Advertisement

சிறப்புச்செய்திகள்

ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

என்னதான் நடக்கிறது.... பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் தமிழ் சினிமா சங்கங்கள்...!

05 டிச, 2016 - 11:54 IST
எழுத்தின் அளவு:
What-happend-in-Tamil-cinema-:-lot-of-issues-in-Tamil-Cinema-association
Advertisement

திருட்டு டிவிடி விவகாரம் தொடங்கி, திரைப்படத்துறை தொழிலாளர்களின் சம்பள விவகாரம் வரை திரைத்துறையில் ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. இவற்றைக் கவனிக்க வேண்டியது, களைய வேண்டியது திரைத்துறையில் உள்ள அமைப்புகள்தான். யாருடைய கண்பட்டதோ தெரியவில்லை... நடிகர் சங்கம், பெப்சி என்கிற தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட இயக்குநர்கள் சங்கம், ஒளிப்பதிவாளர்கள் சங்கம் என திரையுலகில் உள்ள முக்கிய அமைப்புகளில் பிரச்சனைகள் தலைதூக்கி, சங்கங்கள் செயல்பட முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன.


30-க்கும் மேற்பட்ட சங்கங்கள் : தமிழ்த்திரைப்படத்துறையில் ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட சங்கங்கள் உள்ளன. இவற்றில் சில ஒன்றுக்கும் உதவாத சங்கங்கள். இவற்றை தவிர்த்துவிட்டுப் பார்த்தால்... உருப்படியான பல சங்கங்களும் திரைத்துறையில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் கில்டு, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகிய மூன்று சங்கங்களும் தயாரிப்பாளர்களுக்கான அமைப்புகள்.


தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என்பது நடிகர், நடிகைகளுக்கான சங்கம். இந்த சங்கங்கள் தவிர, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், இசையமைப்பாளர்கள் சங்கம், ஒளிப்பதிவாளர்கள் சங்கம், ஒலிப்பதிவாளர்கள் சங்கம், நடன கலைஞர்கள் சங்கம், சண்டைக் கலைஞர்கள் சங்கம், துணை நடிகர்கள் சங்கம், டப்பிங் கலைஞர்கள் சங்கம், கலை இயக்குநர்கள் சங்கம், படத்தொகுப்பாளர்கள் சங்கம் என ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனி அமைப்புகள் உள்ளன. தயாரிப்பாளர்களுக்கான மூன்று அமைப்புகள் தவிர்த்து மேற்குறிப்பிட்ட இந்த சங்கங்கள் உட்பட 24 சங்கங்கள் தொழிலாளர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளாக இருக்கின்றன. அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களாக மட்டுமல்ல, இந்த 24 சங்கங்களும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) என்ற கூட்டமைப்பின் கீழ் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.


இத்தனை சங்கங்களும் பல வருடங்களாக ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது சாதாரண விஷயமில்லை. 24 சங்கங்களுக்கு இடையில் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றை சமாளித்து திறம்பட செயலாற்றி வந்தன. ஆனால், கடந்த சில மாதங்களாக திரைப்படத்துறையைச் சேர்ந்த பல சங்கங்களில் கோஷ்டி சண்டைகள் உண்டாகி, சண்டை சச்சரவு ஒரு தரப்பு மீது இன்னொரு தரப்பு காவல்துறையில் புகார், நீதிமன்றத்தில் வழக்கு என தினம் தினம் மீடியாவில் செய்தியாகிக் கொண்டிருக்கின்றன.


கோஷ்டி பூசல் : பொதுவாக, சங்கங்களுக்குள் இரண்டு கோஷ்டிகள் இருப்பதும், ஒரு கோஷ்டியினர் மீது மற்றொரு கோஷ்டியினர் புகார் கூறுவதும் வழக்கமான ஒன்றுதான். தன்னை எதிர்க்கும் கோஷ்டியை அதிகாரத்தில் இருக்கும் இன்னொரு கோஷ்டி ஓரங்கட்டுவதும் எல்லா சங்கங்களிலும் நடப்பதுதான். எனினும், திரைப்படத்துறையில் உள்ள சங்கங்களில் இந்த பிரச்சனை அதிகமாக உள்ளது. அல்லது பூதாகரப்படுத்தப்படுகிறது. முக்கியமாக, திரைப்படத்துறை சார்ந்த சங்கங்கள் என்பதால் உடனடியாய் ஊடகங்களின் கவனத்துக்கு வந்து விடுகின்றன.


ஊழல் புகார் : இது ஒருபுறம் இருந்தாலும், திரைப்படத்துறையை சேர்ந்த பல சங்கங்களில் இப்போது ஊழல் புகாருக்கும் குறைவில்லை. இதன் காரணமாகத்தான் பல சங்கங்களில் கலகக்குரல்கள் பலமாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இதற்கு முன் இப்படிப்பட்ட புகார்கள், பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டிருந்தாலும் அண்மைக்காலத்தில் மக்களை திரும்பிப்பார்க்க வைத்தது - தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஏற்பட்ட பிரச்சனைதான்.


நடிகர் சங்கம் பிரச்னை : சரத்குமார் தலைமையில் இயங்கிய நிர்வாகத்தினர் நடிகர் சங்கத்தின் இடத்தை சத்யம் தியேட்டர் நிறுவனத்துக்கு குத்தகை விட்டதை விஷால் தட்டிக் கேட்டார். அதற்கு எதிர்வினையாக நடிகர் சங்கத்தின் செயலாளர் ராதாரவி எடக்கு மடக்காக பதில் சொன்னார். அதனால் நடிகர் சங்க விவகாரம் சூடு பிடித்தது. அதன் தொடர்ச்சியாய் எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைத்து பாண்டவர் அணியை உருவாக்கினார் விஷால். அவரது பின்னால் இளையதலைமுறை நடிகர்கள் அணி திரண்டனர். நடிகர் சங்க தேர்தலில் ராதாரவியை வெற்றி கண்டு செயலாளர் ஆனார். நாசரோ சரத்குமாரை வெற்றிகண்டு தலைவரானார். விஷால் அணியினர் பதவிக்கு வந்ததும் சரத்குமார் நிர்வாகத்தில் நடைபெற்ற ஊழலை கண்டு பிடித்தார்கள். விளக்கம் கேட்டார்கள். உரிய விளக்கம் வராதநிலையில் சரத்குமார், ராதாரவி இருவரையும் நடிகர் சங்கத்திலிருந்து நிரந்தரமாக நீக்கிவிட்டார்கள்.


தயாரிப்பாளர் சங்கத்தில் தினம் தினம் பஞ்சாயத்து : நடிகர் சங்கம் இப்படியாக இருக்க, தயாரிப்பாளர் சங்கத்திலோ தினம் தினம் பஞ்சாயத்துதான். தலைவர் தாணு ஒரு கோஷ்டி, செயலாளர் டி.சிவா இன்னொரு கோஷ்டி என்று தயாரிப்பாளர் சங்கத்திலும் ஏகப்பட்ட கோஷ்டிகள். ஒரு படம் எடுத்தவர்கள் எல்லாம் தலைவர் கனவில் மிதக்கின்றனர். போதாக்குறைக்கு கடந்த தேர்தலில் தாணுவை தோற்கடித்து தலைவராக இருந்த கேயார் ஒரு கோஷ்டி. இவர்கள் மட்டுமின்றி அரை படம் எடுத்தவர்கள் எல்லாம் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கோஷ்டியை வைத்துக் கொண்டு குட்டையைக் குழப்பிக் கொண்டு வருகின்றனர். மொத்தத்தில் தயாரிப்பாளர் சங்கமே செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது.


கட்டப்பஞ்சாயத்து : திரைப்படங்களுக்கு அரசு மானியம் பல வருடங்களாக வழங்கப்படவில்லை, திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படவில்லை, வரிவிலக்கு வழங்க 50 லட்சம் லஞ்சமாக பெறப்படுகிறது, திருட்டு டிவிடி விவகாரம் என தயாரிப்பாளர்களுக்கு ஏகப்பட்ட தலைவலிகள். அதைப் பற்றி எல்லாம் ஒரு நொடி கூட யோசிக்காமல் கவுன்சிலில் கோஷ்டிகானம் பாடிக்கொண்டிருக்கின்றனர். சங்கத்துக்குள் இப்படிப்பட்ட பஞ்சாயத்துகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கட்டப்பஞ்சாயத்து கூடமாகவும் மாறிவிட்டது என்று குற்றம்சாட்டுக்குள்ளாகி இருக்கிறது - தயாரிப்பாளர்கள் சங்கம். நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் பக்கம் சாய்ந்தது, ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் உள்விவகாரத்தில் தலையிட்டது, இயக்குநர் சங்கத்துக்குள் தங்களுக்கு சம்மந்தமே இல்லாத விஷயங்களில் எல்லாம் தலையைக் கொடுப்பது என கடந்த சில மாதங்களாக பல்பு வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.


சிறு படத்தயாரிப்பாளர்களுக்கான சங்கமாக பல வருடங்களாக இயங்கி வருகிறது கில்டு அமைப்பு. இப்படி ஒரு அமைப்பு இருப்பதே சினிமாவில் உள்ளவர்களுக்கே தெரியாது. அந்தளவுக்கு அமைதியாக இயங்கி வந்த அமைப்பில் ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம் என்றைக்கு உள்ளே நுழைந்தாரோ அன்றைக்கு ஆரம்பித்தது பிரச்னை. அங்கே பல வருடங்களாக நிர்வாகத்தில் இருந்தவர்களை விரட்டியத்துவிட்டு தானே அதிகாரத்தைக் கைப்பற்றினார். அதன் பிறகு தன்னைத்தானே செயலாளராக அறிவித்துக் கொண்டார். பிறகு தலைவராக மாறினார். பதவியை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுவருவதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் காரணமாக ஜாகுவார் தங்கம் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு அவரது பதவி பறிக்கப்பட்டதாக அண்மையில் தகவல் வெளியானது. அப்படியும் கூட அவரேதான் இன்னமும் தலைவராக திரிந்து கொண்டிருக்கிறார்.


பதிவே ரத்தான பரிதாபத்தில் இயக்குநர்கள் சங்கம் : விக்ரமன் தலைமையில் இயங்கும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கமும் கடந்த சில மாதங்களாக பிரச்சனையில் மாட்டிக்கொண்டு முழிக்கிறது. 100க்கும் மேலான மாணவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கிக் கொடுக்காமல் வேந்தர் மூவீஸ் மதன் தலைமறைவானபோது, எஸ்.ஆர்.எம்.கல்வி நிலையத்தின் தலைவரான பாரிவேந்தர் என்கிற பச்சமுத்துவின் பெயரும் அடிபட்டது. அப்போது சம்மந்தமே இல்லாமல், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ஊடகங்களை அழைத்து பச்சமுத்து நல்லவர் என்றும், அவர் மோசடி பேர்வழி அல்ல என்றும் நற்சான்றிதழ் கொடுத்தனர். இப்படி தனக்கு சம்மந்தமே இல்லாத விஷயத்தில் தலையைக் கொடுத்து இவர்கள், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பதிவை கடந்த நான்கு வருடங்களாக புதுப்பிக்காமல்விட்டுவிட்டனர். சங்கத்தின் பெயரை தற்போது ஒரு உதவி இயக்குநர் தன் பெயரில் பதிவு செய்து கொண்டுவிட்டார். அதனால் சங்கத்துக்கு பேர் இல்லாமல் முகவரி இழந்து நிற்கிறது திரைப்பட இயக்குநர்கள் சங்கம்.


ஒளிப்பதிவாளர் சங்கத்திலும் ஊழல் புகார் : திரைப்பட இயக்குநர் சங்கத்தின் லட்சணம் இப்படி என்றால், ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் நிலைமையும் பரிதாபகரமாகத்தான் இருக்கிறது. நடிகர் சங்கம் மற்றும், திரைப்படத்துறையில் உள்ள வேறு பல சங்கங்களும் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி இருப்பது போலவே தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்திலும் ஏகப்பட்ட பிரச்சனைகள். இங்கு நிலவும் பிரச்சனைக்கு காரணம், ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள்.


இந்த சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளான, என்.கே.விஸ்வநாதன் (முன்னாள் தலைவர்), ஜி.சிவா (முன்னாள் பொதுச்செயலாளர்) கே.எஸ். செல்வராஜ் (முன்னாள் பொருளாளர்) ஆகியோர் பதவியில் இருந்தபோது 40 லட்சத்துக்கு மேல் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டுகிறது பி.சி.ஸ்ரீராம் தலைமையிலான புதிய நிர்வாகக்குழு. இந்த குற்றச்சாட்டு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளதோடு, முன்னாள் நிர்வாகிகள் மீது நிர்வாக ரீதியாகவும், சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்க சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


அதன் அடிப்படையில் மூவர்மீதும் நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் பி.சி.ஸ்ரீராம் தலைமையிலான புதிய நிர்வாகக்குழுவினர் சில தினங்களுக்கு முன் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் நிர்வாகிகள் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு சிறைத் தண்டனை கிடைப்பது உறுதி என்று தற்போதைய நிர்வாகத்தினர் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.


சமரச முயற்சி : அந்த நம்பிக்கையை நசுக்குவதுபோல் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜி.சிவாவுக்கு ஆதரவாக தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும், இயக்குநர்கள் சங்க நிர்வாகிகளும் இந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்துள்ளனர். ஜி. சிவா மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும், காவல்துறையில் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கும்படியும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் தாணு, ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் மூலம் தற்போதைய நிர்வாகிகளுக்கு தூதுவிட்டுள்ளார். அதை ஒளிப்பதிவாளர்கள் சங்கம் அலட்சியப்படுத்தியதால், தற்போது பேச்சுவார்த்தைக்கு வரும்படி இயக்குநர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து கடிதம் மூலம் அழைப்புவிடுத்திருக்கிறது. இது பற்றி தாணுவிடம் கேட்டால், சினிமாத்துறையில் உள்ள சங்கங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர்களை அழைத்தோம் என்கிறார். ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயல், ஒளிப்பதிவாளர் சங்க உறுப்பினர்களை ஆவேசப்பட வைத்திருக்கிறது.


"நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி மீது தற்போதைய நிர்வாகக்குழு நடவடிக்கை எடுத்தது போன்றதொரு நடவடிக்கையையே ஒளிப்பதிவாளர் சங்கமும் பண மோசடி செய்த முன்னாள் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது ஒளிப்பதிவாளர் சங்கத்தின் உள்விவகாரம். இதில் தயாரிப்பாளர் சங்கமோ, இயக்குநர்கள் சங்கமோ தலையிட உரிமையில்லை. எனவே அவர்கள் அழைப்பை நிராகரிக்க வேண்டும்" என்று பல உறுப்பினர்கள், தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.சி.ஸ்ரீராமிடம் வலியுறுத்தி வருகின்றனர்.


வாட்ஸ் மூலம் கண்டனம் : இதற்கிடையில், தயாரிப்பாளர் சங்கமும், இயக்குநர்கள் சங்கமும் கட்டப் பஞ்சாயத்து செய்ய வருவதை கண்டித்து ஒளிப்பதிவாளர்கள் வாட்ஸ்அப் மூலம் தங்களின் கண்டனத்தை பகிர்ந்து வருகின்றனர். "சிவா விசயத்தில், தயாரிப்பாளர், இயக்குநர் சங்கங்கள், குற்றம் சாட்டப்பட்டுள்ள சிவா பதவியிலிருக்கும் ஃபெப்சியுடன் சேர்ந்து நமது சங்கத்தை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. குற்றம் சாட்டப்பட்டவருக்கு தேவைக்கும் அதிகமான கால அவகாசம் கொடுக்கப்பட்டும், பொய்யான விளக்கங்கள் கொடுக்கப்பட்டதாலேயே நமது தலைமை சரியான, தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்பதே என் போன்ற உறுப்பினர்கள் பலரது எண்ணம். மேலும் இது நமது சங்கத்தின் உள்விவகாரம். இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதன் மூலம், நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட, முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட நமது சங்கத்தின் சுதந்திரமான செயல்பாட்டை, உரிமையை அடகு வைக்கும் இடத்திற்கு தள்ளப்படுகிறோமோ என்கிற ஐயம் என் போன்றவர்களுக்கு ஏற்படுகிறது.


தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சங்கத்தோடு நாம் நட்புறவுடன் செயல்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வேண்டுமானால், நடந்தவைகளை விளக்கி நாம் பதில் கடிதம் எழுதலாம். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர் தலைமைப் பொறுப்பிலிருக்கும் அமைப்பின் உந்துதலில் நடக்கும் ஒரு பேச்சுவார்த்தைக்கு நம் சங்கம் நிர்பந்திக்கப்படுவதை நாம் ஏற்பது நியாயமாகாது. இது சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாய் இருந்துவிடும் என்பது எமது தாழ்மையான எண்ணம். சங்கத்தின் உள்விவகாரத்தில் வேறு சங்கங்கள் கட்டப் பஞ்சாயத்து செய்ய வருவதை நாம் அனுமதிக்கலாகாது என்பதும் எமது எண்ணம். சங்கத்தில் பொறுப்பில் உள்ள பெரியோர்களிடம் இந்த எண்ணத்தை தயவு செய்து பகிரவும். என்று வாட்ஸ்அப்பில் ஒரு பதிவை அனுப்பியுள்ளனர் முன்னணி ஒளிப்பதிவாளர்களான யூ.கே.செந்தில்குமாரும், விஜய் கே சக்ரவர்த்தியும்.


சங்கத்தின் நலனில் அக்கறையோடும், தலைமையின் மீதான மரியாதையோடும் என்ற பின்குறிப்போடு, வாட்ஸ்அப்பில் வலம் வரும் இந்த பதிவு இளம் ஒளிப்பதிவாளர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் இயக்குநர்கள் சங்கத்துக்கு எதிராக ஒளிப்பதிவார்கள் சங்கம் தன் எதிர்ப்பைக்காட்ட உள்ளதாகவும் தகவல்.


இந்த சங்கங்கள் மட்டுமின்றி, திரையுலகில் உள்ள மற்ற சங்கங்களிலும் சின்னச்சின்னதாக பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அங்கே செலிபிரிட்டிகள் யாருமில்லை என்பதால் அவை வெளியே தெரியாமல் இருக்கின்றன. மற்றதுறைகளில உள்ள சங்கங்களில் இல்லாத அளவுக்கு சினிமாத்துறையில் உள்ள சங்கங்களில் மட்டும் ஏன் இப்படி பிரச்சனைகள்?


திரைப்படத்துறையில் உள்ள சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்றால், நுழைவுக்கட்டணமாக லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கின்றன. இப்படி வசூலிக்கப்பட்ட பணம் ஒவ்வொரு சங்கத்திலும் கோடிக்கணக்கில் இருப்பு உள்ளன. நிர்வாகத்தில் இருப்பவர்களால் இந்தப் பணத்தை கையாள மட்டுமல்ல, கள்ளக்கணக்கு எழுதி களவாடவும் முடியும். திரைப்பட சங்கங்களில் நிலவும் எல்லா பிரச்சனைகளுக்கும் இதுதான் அடிப்படையான விஷயம்.


இப்போது புரிந்திருக்குமே?


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in