விவாகரத்து வழக்கு ; தனுஷ் - ஐஸ்வர்யா நேரில் ஆஜர் : பிரிவதில் இருவரும் உறுதி | விமர்சனங்கள், தியேட்டர் கருத்துக்கள்…தடுக்க முடியுமா? | ஏ.ஆர்.ரஹ்மான் குழுவிலிருந்த பெண் 'கிடாரிஸ்ட்' விவாகரத்து | மம்முட்டி, மோகன்லால் இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | 30 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷா ஜப்பான் பயணம் | பிளாஷ்பேக்: 40 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீமேக் ஆன தெலுங்கு படம் | மொபைல் எண் விவகாரம் : 'அமரன்' குழுவுக்கு மாணவர் நோட்டீஸ் | 'ஏஞ்சல்' பட விவகாரம்: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக்: திடீர் வில்லன் ஆன எம்.ஜி.ஆர் | அமராவதியில் 'கேம் சேஞ்சர்' விழா : பவன் கல்யாண் வருவாரா? |
2023ம் ஆண்டில் தியேட்டர்கள், ஓடிடி தளங்கள் என 250 படங்கள் வரை வெளியானது. அது போலவே இந்த ஆண்டிலும் அதிகமான படங்கள் வெளியானால் ஆச்சரியப்படுவதற்கில்லை. எத்தனை படங்கள் வந்தால் என்ன அவற்றில் எத்தனை படங்கள் வெற்றி பெறுகிறது, வசூல் ரீதியாக லாபம் தருகிறது என்பது மட்டுமே கடைசியாக தேவைப்படுகிறது.
100 கோடி முதல் 600 கோடி வசூல் என வந்தாலும் அதில் எவ்வளவு லாபம் என்பதே கேள்வி. மொத்த வசூல் எவ்வளவு என்பது பெரிதல்ல, வரிகள், இதர செலவினங்கள், கமிஷன் தொகைகள் என கழிக்க வேண்டியதை எல்லாம் கழித்து கடைசியாக எவ்வளவு லாபம் தந்தது என்பதை மட்டும்தான் பார்க்க வேண்டும். ஆனாலும், சில நடிகர்களின் ரசிகர்கள் மொத்த வசூல் தொகையே ஏதோ ஒரு சாதனை வசூல் என பரப்பி விடுகிறார்கள். அதெல்லாம் எதற்கும் பயனில்லை. பல கோடி முதலீடு செய்த தயாரிப்பாளரும், படத்தை வாங்கியவர்களும் நஷ்டமில்லாமல் ஏதோ 'நாலு காசு' சம்பாதித்தோம் என்பதே ஒரு படத்திற்கான பெருமை.
இந்த 2024ம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் சுமார் 17 படங்கள் வெளியாகியுள்ளன. தியேட்டர்களில் 16 படங்களும், ஓடிடி தளத்தில் ஒரு படமும் வெளியாகியுள்ளது.
பொங்கல் ரிலீஸ்
ஜனவரி மாதம் என்றாலே பொங்கல் வெளியீடுகள் முக்கியமானவை. இந்த வருடப் பொங்கலுக்கும் சில முக்கியமான படங்கள் வெளிவந்தன. தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்', சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்', விஜய் சேதுபதி நடித்த 'மெர்ரி கிறிஸ்துமஸ்', அருண் விஜய் நடித்த 'மிஷன் சாப்டர் 1' ஆகிய படங்கள் வெளியாகின. இவற்றில் 'கேப்டன் மில்லர், அயலான்' ஆகிய படங்கள் உலக அளவில் 75 கோடி வசூலைக் கடந்ததாகச் சொன்னார்கள். அவ்வளவு வசூலைக் கடந்தாலும் அந்தப் படங்கள் லாபகரமான படங்களாக அமைந்தா என்பது குறித்து கோலிவுட்டில் சந்தேகத்தை எழுப்புகிறார்கள். தமிழக வசூலைப் பொறுத்தவரயில் அவற்றின் வியாபாரத்துடன் ஒப்பிடும் போது இரண்டு படங்களுமே இதுவரையில் லாபத்தைத் தரவில்லை என்கிறார்கள். 'மிஷன் சாப்டர் 1' படம் ஓரளவிற்கு வசூலித்த நிலையில், 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படம் என்ற ஒரு படம் வந்ததா என்பது கூட பலருக்குத் தெரியாமல் போனது மிகவும் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.
படங்களே வெளியாகாத வெள்ளிக்கிழமை
பொங்கலுக்கு முந்தைய முதல் வெள்ளிக்கிழமையான ஜனவரி 5ம் தேதி 'அரணம், எங்க வீட்ல பார்ட்டி, கும்பாரி, உசுரே நீதான்டி' ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்தப் படங்களில் எத்தனை படங்களை ரசிகர்களை சென்றடைந்தது, எத்தனை பேர் தியேட்டர்களுக்கு வந்து பார்த்தார்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் அலசி ஆராய்ந்து அவர்களது அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டும்.
படங்களே வெளியாகாத வெள்ளிக்கிழமை என்பதை கடந்த சில வருடங்களாக அபூர்வமாகத்தான் பார்க்க முடிந்தது. ஆனால், இந்த வருடத்தின் முதல் மாதத்தில் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் ஒரு படம் கூட வெளிவராமல் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஜனவரி 19ம் தேதியன்று ஒரு படம் கூட வெளியாகவில்லை.
மின்னிய 'ப்ளூ ஸ்டார்'
குடியரசு தினத்தை முன்னிட்டு அதற்கு முந்தைய நாளான ஜனவரி 25ம் தேதி 'ப்ளூ ஸ்டார், முடக்கறுத்தான், சிங்கப்பூர் சலூன், தூக்குதுரை' ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'ப்ளூ ஸ்டார்' படத்திற்கு விமர்சன ரீதியாக குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைத்தது. வியாபார ரீதியாக லாபத்தைத் தரும் அளவிற்கான வெற்றியா என்பது இனிமேல்தான் தெரியும். இருந்தாலும் படத்தின் 'சக்ஸஸ் பார்ட்டி'யை படக்குழுவினர் தனியாகவும், பத்திரிகையாளர் சந்திப்பிலும் கொண்டாடிவிட்டார்கள். சாந்தனு, பிரித்வி ஆகியோருக்கு இப்படம் திருப்புமுனையைத் தந்துள்ளது. அறிமுக இயக்குனர் ஜெயகுமாருக்கு அடுத்த படம் சீக்கிரமே கிடைக்கலாம்.
ஆர்ஜே பாலாஜி நடித்து வெளிவந்த 'சிங்கப்பூர் சலூன்' படம் சுமாரான விமர்சனத்தைத்தான் பெற்றது. காமெடி படமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் சீரியஸ் படமாக அமைந்தது. இப்படத்தின் வசூலும் எதிர்பார்த்த அளவு இல்லை என்றுதான் சொல்கிறார்கள். இருப்பினும் படக்குழுவினர் இன்று(பிப்., 1) சக்சஸ் மீட் வைத்துள்ளார்கள்.
ஜனவரி 26ம் தேதி 'லோக்கல் சரக்கு, நியதி, த நா, தென் தமிழகம்' ஆகிய படங்களைப் பற்றிய தகவல்களைத் தேடித் தேடித்தான் எடுக்க வேண்டியிருந்தது. 'லோக்கல் சரக்கு' படத்தில் யோகிபாபுவும் நடித்திருக்கிறார். விஜய் நடித்த 'சுறா' படத்தை இயக்கிய எஸ்பி ராஜ்குமார்தான் இப்படத்தை இயக்கியுள்ளார். அனுபவசாலியான இயக்குனரே இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கத் தவறிவிட்டார். மற்ற படங்கள் இந்த ஆண்டு திரைப்பட பட்டியலின் எண்ணிக்கையைக் கூட்ட வெளிவந்துள்ள படங்கள்.
ஓடிடி தாக்கமா... இல்லை தரமான படங்கள் இல்லையா...
கொரோனாவுக்குப் பின்னர் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துவிட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரும் அது மாறவில்லை என்பதை திரையுலகினர் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒரு பக்கம் ஓடிடியில் நான்கு வாரங்களில் புதிய படங்களின் வெளியீடு என்பதுதான் இப்பேது அவர்களுக்கான சவாலாக உள்ளது. ஓடிடியில் வரப் போகிறது பார்த்துக் கொள்ளலாம் என பல நடுத்தர வர்க்கத்து சினிமா ரசிகர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.
ஹிந்திப் படங்களைப் போல எட்டு வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடி வெளியீடு என்பது பற்றி திரையுலகினர் முடிவெடுக்க வேண்டும். அல்லது தரமான படங்களைக் கொடுத்து மக்களை தியேட்டர்களுக்கு வரவழைக்க வேண்டும். பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே ரசிகர்கள் வந்தால் மற்ற நாட்களில் தியேட்டர்களை மூடித்தான் வைத்திருக்க வேண்டும். பல சிங்கிள் தியேட்டர்களில் ஒரு நாளைக்கே சில காட்சிகள் மட்டுமே நடைபெறுவதாகச் சொல்கிறார்கள். இந்த நிலை நீடித்தால் அதன் பாதிப்பு திரையுலகினருக்கே என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
2024ம் ஆண்டின் முதல் மாதத்தைப் பொறுத்தவரையில் விமர்சன ரீதியாக சில படங்கள் வரவேற்பைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பிரமாதமான மாதமா இல்லை என்பதே உண்மை. ஆரம்பமே இப்படியா, என திரையுலகினர் அவர்களது மனதிற்குள் நிச்சயம் நினைத்திருப்பார்கள்.
2024 ஜனவரி மாதத்தில் தியேட்டரில் வெளிவந்த படங்கள்…
ஜனவரி 5 : அரணம், எங்க வீட்ல பார்ட்டி, கும்பாரி, உசுரே நீதான்டி
ஜனவரி 12 : அயலான், கேப்டன் மில்லர், மிஷன் சாப்டர் 1, மெர்ரி கிறிஸ்துமஸ்
ஜனவரி 25 : ப்ளூ ஸ்டார், முடக்கறுத்தான், சிங்கப்பூர் சலூன், தூக்குதுரை
ஜனவரி 26 : லோக்கல் சரக்கு, நியதி, த நா, தென் தமிழகம்
ஓடிடி
ஜனவரி 12 : செவப்பி