கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது | ரூ.200 கோடியை தொட்ட தொடரும் | மூன்று நகைச்சுவை நடிகர்கள் மோதும் மே 16 | என்டிஆர் குடும்பத்தின் நான்காவது தலைமுறை நடிகர் அறிமுகம் | அப்பா இசையில் முதல் தெலுங்குப் பாடல் பாடிய யுவன்ஷங்கர் ராஜா | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - செப்டம்பர் 18 வெளியீடு | தற்போதைய தமிழ் சினிமா இசை - அனுராக் காஷ்யப் கிண்டல் | ரூ.100 கோடி வசூலைக் கடந்த அஜய் தேவ்கனின் 'ரெய்டு 2' | பாதுகாப்பு வீரர்களின் தியாகம்: சமந்தா நெகிழ்ச்சி | 23வது ஆண்டில் தனுஷ்! - குபேரா படத்தின் கதாபாத்திரத்தின் பெயர் வெளியானது! |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்து, இயக்கிய நாடோடி மன்னன் தமிழ் சினிமாவின் முக்கியமான மைல் கல். அந்தப் படம் உருவாக காரணமாக இருந்தது சிவாஜி நடித்த உத்தம புத்திரன் என்றால் நம்ப முடிகிறதா... தொடர்ந்து படியுங்கள்...
1940ம் ஆண்டு பி.யூ சின்னப்பா இரண்டு வேடங்களில் நடித்த உத்தம புத்திரன் பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தை மார்டன் தியேட்டர்ஸ் தயாரித்தது. அதன் பிறகு அதே உத்தம புத்திரனை மீண்டும் தயாரிக்க வீனஸ் பிக்சர்ஸ் விரும்பியது. டி.பிரகாஷ்ராவ் இயக்க, நடிகர் திலகம் சிவாஜி, பத்மனி, எம்.என்.நம்பியார், கண்ணாம்பா, தங்கவேலு நடிப்பது என்று முடிவானது. இதற்கான உரிமத்தை மார்டன் தியேட்டர்ஸிடமிருந்து வீனஸ் பிக்சர்ஸ் பெற்றிருந்தது. இதே நேரத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் உத்தம புத்திரன் என்ற தலைப்பில் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்திருந்தார். ஆனால் இது பி.யூ.சின்னப்பா நடித்த கதை அல்ல. அதேபோன்ற வேறு மாதிரியான கதை.
ஒரு நாள் பத்திரிக்கையில் "எம்.ஜி.ஆர் இரண்டு வேடங்களில் நடிக்கும் உத்தபுத்திரன்" என்றும். "சிவாஜி இரண்டு வேடங்களில் நடிக்கும் உத்தமபுத்திரன்" என்றும் விளம்பரம் வந்தது. இது எம்.ஜி.ஆருக்கு அதிர்சியையும், கோபத்தையும் உண்டாக்கியது. "நமது உத்தமபுத்திரன் படத்தை டிராப் பண்ணிவிடுங்கள். நான் இரண்டு வேடங்களில் நடிப்பது மாதிரி வேறொரு கதை தயார் செய்யுங்கள்" என்று ஆர்.எம்.வீரப்பன் தலைமையிலான கதை இலாகாவுக்கு உத்தரவிட்டார்.
எம்.ஜி.ஆரின் இந்த திடீர் உத்தரவை நிறைவேற்ற முடியாமல் கதை இலாகா தவித்தது. அப்போது எம்.ஜி.ஆர், தான் பார்த்த இஃப் ஐ வேர் கிங் என்ற ஆங்கிலபடத்தின் கதையை கூறி இந்த கதையை ஒன்-லைனாக வைத்துக் கொண்டு திரைக்கதை அமையுங்கள் என்றார். அந்த கதைதான் நாடோடி மன்னனாக உருவானது. இதில் பானுமதி ஹீரோயின். இன்னொரு ஹீரோயினாக சரோஜாதேவி நடித்தார். பி.எஸ்.வீரப்பா, நம்பியார் வில்லன்கள்.
படத்தை முதலில் கே.ராம்நாத் இயக்குவதாக இருந்தது. படம் தொடங்க இருந்த நேரத்தில் ராம்நாத் திடீரென இறந்துவிட எம்.ஜி.ஆரே இயக்கினார். அவர் இயக்கிய முதல் படம் இது. சிவாஜி நடித்த உத்தமபுத்திரன் 1958ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் 5 மாதங்களுக்கு பிறகு ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது. இரண்டுமே வெள்ளி விழா படங்கள்தான். ஆனாலும் நாடோடி மன்னன்தான் வசூல் சாதனை படைத்தது.