Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2017ல் அதிகம் பேசப்பட்ட படங்கள் : ஓர் பார்வை

30 டிச, 2017 - 18:40 IST
எழுத்தின் அளவு:
Which-tamil-movies-talk-and-criticise-in-2017?

2017ம் ஆண்டில் தமிழ் சினிமா பல ஏற்றங்களையும், இறக்கங்களையும், சர்ச்சைகளையும், பிரச்சனைகளையும் சந்தித்திருக்கிறது. வெளிவந்த 200 படங்களில் 150 படங்கள், திரைப்படங்கள் என்ற வகையில் சேருமா என்பதும் சந்தேகம்தான்.

டிஜிட்டல் சினிமா என்பது இப்போது மிக எளிதாகிப் போனதால் யாரிடமும் உதவி இயக்குனர்களாக இல்லாதவர்கள், முன்பின் எந்தவிதமான சினிமா அனுபவமும் இல்லாதவர்கள் திரைப்படம் எடுக்க வந்துவிடுகிறார்கள். இதனால் கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவின் தரம் குறைந்துவிட்டதாக பல மூத்த திரைப் பிரபலங்கள் தெரிவிக்கிறார்கள்.

அனுபவசாலிகள் எடுத்த படங்களே பாக்ஸ் ஆபீசில் படுத்துவிடும் போது, புதுமுகங்களின் படங்கள் எப்படி ஓடும். இந்த ஆண்டில் ஓடியதோ, ஓடவில்லையோ சில படங்களைப் பற்றி ரசிகர்களும், திரையுலகத்தினரும் பரபரப்பாகப் பேசினார்கள். அப்படிப் பரபரப்பை ஏற்படுத்திய படங்களைப் பற்றிப் பார்ப்போம்.

பைரவா

2016ல் வெளிவந்த 'தெறி' வெற்றிக்குப் பிறகு விஜய்யை அடுத்து இயக்கப் போகும் இயக்குனர் யார் என்று பரபரப்பு ஏற்பட்டது. யாரும் எதிர்பாராமல் 'அழகிய தமிழ் மகன்' படத்தை இயக்கிய பரதன் அந்த வாய்ப்பைத் தட்டிச் சென்றார். அவர் இயக்கத்தில் இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளிவந்த 'பைரவா' வெற்றியைப் பெறாமல் தோல்வியைத் தழுவியது. இந்தப் படத்தில் விஜய்யின் ஹேர்-ஸ்டைலும், கீர்த்தி சுரேஷின் அந்த குதித்து, குதித்து ஆடும் நடனமும் அதிகம் பேசப்பட்டது.

போகன்


'தனி ஒருவன்' படத்தின் வெற்றிக் கூட்டணியான ஜெயம் ரவி, அரவிந்த்சாமி மீண்டும் இணைந்து நடித்ததால் இந்தப் படம் பேசப்பட்டது. ஜெயம் ரவி உடலுக்குள் அரவிந்த்சாமியும், அரவிந்த்சாமி உடலுக்குள் ஜெயம் ரவியும் புகுந்து கொண்டு ஆடிய, நல்லவன், கெட்டவன் ஆட்டத்தை ரசிகர்கள் அதிகம் ரசிக்கவில்லை. படத்தில் இமான் இசையமைப்பில் 'செந்தூரா...' பாடல் சூப்பர் ஹிட்டானது.

சி 3

'சிங்கம் 3, எஸ் 3', கடைசியில் 'சி 3' ஆக மாறியது. ஹரி, சூர்யா கூட்டணியில் இதற்கு முன் வெளிவந்த 'சிங்கம், சிங்கம் 2' படங்களின் வெற்றியைத் தொட முடியாமல் 'சி 3' சிக்கிக் கொண்டது. இப்படி ஒரு தோல்வியை திரையுலகினரும், ரசிகர்களும் எதிர்பார்க்கவில்லை. 'அஞ்சான்' படத்திற்குப் பிறகு சூர்யாவுக்கு பெரிய அடியைக் கொடுத்த படம். அடுத்த ஆண்டில் வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படமாவது அவரை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லட்டும்.

குற்றம் 23

அருண் விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த இந்த த்ரில்லர் படம் யாரும் எதிர்பார்க்காத ஒரு வெற்றியைப் பெற்றது. 'என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக நடித்த பிறகு அருண் விஜய் மீண்டும் நாயகனாக நடித்த படம் எப்படி போகும் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், எதிர்பார்ப்பை மீறி இந்தப் படம் வெற்றி பெற்றது.

மாநகரம்

அறிமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழில் அதிகப் பிரபலம் இல்லாத சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்த படம். அறிமுக இயக்குனரிடமிருந்து இப்படி ஒரு அசத்தலான த்ரில்லரை யாரும் எதிர்பார்க்கவில்லை. விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், வியாபார ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது.

டோரா


நயன்தாரா நடித்து இந்த ஆண்டில் வெளிவந்த படமான 'டோரா' படம், 2017ல் வெளிவந்த 'மாயா' படம் போல வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அப்படியெல்லாம் அமையாமல் 'டோரா' எதிர்பாராத தோல்வியைத் தழுவியது. 'மாயா' பேயை 'டோரா' பேயால் மிஞ்ச முடியவில்லை.

கவண்

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் இணைந்து நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பு வந்த போதே, இது என்ன வித்தியாசமான கூட்டணியாக இருக்கிறதே என பலரும் பேசினார்கள். படம் வந்த பிறகும் அந்த பேச்சு இருந்தது. மீடியா விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு போரடிக்காத ஒரு அரசியல், ஆக்ஷன் படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்தார் இயக்குனர்.

காற்று வெளியிடை

மணிரத்னம் இயக்கத்தில் அவரிடம் ஒரு காலத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய நடிகர் கார்த்தி, நடிக்கப் போகிறார் என்றதுமே இந்தப் படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமானது. ஆனால், படம் வந்த பிறகு அனைவரது எதிர்பார்ப்பும், ஏமாற்றம் ஆனது. மணிரத்னம் தான் ஏமாற்றினார் என்று பார்த்தால் கூடவே ஏ.ஆர்.ரகுமானும் சேர்த்து ஏமாற்றினார். கார்த்திக்கு பொருத்தமில்லாத ஜோடியாக அதிதி ராவ் ஹைதரி இருந்தார் என்றே அனைவரும் சொன்னார்கள்.

பா பாண்டி

நடிகர் தனுஷ் முதல் முறையாக இயக்கும் படம் என்பதால் இந்தப் படம் பற்றி ஆரம்பத்திலேயே பேச்சு எழுந்தது. பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் தனுஷுக்குள் ஒரு ரசனையான இயக்குனர் ஒளிந்திருக்கிறார் என்பதை இந்தப் படம் காட்டியது. ராஜ்கிரணின் நடிப்பும், ஷான் ரோல்டனின், 'வென்பனி மலேரே'... பாடலும் ரசிகர்களைக் கவர்ந்தன.

பாகுபலி 2

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா என படத்தில் பிரமிக்க வைத்த பல விஷயங்கள் அமைந்தன. தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்து இவ்வளவு பெரிய வசூலை தமிழ்நாட்டில் பெற்றது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக அமைந்தது. தமிழ்நாட்டில் அதிகம் பேர் பார்த்த படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றது. கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார் என்பதற்கான விடை அதிகம் பேசப்பட்டது.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன்

இந்தப் படம் ஆரம்பமாகும் போது அப்படி ஒரு பரபரப்பான பேச்சை எழுப்பியது. வழக்கம் போல சிம்பு படத்திற்கு என்னவெல்லாம் பிரச்சனை வருமோ அது இந்தப் படத்திற்கும் வந்தது. முழு படத்தை முடிக்க முடியாமல் ரசிகர்களை ஏமாற்றி படத்தின் முதல் பாகம் என ஒரு அறிவிப்பு செய்து படத்தை வெளியிட்டார்கள். சினிமாவையும் ரசிகர்களையும் சிம்பு மொத்தமாக ஏமாற்றிவிட்டார். இரண்டாம் பாகம் இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும் வர வாய்ப்பில்லை.

விக்ரம் வேதா

கணவன், மனைவியான புஷ்கர் - காயத்ரி இதற்கு முன் 'ஓரம் போ, வ' ஆகிய இரண்டு படுதோல்விப் படங்களை இயக்கியவர்கள். இவர்கள்து இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதியா என பலரும் வியந்தார்கள். ஆனால், அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கி, படத்தின் வரவேற்பு மூலமும், வசூல் மூலமும் பலருக்கும் பேரதிர்ச்சியைக் கொடுத்தார்கள். இந்த ஆண்டின் மிகச் சிறந்த படங்களில் இந்தப் படம் முதலிடத்தில் உள்ளது.

வேலையில்லா பட்டதாரி 2

தனுஷ் நடித்து வெளிவந்த 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தை அவருடைய மைத்துனியான சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார் என்றதும் படம் பற்றிய பேச்சு அதிகம் இருந்தது. 'மின்சாரக் கனவு' படத்திற்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து கஜோல் மீண்டும் தமிழுக்கு வந்தார். இந்தப் படம் மூலம் அவரையும் ஏமாற்றி, ரசிகர்களையும் ஏமாற்றிவிட்டார்கள்.

விவேகம்

2017ம் ஆண்டில் வேறு எந்தப் படத்தின் தோல்வியாவது இந்த அளவிற்குப் பேசப்பட்டிருக்குமா என்ற பேச்சை ஏற்படுத்திய படம் 'விவேகம்'. சிவா, அஜித் கூட்டணியில் வந்த இந்தப் படத்தை படம் பார்த்த அனைவருமே விமர்சிக்கத் தொடங்கியதுதான் படத்தின் மிகப் பெரும் சோகம். மீண்டும் இந்த கூட்டணி 'விஸ்வாசம்' படத்தில் இணைந்திருப்பதன் அதிர்ச்சியிலிருந்து இன்னும் பலர் மீளவில்லை.

ஸ்பைடர்

தெலுங்குத் திரையுலகத்தின் விஜய் ஆக இருப்பவர் மகேஷ் பாபு. சென்னையில் பிறந்து வளர்ந்தவர் பெரிய ஆசையுடன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால், அவருடைய ஆசையை நிராசையாக்கிவிட்டார் இயக்குனர் முருகதாஸ். அடுத்து ஒரு நல்ல இயக்குனர், கதை மூலம் மகேஷ் பாபு தமிழுக்கு வருவாரா என்பது சந்தேகத்திலும் சந்தேகமானது.

ஹரஹர மகாதேவகி

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கேவலமான படம் இதுவரை வந்திருக்குமா என்பது தெரியாது. 2017ம் ஆண்டில் அந்தப் படத்திற்குப் 'அறம், அருவி' போன்ற படங்கள் வந்ததால் நாம் தப்பித்துக் கொண்டோம். தமிழ் சினிமா ரசிகர்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்லும் ஆசையில் இருக்கும் இப்படத்தின் அறிமுக இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார், அடுத்த வருடம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'வாக வர இருக்கிறார். தமிழ் சினிமாவை இருட்டுக்கு அழைத்துச் செல்லாமல் விட மாட்டர் போலிருக்கிறது.

மெர்சல்

ஜிஎஸ்டி பற்றிய ஒரு வசனமும், டிஜிட்டல் இந்தியா பற்றிய மற்றொரு வசனமும் இந்தப் படத்தை உலக அளவில் பேச வைத்துவிட்டது. அப்படி பேச வைத்தவர்களின் புண்ணியத்தால் 200 கோடி வசூலை இந்தப் படம் கடந்திருக்கிறது என்கிறார்கள். அப்படியிருந்தும் தயாரிப்பாளருக்கு 25 கோடி ரூபாய் நஷ்டம் என்பதுதான் சோகச் செய்தி. தயாரிப்பாளருக்கு அப்படி ஒரு மெர்சலான அனுபவத்தைக் கொடுத்துவிட்டார் இயக்குனர் அட்லி.

அறம்

நயன்தாராவா இப்படிப்பட்ட ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த படம். அறிமுக இயக்குனர் கோபி நயினார், 'மெட்ராஸ், கத்தி' கதை விவகார சர்ச்சையில் அதிகம் பேசப்பட்டவர். ஒரு வித்தியாசமான படத்தைக் கொடுத்ததன் மூலம் அவரைப் பற்றியும் அதிகம் பேச வைத்துவிட்டார்.

தீரன் அதிகாரம் ஒன்று

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம். தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த போலீஸ் படங்களிலேயே மிகவும் வித்தியாசமான படம். 'சதுரங்க வேட்டை' படம் மூலம் 2014ம் ஆண்டில் பேசப்பட்டவர் மூன்று வருடங்கள் கழித்து ஒரு படத்தை இயக்கியிருந்தாலும் இந்த ஆண்டிலும் அதிகம் பேசப்பட்டார்.

அருவி

ஒரு படத்தின் வெற்றி அந்தப் படம் சம்பந்தப்பட்ட அனைவரையும் பேச வைக்க வேண்டும். அப்படி படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகை என அனைவரைப் பற்றியும் பேச வைத்த படம் இது. அறிமுக இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தமன், அறிமுக நடிகை அதிதி பாலன் இவர்களுடன் படம் சம்பந்தப்பட்ட பலரும் அவர்களைப் பற்றிப் பேச வைத்தார்கள். ரஜினிகாந்தின் பாராட்டையும், தங்கச்சங்கிலி பரிசையும் பெற்ற படம்.

இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் இயக்குனராக, இசையமைப்பாளராக, நடிகர்களாக, நடிகைகளாக சிலர் மட்டுமே பரபரப்பாகப் பேசப்பட்டனர். 200 படங்களில் பத்து பேர்தான் பரபரப்பை ஏற்படுத்தியவர்களாக இருந்தார்கள். அவர்களுக்குத்தான் மீடியாக்களும், ரசிகர்களும் அதிக முக்கியத்தவத்தைக் கொடுத்தார்கள். வரும் ஆண்டில் இன்னும் பல பேர் பரபரப்பாக பேசப்படட்டும்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது! சந்திரிகா ரவிதமிழ் சினிமா ரொம்ப மாறி விட்டது! ... 2018 - திரை நட்சத்திரங்களின் புத்தாண்டு சபதங்கள் 2018 - திரை நட்சத்திரங்களின் புத்தாண்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

31 டிச, 2017 - 06:46 Report Abuse
susainathan vivegam movie Blockbuster in worldwide
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film ONGALA PODANUM SIR
  • ஒங்கள போடணும் சார்
  • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
  • நடிகை : சனுஜா சோமநாத்
  • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
  Tamil New Film Kadhal Munnetra Kazhagam
  Tamil New Film Charlie Chaplin 2
  • சார்லி சாப்ளின் 2
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
  Tamil New Film Kanchana 3
  • காஞ்சனா 3
  • நடிகர் : ராகவா லாரன்ஸ்
  • நடிகை : வேதிகா ,ஓவியா
  • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in