எம்ஜிஆர் உடன் 26 ; சிவாஜி உடன் 22 படங்கள் : தமிழ் சினிமாவை கலக்கிய ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜா தேவி | துக்க வீட்டில் செல்பி எடுக்க முயன்ற ரசிகரை நெட்டி தள்ளிவிட்ட ராஜமவுலி | பயணம் எளிதல்ல! ; மங்காத்தா நடிகைக்கு அஜித் சொன்ன அட்வைஸ் | பழம்பெரும் நடிகையான ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜாதேவி காலமானார் | சுரேஷ்கோபி படத்துக்கு ஒரு வழியாக யு/ஏ சான்றிதழ் கொடுத்த சென்சார் | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் |
நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை எடுத்துரைத்து, சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்தது மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்தவர்தான் 'கலைவாணர்' என் எஸ் கிருஷ்ணன். இவரது நகைச்சுவைக் காட்சிகள் என்பது பார்க்கும் பார்வையாளர்களாகிய ரசிகர்களுக்கு வாழ்வியலை கற்பித்துத் தந்த ஒரு கலைப் பெட்டகமாகத்தான் இருந்தும் வந்தது. இவரை நகைச்சுவை நடிகர் என்ற ஒரு சிறிய வட்டத்திற்குள் அடைத்துவிட முடியாது.
சிரிப்பென்ற உளி கொண்டு, மக்கள் சிந்தனையை செதுக்கி செம்மைப் படுத்திய ஒரு சிந்தனையாளர். மடை திறந்த வெள்ளமென கருத்துக்களை வழங்குவதில் மட்டும் தனது தயாள குணத்தைக் காட்டாமல், தனது சொந்த வாழ்வில் பலருக்கு பணத்தை வாரி வழங்கியிருக்கும் வள்ளல் தன்மையும் கொண்ட ஒரு பண்பட்ட மனிதராகவே வாழ்ந்தவர் 'கலைவாணர்' என் எஸ் கிருஷ்ணன்.
'கலைவாணர்' என் எஸ் கிருஷ்ணன், தன்னை நாடி வரும் பட வாய்ப்புகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நடித்து வந்த ஒரு கலைஞனாக என்றும் இருந்ததில்லை. முதலில் கதையைக் கேட்பார், அதில் தனக்குரிய வேடம் இருந்தால் மட்டுமே ஒத்துக் கொண்டு செயல்படுவது அவரது இயல்பாக இருந்தது. சில படங்களில் தனியாகவே நகைச்சுவைப் பகுதிகளை அவரே தயாரித்து நடித்துக் கொடுப்பதும் உண்டு. படம் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்பதே அவரது ஒரே சிந்தனை. ஓடாத படம் என நினைத்து சில தயாரிப்பாளர்கள் 'கலைவாணர்' என் எஸ் கிருஷ்ணனை நாடி வந்ததும் உண்டு.
இவர் நகைச்சுவைப் பகுதியை தனியாக தயாரித்து, அந்தப் படத்தில் ஒட்ட வைத்து ஓட வைத்த அற்புத நிகழ்வுகளும் நடந்ததுண்டு. இதனால் “பிலிம் ரிப்பேரர்” என்று சினிமா வட்டாரத்தில் என் எஸ் கிருஷ்ணனை அழைத்தும் வந்தனர். 1948ம் ஆண்டு வெளிவந்தது “தேவதாஸி” என்ற திரைப்படம். என் எஸ் கிருஷ்ணன், டி ஏ மதுரம் தம்பதியர் இத்திரைப்படத்தில் நடித்தும் இருந்தனர்.
சென்னை 'பாரகன்' திரையரங்கிற்குச் சென்று படத்தைப் பார்த்து வந்த என் எஸ் கிருஷ்ணன், டி ஏ மதுரம் தம்பதியர், வீடு திரும்பியதும் படத்தின் தயாரிப்பாளரை அழைத்து, நான் நடித்தும் உன் படம் சரியாக போகவில்லை. தப்பு என்னுடையதுதான். இந்தா படத்தில் நடித்ததற்காக எங்களுக்கு நீ கொடுத்த சம்பளம் என்று சொல்லி, வாங்கிய முழுத் தொகையையும் தயாரிப்பாளரிடம் எடுத்துக் கொடுத்தனுப்பியவர்தான் 'கலைவாணர்' என் எஸ் கிருஷ்ணன்.