என்பது தெரியவரும்போது, பரத்துக்கும் அவரது குடும்பத்திற்கும் நந்திதாவாலும், அவரது அப்பா தம்பி ராமைய்யாவாலும் ஒரு பெரும் அதிர்ச்சி வைத்தியம் தரப்படுகிறது. அது என்ன? என்பதும் பரத் - நந்திதா ஜோடி இது மாதிரி பிரச்னைகளால் இறுதிவரை இணைந்திருந்ததா.? இல்லையா.?! என்பதும் தான் 'ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி' படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மிதமிஞ்சிய காமெடியுடன் கூடிய கதை!
பரத், வழக்கம்போல லவ், ஆக்ஷ்ன், மென்டிமெண்ட்டுகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். அதிலும் பரத்துக்காகவே காமெடி 'கம் லவ்' சப்ஜெக்ட்டான 'ஐ.த.சி.வை.சிகாமணி' படத்தில், பரத் வாயால் வலிய பிற வைத்தியர்களை 'போலி' என வம்புக்கு இழுத்து, அவர்கள் படத்தின் ஓப்பனிங்கிலும், க்ளைமாக்ஸிலும் கூலிப்படையை வைத்து பரத்தை துவைத்தெடுக்க அனுப்ப, பரத் கூலிப்படையை வறுத்தெடுக்கும் ஆக்ஷன் காட்சிகளை திணித்து, பரத் ரசிகர்களை திருப்திபடுத்தி இருக்கிறார் இயக்குநர்!
நந்திதா, 'நச்' என்று இருக்கிறார். ஆனால், படிக்காத அவர் கல்லூரி போகும் கதையும், கல்யாணத்திற்கு அப்புறம் போஸ் வெங்கட்டிடம் 'ஏபிசிடி' பயிலும் விதமும் போர் அடிக்கிற புரியாத புதிர்.
தம்பி ராமைய்யா, கருணாகரன், மயில்சாமி, சிங்கம் புலி, படவா கோபி, எம்.எஸ்.பாஸ்கர், மதன்பாப், சாம்ஸ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட காமெடி பட்டாளத்தில், சாம்ஸூம், தம்பி ராமைய்யாவும் கிளாப்ஸ் அள்ளுகின்றனர்.
சைமனின் இசை, பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள், எல்.ஜி.ரவிச்சந்தரின் எழுத்து-இயக்கத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
''முழு மனித உடம்பில் மொத்தம் 207 எலும்புகள், 5 லிட்டர் இரத்தம், 3 லட்சம் நரம்புகள் தான் இருக்கும்....'' என்பது உள்ளிட்ட நிறைய மெடிசன் மெஸேஜூகளை காமெடியாக சொல்லி இருப்பதற்காக பழைய பாணி கதை, காட்சியமைப்புகள்... என்றாலும், ''ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணியை, ஒருமுறைக்கு இருமுறை பார்க்கலாம், ரசிக்கலாம், சிரிக்கலாம்!!