பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து | ‛‛எனக்கு பிடித்த மதுரையும், மீனாட்சி அம்மனும்...'': ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி | அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் |
உலக சினிமாவை தன்பால் ஈர்க்கச் செய்த உன்னத திரைக் கலைஞனாக அறியப்படுபவர்தான் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனும் அளவிற்கு ஒரு நிறைவான கலைச்சேவை புரிந்த கலைமேதை. கர்ணனாக, அரிச்சந்திரனாக, ராஜ ராஜ சோழனாக, வ உ சிதம்பரம் பிள்ளையாக, மகாகவி பாரதியாக, பகத் சிங்காக, கொடிகாத்த குமரனாக, சிவனாக, ராமனாக, கிருஷ்ணனாக என்று நடிப்பின் அகராதியாய் வாழ்ந்து மறைந்த அந்த நடிப்புலக மேதையின் நடிப்பில் வெளிவந்த ஒரு கலைப் பொக்கிஷம்தான் “வீரபாண்டிய கட்டபொம்மன்”. நாடக ஆசிரியரும், திரைக்கதாசிரியருமான சக்தி கிருஷ்ணசாமி எழுதிய “வீரபாண்டிய கட்டபொம்மன்” நாடகத்தை அப்போது தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.
தேசியவாதியான நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான பி ஆர் பந்துலு, 1959ம் ஆண்டு தனது தயாரிப்பு நிறுவனமான 'பத்மினி பிக்சர்ஸ்' பேனரில் “வீரபாண்டிய கட்டபொம்மன்” நாடகத்தை கேவா கலரில் பாடமாக எடுத்து, லண்டன் சென்று அதை டெக்னிக்கலராக மாற்றி வெளியிட்டார். இந்தத் திரைப்படத்தின் கதை ஆலோசனைக் குழுத் தலைவராக இருந்தவர் அப்போதைய தமிழரசுக் கழகத் தலைவராக இருந்த ம பொ சிவஞானம். “பராசக்தி”, “மனோகரா” போன்ற படங்களில் நீண்ட நெடிய வாக்கியங்களில் வசனங்களைப் பேசி ரசிகர்களை வியப்புக்குள்ளாக்கியிருந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன், “வீரபாண்டிய கட்டபொம்மன்” திரைப்படத்தில் சக்தி கிருஷ்ணசாமியின் வித்தியாசமான வசனங்களைப் பேசி நடித்திருந்தது ரசிகர்களை மேலும் வியப்பில் ஆழ்த்தியிருந்தது.
கிஸ்தி, திறை, வரி, வட்டி, வேடிக்கை! வானம் பொழிகிறது! பூமி விளைகிறது! உனக்கேன் கொடுப்பது கிஸ்தி? எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? நாத்து நட்டாயா? களை பறித்தாயா? கழனிவாழ் உழவருக்குக் கஞ்சிக்கலயம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தாயா? அல்லது மாமனா, மச்சானா? மானங்கெட்டவனே! எதற்குக் கேட்கிறாய் வரி? யாரைக் கேட்கிறாய் திறை? என்று நரம்புப் புடைக்க பேசி நடித்திருந்த நடிகர் திலகத்தின் இந்த வசனங்கள் அன்றைய தலைமுறையினரை மட்டுமல்ல இன்றைய தலைமுறையினராலும் பெரிதும் ரசிக்கப்பட்டு வருகின்றது என்பதே யாரும் மறுக்க இயலாத உண்மை.
கட்டபொம்மனை விட மருது பாண்டியர்கள்தான் மாவீரர்கள் என்று கூறும் வண்ணம் கவியரசர் கண்ணதாசன், பி ஆர் பந்துலுவின் “வீரபாண்டிய கட்டபொம்மன்” வெளியானபோதே மருது பாண்டியர்களின் கதையை விளக்கிக் கூறும் தனது “சிவகங்கைச் சீமை” திரைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இந்தக் கடும் போட்டிக்கு மத்தியிலும் “வீரபாண்டிய கட்டபொம்மன்” 25 வாரம் வரை ஓடி, வெள்ளிவிழா கண்டது. மேலும் ஆப்ரோ ஆசிய திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான சர்வதேச திரைப்பட விருதினை வென்றெடுத்த முதல் தமிழ் திரைப்படம் என்ற அந்தஸ்தையும், சிறந்த நடிகருக்கான விருதினை நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கும் பெற்றுத் தந்த திரைப்படமாகவும் அமைந்தது.
நாடு சுதந்திரம் அடைந்து 12 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த இத்திரைப்படத்தில் கட்டபொம்மனாக சிவாஜிகணேசனும், வெள்ளையத் தேவனாக ஜெமினி கணேசனும், வெள்ளையம்மாளாக நடிகை பத்மினியும், ஜக்கம்மாளாக எஸ் வரலட்சுமியும், எட்டப்பனாக வி கே ராமசாமியும், பானர்மென்னாக ஜாவர் சீதாராமனும், ஊமைத்துரையாக ஒ ஏ கே தேவரும் நடித்து படத்தின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியிருந்தனர்.