தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | 100 மில்லியன் பார்வைகளை கடந்த தனுஷின் ஹிந்தி பாடல் | வலைதள இன்ப்ளூயன்சர் வேடத்தில் அனுராக் காஷ்யப் | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நூறுசாமி | இயக்குனர் சொன்னதை கேட்டு உடல் நடுங்கி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் | ஹாலிவுட் சண்டை கலைஞர்களுடன் பணியாற்றும் கீர்த்தி சுரேஷ் | அனிமேஷன் கேரக்டருக்கு குரல் கொடுத்தது சுவாரஸ்யம் : ஷ்ரத்தா கபூர் |

அதிக சினிமா ஆர்வலர்களை உள்ளடக்கிய அழகிய நகரமாகவும், ஒரு படத்தின் வெற்றி தோல்வியை துள்ளியமாக கணிக்கும் ஆற்றலும், ரசனையும் உள்ள ரசிகப் பெருமக்களைக் கொண்ட ரசனைமிகு நகரமாகவும் விளங்கும் மதுரை மாநகரின் மகத்துவமிக்க சின்னங்களில் ஒன்றாகவும், அதிக எண்ணிக்கையிலான இருக்கைகளைக் கொண்ட, ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கம் என்ற பெருமைக்கும், வரலாற்று சிறப்புக்கும் உரிய திரையரங்கமாக, மதுரை மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய ஒரு மகத்தான கலைக்கூடமாக, பன்னெடுங்காலமாய் பயணித்து, பலநூறு திரைப்படங்களைத் தந்து, ஒரு பண்பாட்டுக் கலாச்சாரமாகவே மாறிப்போன திரையரங்கம்தான் மதுரை “தங்கம் திரையரங்கம்”.
1952ம் ஆண்டு கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட இத்திரையரங்கின் முதல் திரைப்படமே, நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் அறிமுகத் திரைப்படமான “பராசக்தி”. 2560 இருக்கைகளைக் கொண்ட இத்திரையரங்கில் இத்திரைப்படம் 112 நாட்கள் ஓடியிருக்கின்றது. ஒரு காட்சி முடிந்து, பார்வையாளர்கள் திரையரங்கை விட்டு வெளியேறும்போது, அந்தப் பகுதியே திருவிழாக் கூட்டம் போல் காட்சி தருவதே ஒரு கண்கொள்ளா காட்சி. அப்படிப்பட்ட இத்திரையரங்கில், 1958ம் ஆண்டு வெளிவந்த எம் ஜி ஆரின் “நாடோடி மன்னன்” திரைப்படமும் 175 நாட்கள் வரை ஓடி, வெள்ளி விழா கண்டிருக்கின்றது.
இந்த வரிசையில் வந்த மற்றுமொரு திரைப்படம்தான் “தூறல் நின்னு போச்சு”. 1982ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு வெளியீடாக வந்த இத்திரைப்படம்தான் மதுரை தங்கம் திரையரங்கில் மிக அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான இத்திரையரங்கில் அப்போதே 300 நாட்கள் வரை ஓடி, ஒரு புதிய சாதனையைப் படைத்த திரைப்படமாக பார்க்கப்பட்ட திரைப்படம்தான் இந்த “தூறல் நின்னு போச்சு”. முதலில் இத்திரைப்படத்தின் கதாநாயகியாக இயக்குநர் கே பாக்யராஜின் தேர்வாக இருந்தவர் நடிகை பானுப்ரியா. படத்திற்கான போட்டோ ஷூட் முடிந்த பின், அவர் மிகவும் சிறிய பெண் போல் இருப்பதாக உணரப்பட்டதால், அவருக்குப் பதில் நடிகை சுலக்ஷணாவை நாயகியாக்கினார் இயக்குநர் கே பாக்யராஜ்.
'இசைஞானி' இளையராஜா இசையமைத்து, கே பாக்யராஜ் இயக்கி, தமிழ்நாட்டில் பல திரையரங்குகளில் 100 நாள்களைக் கடந்து ஓடி, மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படம்தான், மதுரை “தங்கம் திரையரங்கம்” 2011ல் இடித்து தரைமட்டம் ஆகும் வரை, அத்திரையரங்கில் அதிக நாள்கள் ஓடிய திரைப்படம் என்ற சாதனையை தக்க வைத்திருந்த பெருமையோடு, மதுரை மாநகரின் பெருமை மிகு தங்கம் திரையரங்கின் சிறப்பினையும் தன்னகத்தே கொண்ட ஒரு தனிப்பெரும் திரைக்காவியமாய் இன்றும் ரசிகர்களால் பெரிதும் ரசித்துப் பார்க்கப்படும் திரைப்படமாகவும் இருப்பதுதான் இந்த “தூறல் நின்னு போச்சு” திரைப்படம்.




