கார்த்தியுடன் மூன்றாவது முறையாக இணையும் ரஜிஷா விஜயன் | பிளாஷ்பேக்: தீய செயலைக் கூட தூய செயலாய் மாற்றிக் காட்டிய மக்கள் திலகத்தின் “ஒளிவிளக்கு” | மீண்டும் சினிமாவில் நடித்து ரசிகர்களை மகிழ்விப்பேன்! - சிவராஜ்குமார் வெளியிட்ட தகவல் | ஜனநாயகன் படத்தில் புரட்சிகரமான வேடத்தில் விஜய்! | மோகன்லால்க்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன் | தனுஷிற்கு ஜோடி கிர்த்தி சனோன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கார் விபத்தில் உயிர் தப்பிய இமான் அண்ணாச்சி! | ரவி மோகன் படம் : விலகிய ஹாரிஸ் ஜெயராஜ், இணைந்த சாம் சிஎஸ் | மாதவன், கங்கனா படத்தில் கவுதம் கார்த்திக் | இரவு 11 முதல் காலை 11 மணி வரை: சிறார்களுக்கு தியேட்டர்களில் அனுமதி இல்லை: தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு |
2024ம் ஆண்டின் காலாண்டு நிறைவு பெற்றுவிட்டது. இந்த காலாண்டு தமிழ் சினிமாவைக் காப்பாற்றாமல் கலங்க வைத்துத்தான் கடந்து போய் உள்ளது. ஏதாவது ஒரு படமாவது முத்திரை பதித்துவிடாதா என திரையுலகினரும், விமர்சகர்களும் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஏமாற்றம்தான் மிஞ்சியது.
கடந்த வருட முடிவின் போது இந்த 2024ம் ஆண்டில் ஏறக்குறைய அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியாகும் என்று அனைவருமே ஆச்சரியப்பட்டார்கள். இந்த மூன்று மாதத்தில் வந்த சில முக்கிய படங்கள் கூட ஆச்சரியத்தைத் தராமல் அதிர்ச்சியைத்தான் தந்தன.
ஏற்றம் தருமா ஏப்ரல்
தேர்தல் பிரச்சாரம், பிரீமியர் லீக் கிரிக்கெட், தேர்வுகள் என இந்த ஏப்ரல் மாதமும் பரபரப்பாகவே நகரப் போகிறது. இருப்பினும் தேர்தல் பிரச்சாரம், தேர்வுகள் ஏப்ரல் 19க்குள் முடிவடைந்துவிடப் போகிறது. எனவே, மாதக் கடைசி முதல் தமிழ் சினிமாவிற்கு ஏற்றத்தைத் தரும் மாதமாக ஏப்ரல் மாதம் இருக்கப் போகிறது என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
மூன்று மாதத்தில் 60 படங்கள்
கடந்த மார்ச் மாதம் வெளியான படங்களுடன் சேர்த்து இந்த காலாண்டில் வெளியான படங்களின் எண்ணிக்கை 60ஐக் கடந்துவிட்டது. இதே நிலை தொடர்ந்தால் கடந்த 2023ம் வருடத்தைப் போல இந்த ஆண்டிலும் 250க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
வாரவாரம் அணிவகுத்த படங்கள்
மார்ச் 1ம் தேதி “அதோ முகம், அய்யய்யோ, ஜோஷுவா, போர், சத்தமின்றி முத்தம் தா” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த 'ஜோஷுவா' படம் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கவுதம் மேனன் என்ற பெயருக்காகக் கூட ரசிகர்கள் தியேட்டர்கள் பக்கம் வரவில்லை என்பது அதிர்ச்சியாகவே இருந்தது. அவருடைய ரீ-ரிலீஸ் படத்திற்குக் கூட தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருகிறார்கள். இப்படி ஒரு படத்தை கவுதம் எப்படி எடுத்தார் என்பதும், இந்த புதிய படத்திற்கு ரசிகர்கள் வராமல் போனதற்கான காரணமாகவும் இருக்கும். 'போர்' படத்தையெல்லாம் எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. நிஜத்திற்கும் நிழலுக்குமான பெரும் வித்தியாசம் அம்மாதிரியான படங்களில் இருக்கிறது. 'அதோ முகம்' படம் ஒரு நல்ல முயற்சியாக இருந்தது. ஆனால், படத்தை ரசிகர்களிடம் சரியாகக் கொண்டு போய் சேர்க்காமல் விட்டுவிட்டார்கள்.
மார்ச் 8ம் தேதி “அரிமாபட்டி சக்திவேல், கார்டியன், ஜே பேபி, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, சிங்கப்பெண்ணே, உணர்வுகள் தொடர்கதை” ஆகிய படங்கள் வெளிவந்தன. 'கார்டியன்' படத்தில் ஹன்சிகா கதாநாயகியாக நடித்ததால் ஓரளவிற்கு வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நம் ரசிகர்கள் ஹன்சிகாவையே மறந்துவிட்டார்கள் என்பது படம் வந்த பிறகுதான் தெரிந்தது. பா ரஞ்சித் தயாரிப்பில் வந்து வந்த சுவடு தெரியாமல் போன மற்றொரு படமாக 'ஜே பேபி' படம் அமைந்தது. இந்தப் படங்களுக்கே இப்படி ஒரு நிலை என்றால் மற்ற படங்களைப் பற்றி சொல்லவா வேண்டும்.
மார்ச் 15ம் தேதி “ஆராய்ச்சி, அமிகோ காரேஜ், காடுவெட்டி, யாவரும் வல்லவரே” ஆகிய படங்கள் வெளிவந்தன. புதிய படங்கள் வெளிவந்த ஒரு நாள் என்பதைத் தவிர அந்தப் படங்களைக் குறிப்பிட்டு சொல்லும்படி ஒன்றுமில்லை.
மார்ச் 22ம் தேதி “சிட்டு 2020, முனியாண்டியின் முனி பாய்ச்சல், ரெபல்” ஆகிய படங்கள் வெளிவந்தன. ஜிவி பிரகாஷ்குமார் நாயகனாகவும், 'பிரேமலு' புகழ் மமிதா பைஜு நாயகியாகவும் நடித்த படம் என்பதால் ஓரளவிற்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், மலையாளிகளைப் பற்றிய ஒரு தவறான கண்ணோட்டத்தை வெளிப்படுத்திய படம் என்பதாலோ என்னமோ தெரியவில்லை, இந்தப் படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை.
மார்ச் 29ம் தேதி “பூமர் அங்கிள், எப்புரா, ஹாட்ஸ்பாட், இடி மின்னல் காதல், நேற்று இந்த நேரம், த பாய்ஸ், வெப்பம் குளிர் மழை” ஆகிய ஏழு படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'ஹாட்ஸ்பாட், வெப்பம் குளிர் மழை' ஆகிய படங்கள் நல்ல விமர்சனங்களைப் பெற்றன. இருந்தாலும் கிரிக்கெட், தேர்தல் பிரச்சாரம், தேர்வுகள் காலத்தில் இவை அதிக கவனத்தைப் பெறாமல் போய்விட்டன.
மாற்றம் தந்த மஞ்சும்மேல் பாய்ஸ்
இந்த காலாண்டில் 60 படங்கள் வந்துவிட்டது, ரசிகர்கள் விரும்பும் அனைத்து அம்சங்களும் பொருந்திய ஒரு படம் கூட வெளிவரவில்லை என்பது மாபெரும் வருத்தமான விஷயம். அதே சமயம் நேரடி மலையாளப் படமான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படம் கடந்த மார்ச் முழுவதும் ஓடி, இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஒரு மலையாளப் படம், ரசிகர்களுக்கு அறிமுகமில்லாத மலையாள நடிகர்கள் நடித்த ஒரு படம் இப்படி ஓடி 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதை ஒரு முறை யோசித்துப் பார்த்தால் மொழி, நடிகர்கள் பிரபலம் ஆகியவற்றைக் கடந்து ரசிகர்கள் இப்படத்தை ரசித்தது புரிய வரும். 33 ஆண்டுகளுக்கு முன்பு வந்த 'குணா' ரெபரன்ஸ் ஒரு காரணம் என்று சிலர் சொன்னாலும் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அதை ரசித்துப் பார்க்கும் மன நிலையில் ரசிகர்கள் உள்ளார்கள் என்பதும் புரியும்.
நல்ல படங்களைக் கொடுங்கள், நடிகர்கள் முக்கியமில்லை என தமிழ் சினிமா ரசிகர்களும் இங்குள்ள படைப்பாளிகளுக்கு உணர்த்தியுள்ளார்கள். குறை அவர்களிடம்தானே தவிர ரசிகர்களிடமில்லை.
2024 - மார்ச் மாதம் வெளியான படங்கள்…
மார்ச் 1 : அதோ முகம், அய்யய்யோ, ஜோஷுவா, போர், சத்தமின்றி முத்தம் தா
மார்ச் 8 : அரிமாபட்டி சக்திவேல், கார்டியன், ஜே பேபி, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, சிங்கப்பெண்ணே, உணர்வுகள் தொடர்கதை
மார்ச் 15 : ஆராய்ச்சி, அமிகோ காரேஜ், காடுவெட்டி, யாவரும் வல்லவரே
மார்ச் 22 : சிட்டு 2020, முனியாண்டியின் முனி பாய்ச்சல், ரெபல்
மார்ச் 29 : பூமர் அங்கிள், எப்புரா, ஹாட்ஸ்பாட், இடி மின்னல் காதல், நேற்று இந்த நேரம், த பாய்ஸ், வெப்பம் குளிர் மழை