சிங்கப்பூர் சலூன்,Singapore Saloon
Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் - கோகுல்
இசை - விவேக் - மெர்வின், ஜாவேத் ரியாஸ்
நடிப்பு - ஆர்ஜே பாலாஜி, கிஷன் தாஸ், சத்யராஜ், மீனாட்சி சவுத்ரி
வெளியான தேதி - 25 ஜனவரி 2024
நேரம் - 2 மணி நேரம் 16 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

வாழ்க்கையில் தனக்கு விருப்பமான வேலையில் முன்னேறத் துடிக்கும் ஒரு இளைஞனின் கதை. ஒரு கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து பெரிய 'ஹேர் ஸ்டைலிஸ்ட்' ஆக விரும்பும் ஒரு இளைஞன் என்னவெல்லாம் பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் கோகுல்.

சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த 'அன்னபூரணி' படத்தில் இந்தியாவின் நம்பர் 1 'செப்' ஆக ஆசைப்படும் ஒரு பெண்ணின் கதையைப் பார்த்தோம். அந்தப் படத்திற்கும் இந்தப் படத்திற்கும் 'ஒன் லைன்' ஒன்றுதான். ஆண், பெண், செய்ய விரும்பும் தொழில், எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அது மட்டும்தான் சற்றே வித்தியாசம்.

ஒரு ஹேர் ஸ்டைலால் மனிதனின் தோற்றத்தை மாற்றி, அவனுக்கு மரியாதை கிடைக்க வைக்க முடியும் என தங்கள் ஊரில் சலூன் கடை வைத்திருக்கும் லால்-ஐப் பார்த்து ஆச்சரியப்படுகிறார் சிறுவனான ஆர்ஜே பாலாஜி. வளர்ந்த பின் ஒரு ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆக வேண்டும் என நினைக்கிறார். அப்பா சொன்னதால் இஞ்சினியரிங் படித்து முடித்து, சென்னையில் சலூன் கடையில் வேலைக்குச் சேர்கிறார். பின்னர் தனியாக 5 கோடி வரை செலவு செய்து சொந்தமாக 'சிங்கப்பர் சலூன்' கடையை ஆரம்பிக்க இறங்குகிறார். ஆனால், அதைத் திறக்க முடியாமல் சிக்கலுக்கு ஆளாகிறார். அவை என்ன, அவற்றைத் தீர்த்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தின் முதல் காட்சியிலேயே தற்கொலைக்கு முயலும் ஆர்ஜே பாலாஜியைக் காட்டி அதிர்ச்சியூட்டுகிறார் இயக்குனர். சரி போகப் போக கலகலப்பான பாலாஜியைப் பார்க்கலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்தால் ஏமாற்றமே. ஒரு சில காட்சிகளில் மட்டும் 'பாலாஜி டைப்' வசனங்கள் வந்து போகிறது. குறிப்பாக அந்த 'பாய் பெஸ்ட்டி' வசனத்திற்கு தியேட்டரில் கைத்தட்டல்கள். படம் முழுவதும் சீரியஸான பாலாஜியைப் பார்க்க முடியவில்லை என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். படபடவென, கலகலவென சிரித்து கமெண்ட் அடிக்கும் பாலாஜிதான் ரசிகர்களுக்கான விருப்பம்.

பாலாஜியின் மனைவியாக மீனாட்சி சவுத்ரி. தற்போது விஜய் நடித்து வரும் 'த கோட்' படத்தின் கதாநாயகி. இதற்கு முன்பு மீனாட்சி அறிமுகமான 'கொலை' படத்தில் சிறப்புத் தோற்றம் போல சில காட்சிகள்தான் வந்தார். இந்தப் படத்தில் கூடுதலாக மேலும் சில காட்சிகளில் நடித்திருக்கிறார்.

'கஞ்சப் பிரபு' மாமனாராக சத்யராஜ். ஒரு நீ…ளமான 'பார்' காட்சியை சத்யராஜுக்காகவே வைத்திருக்கிறார்கள். படத்தில் அது ஒரு திருப்புமுனையான காட்சி என்பதால் பொறுத்திருக்க வேண்டியிருக்கிறது. மற்ற காட்சிகளில் ஓவராகவே நடித்துத் தள்ளியிருக்கிறார் சத்யராஜ்.

பாலாஜியின் சிறு வயது நண்பனாக கிஷன் தாஸ், சகலையாக ரோபோ சங்கர், இந்தியாவின் பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆக ஜான் விஜய், பாலாஜி 'கத்திரி'யைப் பிடிக்கக் காரணமாக இருந்த லால், அன்பான அப்பா தலைவாசல் விஜய் என மற்ற கதாபாத்திரங்கள் அளவோடு நடித்திருக்கிறார்கள்.

பாடல்களுக்கு இசையமைத்திருப்பவர்கள் விவேக் மெர்வின். படத்தில் எந்த இடத்தில் பாடல் வந்தது என்று யோசிக்க வைத்திருக்கிறார்கள். ஜாவேத் ரியாஸ் பின்னணி இசை ஓகே. 'சிங்கப்பூர் சலூன்' என்ற பிரம்மாண்ட கடையில் பெரும்பாலான காட்சிகள் நகர்கிறது. ஆரம்ப கிராமத்து காட்சிகளில் தனியாகத் தெரிகிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார்.

ஆர்ஜே பாலாஜியின் சிறு வயதுக் காட்சிகள் என படத்தின் டைட்டிலே ஒரு அரை மணி நேரம் போகிறது. அதன்பின் கதைக்குள் வந்த சிறிது நேரத்தில் இடைவேளை வந்துவிடுகிறது. இடைவேளைக்குப் பின் பாலாஜியின் பிரச்சனையைத் தவிர்த்து அவர் கடை அருகில் உள்ள இளைஞர்களின் பிரச்சனை, டிவி ஷோ என திரைக்கதை எங்கெங்கோ அலைபாய்கிறது.

விவசாயப் பிரச்சனை என்று சொன்னால் ஏதாவது விமர்சனம் வருமென்று 'பறவைகள்' பிரச்சனை என்று சொல்லியிருக்கிறார்கள். கிளைமாக்ஸ் சினிமாத்தனமாகவே முடிந்தாலும் அது நிறையவே நெகிழ வைத்துவிட்டது. இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல என்பதை உணர்த்தும் ஒரு முடிவு.

சிங்கப்பூர் சலூன் - ஆவரேஜ் கட்டிங்...

 

சிங்கப்பூர் சலூன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

சிங்கப்பூர் சலூன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓