கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை |
தென்னிந்தியத் திரையுலக நாயகர்களில் முற்றிலும் மாறுபட்ட நாயகனாக, ஒரு தனித்துவமிக்க நாயகனாக பார்க்கப்பட்டவர்தான் 'மக்கள் திலகம்' எம் ஜி ஆர். தனக்கென ஒரு தனி பாணி, தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்கென ஒரு வரையறை வகுத்து, அதிலிருந்து சிறிதும் மாறாமல் கலைப்பணி ஆற்றி, மக்கள் மனங்களில் ஓர் நிலையான இடத்தைப் பிடித்தவர். 1936 முதல் 1978 வரை ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக கலையுலகில் பயணித்து இவர் நடித்த படங்களின் எண்ணிக்கை வெறும் 136 மட்டுமே.
தனது கொள்கைக்கும், இயல்புக்கும் மாறான கதாபாத்திரங்களை துணிச்சலாக நிராகரித்து பயணித்தவர். புகை, மது, போன்ற தீய பழக்கங்கள் தனது படங்களில் இடம் பெறாத வண்ணம் பார்த்துக் கொள்வதில் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொள்வதோடு, நல்லவனாக, வல்லவனாக, ஏழைப் பங்காளனாக, பெண்களின் காவலனாக என கலையுலகில் தான் உள்ளவரை தனது கதாபாத்திரத்தின் தன்மை மாறாமல் பயணித்து வெற்றி கண்டவர்.
சில படங்களில் எதிர்மறையான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நிலை ஏற்பட்ட போதும், தனது கொள்கை கோட்பாட்டிற்கு பங்கம் வராத வண்ணம் அந்த கதாபாத்திரங்களிலும் சில மாற்றங்கள் செய்து, தனக்கு ஏற்றாற்போல் வடிவமைத்து வெற்றி காணச் செய்வதில் வல்லவராக வலம் வந்தவர். அவ்வாறு எம் ஜி ஆர் எதிர்மறை கதாபாத்திரத்திரமேற்று நடித்து மாபெரும் வெற்றி பெற்ற “குடியிருந்த கோயில்”, “ஒளி விளக்கு” போன்ற திரைப்படங்களின் வரிசையில் வெளிவந்த மற்றொரு வெற்றித் திரைப்படம்தான் “நினைத்ததை முடிப்பவன்”.
1970ம் ஆண்டு நடிகர் ராஜேஷ்கண்ணா நடிப்பில் வெளிவந்த ஹிந்தி திரைப்படமான “சச்சா ஜுட்டா” என்ற திரைப்படத்தின் தமிழாக்கமே இந்த “நினைத்ததை முடிப்பவன்”. மற்ற எம் ஜி ஆர் திரைப்படங்களில் இல்லாத ஒரு தனிச்சிறப்பு இத்திரைப்படத்திற்கு உண்டு. எம் ஜி ஆர் திரைப்படங்களின் பிரதான வில்லன்களாக அறியப்பட்ட எம் என் நம்பியார், எஸ் ஏ அசோகன் போன்றோர் எல்லாம் இத்திரைப்படத்தில் காவல்துறை அதிகாரிகளாக நேர்மறை கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்க, வைரக் கொள்ளையனாக, கொள்ளைக் கூட்ட தலைவனாக பிரதான வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார் எம் ஜி ஆர்.
மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதனின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருந்தது. இதில் இடம் பெற்ற பாடல்களில் ஒன்றை கவியரசர் கண்ணதாசன் எழுதியும் திருப்தி அடையாத எம் ஜி ஆர், கவிஞர் அ மருதகாசியை வரவழைத்து எழுதச் செய்திருந்தார். “கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்” என்ற கவிஞர் மருதகாசியின் அந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பினைப் பெற்றது. “கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி” என்ற பாடலை எம் ஜி ஆருக்காக “விவசாயி” திரைப்படத்தில் எழுதியிருந்த கவிஞர் அ மருதகாசி, வெகு நீண்ட இடைவெளிக்குப் பின் எம் ஜி ஆருக்காக எழுதிய பாடலாகவும் இந்தப் பாடல் அமைந்திருந்தது.
1972ம் ஆண்டு தான் சார்ந்திருந்த தி மு க.,விலிருந்து விலகி, அ தி மு க என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்த மூன்றாவது ஆண்டில் வெளிவந்த இத்திரைப்படத்தின் டைட்டிலில் தனது கட்சியின் சின்னமான 'இரட்டை இலை' சின்னத்தை இடம்பெறச் செய்திருப்பார். படத்தில் வரும் “பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த” என்ற பாடலில் “என் அண்ணாவை என்னாளும் என் உள்ளம் மறவாது என்றாகும் விதமல்லவா” என்று தனது வழிகாட்டியான அண்ணாதுரையை நினைவு கூறுவது என தனது திரைப்படங்களின் வாயிலாக கட்சியை வளர்த்தெடுக்கும் உத்தியையும் சரியாக செய்திருப்பார் எம் ஜி ஆர்.
லதா, மஞ்சுளா, சாரதா, எம் என் நம்பியார், எஸ் ஏ அசோகன், எஸ் வி ராமதாஸ், வி கோபாலகிருஷ்ணன், வி எஸ் ராகவன், காந்திமதி, தேங்காய் சீனிவாசன், எஸ் என் லட்சுமி, எம் எஸ் சுந்தரிபாய் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்து, 1975ம் ஆண்டு மே மாதம் வெளிவந்து மாபெரும் வெற்றியை சுவைத்த இத்திரைப்படம், தற்போது தனது பொன்விழா ஆண்டையும் நிறைவு செய்து, பொன்மனச் செம்மலின் புகழினை இன்னும் பாடிக் கொண்டிருக்கின்றது.