''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
தியேட்டர்கள் இல்லாத குறையை ஓடிடி தளங்கள் ஓரளவிற்காவது நிறைவேற்றும் என்று எதிர்பார்த்தால் தரமற்ற சில மோசமான படங்களை வெளியிடுவது திரையுலகத்தினரிடையே கூட ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நல்ல நல்ல படங்களை எடுத்து வைத்துள்ள பலரும் எந்தவிதமான சிபாரிசும் இல்லாமல் தங்களது படங்களை ஓடிடி தளங்களில் கொடுக்க முடியாமல் தவித்து வருவதாக கோலிவுட்டில் பலர் புலம்புகிறார்கள்.
இப்படியான பாகுபாட்டைப் பார்ப்பது ஓடிடி தளங்களுக்கே நல்லதல்ல. தரமற்ற படங்களை அவர்கள் வாங்கி வெளியிட்டால் மக்கள் அந்த ஓடிடி தளங்களை புறக்கணிக்கவும் வாய்ப்புண்டு என்கிறார்கள்.
கடந்த வாரம் மணிரத்னம் தயாரிப்பில் வெளிவந்த 'ஆந்தாலஜி படமான 'நவரசா' சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக அலசப்பட்டு வருகிறது. 9 கதைகளில் ஓரிரு கதைகள் மட்டுமே பார்க்கும்படியாக இருக்கிறது, மற்றதெல்லாம் பொறுமையை நிறையவே சோதிக்கிறது என்பதுதான் பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது.
'ஆந்தாலஜி' படங்கள் என்னும் போது அவற்றில் சில முக்கிய இயக்குனர்கள் தவறாமல் இடம் பெற்று விடுகிறார்கள். ஓரளவிற்கு பிரபலமான இயக்குனர்கள், பெயர் பெற்ற இயக்குனர்கள் ஆகியோருக்கு ஆந்தாலஜி படங்கள் ஒரு சோதனையாக அமைந்து விடுகிறது.
ஒவ்வொரு படத்திற்குமான ஒப்பீடு இயக்குனர்களின் பெயரைக் குலைப்பதாகவும் அமைந்துவிடுகிறது. மேலும், ஒரு ஆந்தாலஜியில் எத்தனை படம் இடம் பெறுகிறதோ அவற்றையும் தரம் பிரித்து ரசிகர்கள் கூட வரிசைப்படுத்தி விமர்சித்துவிடுகிறார்கள்.
அந்த வகையில் 'நவரசா' ஆந்தாலஜியில் அதிகமாகப் பெயரைக் கெடுத்துக் கொண்டவர் கார்த்திக் சுப்பராஜ். ஈழத்துப் பிரச்சினையையும் வைத்து அவர் இயக்கிய 'ஜகமே தந்திரம்' படம் வெளிவந்த போது அவர் மீதான விமர்சனம் கடுமையாக இருந்தது. அடுத்து இந்த 'நவரசா' படத்தில் அவர் இயக்கிய 'அமைதி'யும் ஈழப் போர் கதைக்களம் என்பதால் இலங்கைத் தமிழர்கள் அவரை கடுமையாக சாடியிருக்கிறார்கள். தயவு செய்து இனி ஈழப்பிரச்சினையை தொடாதீர்கள் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்கள்.
நவரசாவில் தமிழில் அதிக பிரபலமில்லாத பிஜாய் நம்பியார், சர்ஜுன், ரதீந்திரன் ஆர் பிரசாத் ஆகியோர் இயக்கத்தில் இடம் பெற்ற கதைகளில் ரதீந்திரன் ஆர் பிரசாத் பாராட்டப்படுகிறார். அடுத்து நடிகர் அரவிந்த்சாமி இயக்கிய 'ரௌத்திரம்' கதையும் பாராட்டப்படுகிறது. கௌதம் மேனன், பிரியதர்ஷன் இயக்கிய படங்கள் அதிக எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றுள்ளன.
'நவரசா' தந்த விமர்சனங்களால் இனி இயக்குனர்கள் கூட இந்த மாதிரியான ஆந்தாலஜி படங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளத் தயங்குவார்கள் என்றே தெரிகிறது. அவர்கள் இயக்கும் கதை நன்றாக இருந்தால் தப்பித்து விடுவார்கள். மாறாக, சரியாக இல்லாமல் போனால் வகையாக மாட்டிக் கொள்கிறார்கள்.
என்னதான் பிரபலங்கள் நடித்திருந்தாலும் 30 நிமிடங்கள் இடம் பெறும் கதையில் சுவாரசியம் இல்லையென்றால் அதை ரசிகர்கள் நிராகரிக்கத் தயங்குவதில்லை என்ற உண்மை இயக்குனர்களுக்கும், அதில் நடிப்பவர்களுக்கும் புரிந்திருக்கும்.
ஆந்தாலஜி படம் என்றால் இனி ரசிகர்களும் ஓடி விடுவார்களோ என்று எண்ணத் தோன்றும் விதத்தில்தான் ஓடிடியில் வரும் ஆந்தாலஜி படங்கள் இருக்கின்றன. இதற்கு முன்பு வந்த 'புத்தம் புது காலை, பாவக் கதைகள்' அதை ஏற்கெனவே நிரூபித்துள்ளன.
ஓடிடி தளங்களில், யாரோ ஆரம்பித்து வைத்த இந்த ஆந்தாலஜி படங்கள் சீக்கிரமே அட்ரஸ் இல்லாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.