‛டாடா' இயக்குனர் இயக்கத்தில் ஜெயம் ரவி | ''இது எனது கனவு'': 'குட் பேட் அக்லி' படத்தில் அஜித்துடன் இணைந்த பிரசன்னா நெகிழ்ச்சி | 'விஜய் 69' படத்தில் பிரியாமணி, நரைன்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மேடை சரிந்து விபத்து: காயமடைந்த பிரியங்கா மோகன் | ரஜினியின் ‛வேட்டையன்' படத்துக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு | யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்காதீர்கள் : நடிகர் நெப்போலியன் உருக்கமான வேண்டுகோள் | ஆவண படம் இயக்கி விருது பெற்ற சூர்யா- ஜோதிகாவின் மகள் தியா | வடிவேலுவின் வெற்றிக்கு பின்னால் நான்தான் இருந்தேன்: சிங்கமுத்து பதில் மனு | திரு இயக்கத்தில் ரிலீஸ்க்கு தயாராகும் புதிய படம் | அமரன் படத்தின் முதல் பாடல் நாளை(அக்., 4) வெளியாகிறது |
கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்குப் பின்… என பல துறைகளைப் பிரிக்கும் ஒரு சூழ்நிலை வந்துவிட்டது. அப்படி ஒரு பாதிப்பை அந்த கொடிய தொற்று நோய் ஏற்படுத்திவிட்டுச் சென்றுவிட்டது. அதிலிருந்து சினிமா துறையும் தப்பவில்லை.
கொரோனா தாக்கம்
கொரோனா தாக்கத்தால் 2020ம் ஆண்டில் மார்ச் மாத மத்தியில் தியேட்டர்களை முழுமையாக மூட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன்பின் நவம்பர் மாதம் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு தியேட்டர்கள் செயல்பட ஆரம்பித்தன. 2021ம் ஆண்டில் பிப்ரவரி 1 முதல்தான் மீண்டும் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதற்கடுத்து 2021 ஏப்ரல் மாதத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கத்தால் ஏப்ரல் 10 முதல் மீண்டும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு தியேட்டர்கள் செயல்பட்டன. இருப்பினும் ஏப்ரல் மாதக் கடைசியில் தியேட்டர்கள் முழுமையாக மூடப்பட்டன. மூன்று மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்ட தியேட்டர்கள் மீண்டும் ஆகஸ்ட் மாதக் கடைசியில் 50 சதவீத இருக்கைகள் அனுமதியுடன் திறக்கப்பட்டன. நவம்பர் 1ம் தேதி முதல்தான் மீண்டும் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஓடிடிக்கு மவுசு
இப்படி 2020, 2021ம் ஆண்டுகளில் கொரோனா தாக்கத்தால் தியேட்டர்கள் மூடப்படுவதும், திறக்கப்படுவதுமாக இருந்தது. அந்த கால கட்டங்களில் தியேட்டர்களில் புதிய படங்களை வெளியிட முடியவில்லை. அதனால், ஓடிடி தளங்களில் நேரடியாக புதிய படங்களை வெளியிட்டார்கள். அதற்கு சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாக தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்கும் ஆர்வம் குறைய ஆரம்பித்தது. அது கடந்த நான்கு ஆண்டுகளில் படிப்படியாகக் குறைந்தே போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
தியேட்டர்களுக்கு மக்கள் வருகை சரிவு
கடந்த இரண்டு வருடங்களாக ஓடிடி தளங்களில் அதிகமான புதிய படங்கள் நேரடியாக வெளியாகவில்லை. அப்படியிருந்தும் தியேட்டர்களுக்கு மக்கள் வர விரும்பவில்லை. முன்னணி நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே தியேட்டர்களுக்குச் சென்று படங்களைப் பார்த்தார்கள். குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோரது சில படங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் அதிக வசூலைக் குவித்து சில படங்கள் புதிய வசூல் சாதனைகளையும் படைத்தது. அவர்களுக்கு அடுத்துள்ள நடிகர்களின் படங்கள் நன்றாக இருக்கிறது என்ற தகவல் வெளியானால் மட்டுமே தியேட்டர்களுக்கு மக்கள் வந்து படங்களைப் பார்த்தார்கள். அப்படங்கள் சரியில்லை, மிகச் சுமார் என்று விமர்சனங்கள் வந்தால் நான்கு வாரங்களில் ஓடிடியில் வந்துவிடும், அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள். இப்படியாக புதிய படங்களைப் பார்க்கும் ஆர்வம், அவசரம் குறைய ஆரம்பித்தது.
தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் பாதிப்பு
படங்களின் நிலையும், நடிகர்களின் நிலையும் இப்படியிருக்க தியேட்டர்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. நடிகர்களாவது படங்கள் ஓடினாலும், ஓடவில்லை என்றாலும் அவர்களது சம்பளத்தைக் குறைக்கப் போவதில்லை. மாறாக படத்திற்குப் படம் ஏற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை வைத்து படங்களைத் தயாரிக்க முன்வருபவர்களும் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
மூடப்படும் தியேட்டர்கள்
கொரோனாவுக்குப் பின் சினிமா துறையில் அதிகம் பாதிக்கப்பட்டது தயாரிப்பாளர்களும், தியேட்டர்காரர்களும்தான். பாதிப்பு வந்ததால் புதிதாக வளரும் துறையாக சினிமாவை அதிகம் சார்ந்திருக்கும் ஓடிடி நிறுவனங்கள் அதிரடியாக வளர ஆரம்பித்தது. ஒரு பக்கம் புதிய மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் பழைய தியேட்டர் வளாகங்கள், சிங்கிள் தியேட்டர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்படும் நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது. இன்று கூட சென்னையில் உள்ள நான்கு தியேட்டர்களைக் கொண்ட பிரபலமான உதயம் காம்ப்ளக்ஸ் மூடப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இப்படி தமிழகம் முழுவதும் பல ஊர்களிலும் பழைய தியேட்டர்கள் மூடப்பட்டு வருகின்றன.
வருடத்திற்கு சில ஆயிரம் கோடிகள் வியாபாரம், ஜிஎஸ்டி வரி மூலம் மத்திய அரசுக்கு வருமானம், கேளிக்கை வரி, சொத்து வரி மூலம் மாநில அரசுக்கு வருமானம், உணவுப் பண்டங்கள் மூலம் பலதரப்பட்ட தொழில் செய்பவர்களுக்கும் வருமானம் என சினிமா துறை இருந்து வருகிறது.
இரண்டு மாதங்கள் திண்டாட்டம்
இந்நிலையில் அடுத்த ஓரிரு மாதங்களுக்கு முக்கியமான படங்கள் எதுவும் வராத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டில் தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அவை தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகுதான் வெளியாக உள்ளன. அதனால், அடுத்த இரண்டு மாதங்களுக்கு தியேட்டர்களை நடத்துவதென்பது சிரமமான ஒரு விஷயம்.
விரைவில் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வும், அடுத்து 10ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வும் மற்ற வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வும் தொடர்ச்சியாக நடக்க உள்ளன. அதன் காரணமாக குடும்பத்தினர் பலரும் தியேட்டர்களுக்கு வர வாய்ப்பேயில்லை.
ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த ஆண்டிற்கான பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி இரண்டு மாத காலம் நடைபெற உள்ளது. இவற்றோடு பார்லிமென்ட் தேர்தலும் ஏப்ரல் மாதம் நடக்க இருக்கிறது. இதனால், விளையாட்டு ஆர்வலர்களும், அரசியல் ஆர்வலர்களும் தியேட்டர்கள் பக்கம் வரவே நிறைய யோசிப்பார்கள்.
ரீ-ரிலீஸ் தந்த நம்பிக்கை
இதனிடையே, ரிரிலீஸ் என்பது புதிய நம்பிக்கை ஒன்றைத் தியேட்டர்களுக்குத் தந்துள்ளது. கடந்த சில மாதங்களில் சில முக்கிய நடிகர்கள் நடித்து சில வருடங்களுக்கு முன்பு வெளியான சில படங்களை மீண்டும் வெளியிட்டு சில தியேட்டர்காரர்கள் நல்ல லாபத்தைப் பெற்று வருகிறார்கள். அவற்றிக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டதே அதற்கு முக்கிய காரணம். அதிகபட்சமாக 100 ரூ கட்டணம் அந்த ரிலீஸ் படங்களுக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இது திரையுலகில் உள்ள சிலரை யோசிக்க வைத்திருக்கிறது.
“வேலையில்லா பட்டதாரி, வட சென்னை, 3, விண்ணைத் தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், சிவா மனசுல சக்தி' உள்ளிட்ட சில படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை அதிகமாகப் பெற்றது. இன்றைய இளம் ரசிகர்கள் அந்தப் படங்களை நோக்கி படையெடுத்தார்கள். சென்னை, கமலா தியேட்டர் இப்படியான ஒரு ரீ-ரிலீஸ் விஷயத்தை மீண்டும் வெற்றிகரமாக ஆரம்பித்து வைத்தது. 49 ரூ கட்டணம் வைக்கப்பட்டதால் பலரும் படம் பார்க்க வந்தார்கள். 'வாரணம் ஆயிரம்' படம் இப்போது 50 நாட்களைக் கடந்து அங்கு ஓடிக் கொண்டிருக்கிறது.
அதனால், சிறிய படங்களுக்கான தியேட்டர் கட்டணங்களில் மாற்றத்தைக் கொண்டு வந்தால் அந்தப் படங்களும் ஓட வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கை வந்துள்ளது. அது தியேட்டர்காரர்களுக்கு தொய்வில்லாத வருமானத்தைத் தரும்.
சிறு பட்ஜெட் படங்களுக்கு டிக்கெட் கட்டணம் குறையுமா
சில முக்கிய தயாரிப்பாளர்கள் உறுப்பினர்களாக உள்ள தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தியேட்டர்காரர்களுக்கு பரிந்துரை ஒன்றை வைத்துள்ளார்கள். அதன்படி 5 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட, 150 தியேட்டர்களுக்கு மிகாமல் தமிழகத்தில் வெளியாகும் படங்களுக்கு சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் ஆகிய மாநகரங்களில் அதிக பட்சமாக 100 ரூபாய், மற்ற நகரங்களில் உள்ள தியேட்டர்களில் 80 ரூ கட்டணம் நிர்ணயிக்கவும், 5 கோடிக்கு அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களுக்கு மேலே குறிப்பிட்ட மாநகரங்களில் அதிகபட்சமாக 150 ரூ, மற்ற நகரங்களில் அதிகட்பமாக 120 ரூ கட்டணம், மற்றும் ஜிஎஸ்டி கட்டணம், என நிர்ணயிக்கவும் பரிந்துரை செய்துள்ளார்கள்.
இந்த பரிந்துரையை தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கியமான தியேட்டர்கள் சங்கத்தினர் ஏற்றுக் கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கெனவே மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி கட்டணம் உயர்வு, இதர வரிகள் என நாங்கள் சிரமத்தில் இருக்கிறோம் என பல சந்தர்ப்பங்களில் அவர்கள் பேசியுள்ளார்கள். இருப்பினும் தியேட்டர்கள் தொடர்ந்து நடக்க தயாரிப்பாளர்களின் உறுதுணை மிகவும் அவசியம். அவர்கள் படங்களைத் தயாரித்தால்தான் தியேட்டர்களை நடத்தவும் முடியும்.
தியேட்டர்களின் கட்டணங்களை சிறிய படங்களுக்கேற்றபடி குறைத்துக் கொள்வது பற்றி பரிந்துரை செய்துள்ள நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தினர், தியேட்டர்களில் மிக அதிக விலைக்கு விற்கப்படும் உணவு பண்டங்கள் பற்றி தங்களது பரிந்துரை எதையும் சொல்லவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
காலமாற்றம் அவசியம்
பிளாக் டிக்கெட், திருட்டு விஎச்எஸ் வீடியோ, திருட்டு விசிடி, இணையதள பைரசி, டெலிகிராம் பைரசி, ஓடிடி வளர்ச்சி என காலத்திற்கேற்ப பல சவால்களை எதிர்கொண்டு திரையுலகம் புதிய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி சமாளித்து வளர்ந்து கொண்டு வருகிறது. எதிர்வரும் காலங்கள் எப்படியிருக்கும் என்பதை சொல்ல முடியாது.
காலத்திற்கேற்ற மாற்றம் எல்லா துறையிலும் அவசியமான ஒன்று. சினிமா தயாரிப்பாளர்கள், நடிகர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து பேசி அடுத்த கட்ட வளர்ச்சி பற்றி சிந்தித்து செயல்பட வேண்டிய சூழல் வந்துவிட்டது. மாநில, மத்திய அரசுகளுடனும் கலந்து பேசி 100 ஆண்டு கால சினிமா துறையை சீரிய வளர்ச்சிக்குக் கொண்டு செல்வார்களா என்பதே சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.