விக்ரமின் அடுத்த மூன்று படங்கள் குறித்து தகவல் இதோ | காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிஜிட்டல் உரிமை விற்பனை | தி மெட்ராஸ் மிஸ்டரி வெப் தொடரின் முதல் பார்வை | செல்போனை அதிகமாக யூஸ் பண்ணும் ஸ்ருதிஹாசன் | புதிய பட நிறுவனம் தொடங்கி கதையின் நாயகியாக உருவெடுக்கும் சிம்ரன் | மோசமான தோல்வியை சந்தித்த அனுஷ்காவின் காட்டி | கவிதையை ஒரு பாடலாக மாற்றும் கலை நீங்கள்... : ரவி மோகனை வாழ்த்திய பாடகி கெனிஷா | ஹீரோவாகும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் | காக்கா முட்டை, சைவம், அநீதி, விசாரணை படங்களுக்கு சம்பளம் வாங்கவில்லை : ஜிவி பிரகாஷ் | கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ், வாள் : காணிக்கை வழங்கிய இளையராஜா |
ஒரு மொழியில் வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தின் கதையை, வெவ்வேறு மொழிகளில் திரைப்படமாக எடுத்து வெற்றி காண்பது என்பது இன்று வரை சினிமா உலகில் நிகழ்ந்து வரும் இயல்பான ஒன்று. அதேபோல் ஒரு மொழியில் வெளிவந்து வெற்றி பெற்ற ஒரு இயக்குரின் திரைப்படக் கதையை, சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் வேறொரு இயக்குநர் அதே கதையை அன்றைய இளம் கலைஞர்களை வைத்து இயக்கி வெற்றி கண்டதையும் நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் இங்கே நாம் காண இருப்பது, ஒரு இயக்குநர் இயக்கி வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தின் கதையை, சில ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அவரே அந்தக் கதையை கையிலெடுத்து, அன்றைய திரைக் கலைஞர்களை வைத்து எடுத்து, மீண்டும் அதே வெற்றியை சுவைக்க எண்ணிய ஒரு இயக்குநரின் திரைப்படத்தைப் பற்றித்தான் இங்கே நாம் காண இருக்கின்றோம்.
1950களில் தமிழ் திரையுலகில் ஒரு பாடலாசிரியராக அறிமுகமாகி பின் வசனகர்த்தாவாக உயர்ந்து அதன்பின் இயக்குநர் அவதாரம் எடுத்தவர்தான் 'இயக்குநர் திலகம்' கே எஸ் கோபாலகிருஷ்ணன். 1962ஆம் ஆண்டு வெளிவந்த “சாரதா” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், 1992ம் ஆண்டு விஜயகாந்த், பானுப்ரியா நடிப்பில் வெளிவந்த “காவியத் தலைவன்” வரை ஏறக்குறைய 70 திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார். அந்த வகையில் இவரது இயக்கத்தில் வெளிவந்து வணிக ரீதியாக வெற்றி பெற்ற ஒரு திரைப்படம்தான் “கண்கண்ட தெய்வம்”.
1967ல் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ் வி ரங்காராவ், எஸ் வி சுப்பையா, பத்மினி, நாகேஷ், ஓ ஏ கே தேவர், எஸ் வி சகஸ்ரநாமம், வி நாகையா, எஸ் ராமாராவ், சிவக்குமார், கள்ளபார்ட் நடராஜன், மகரன், ஏ வீரப்பன் ஆகியோர் நடித்திருந்தனர். 1967 செப்டம்பர் 15 அன்று வெளிவந்த இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற, இதே படத்தை தெலுங்கில் “பந்தவ்யலு” என்ற பெயரில் நடிகர் எஸ் வி ரங்காராவ் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி நடித்திருந்ததோடு, படத்தையும் இயக்கியிருந்தார்.
மீண்டும் 18 ஆண்டுகளுக்குப் பின் தனது கதை, வசனம் இயக்கத்தில் வெளிவந்த “கண்கண்ட தெய்வம்” திரைப்படத்தின் கதையையே “படிக்காத பண்ணையார்” என்ற பெயரில் இயக்கி வெளியிட்டிருந்தார் 'இயக்குநர் திலகம்' கே எஸ் கோபாலகிருஷ்ணன். எஸ் வி ரங்காராவ் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரத்தில் சிவாஜிகணேசனும், எஸ் வி சுப்பையாவின் கதாபாத்திரத்தில் தேங்காய் சீனிவாசனும், நடிகை பத்மினியின் கதாபாத்திரத்தில் கே ஆர் விஜயாவும், நடிகர் ஓ ஏ கே தேவர் ஏற்று நடித்திருந்த வில்லன் கதாபாத்திரத்தில் கல்கத்தா விஸ்வநாதனும், நடிகர் சிவக்குமார் ஏற்று நடித்திருந்த வேலையாள் கதாபாத்திரத்தில் 'அச்சமில்லை' கோபி என அன்றைய திரைக்கலைஞர்களை வைத்து படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன்.
'இசைஞானி' இளையராஜாவின் இசையில் 1985ம் ஆண்டு மார்ச் 23 அன்று வெளிவந்த இத்திரைப்படம், நடிகை கே ஆர் விஜயாவின் 200வது திரைப்படம் என்ற அந்தஸ்தோடு வந்ததே தவிர, அவரது முந்தைய திரைப்படமான “கண்கண்ட தெய்வம்” திரைப்படத்தைப் போல் வணிக ரீதியான வெற்றியைப் பெறாமல் போனது துரதிர்ஷ்டமே.