இந்தியாவின் முதல் பேசும் படம் 'ஆலம் ஆரா' வெளியான நாள் இன்று (1931, மார்ச் 14). ஹிந்தியில் முதன் முறையாக பேசி, பாடி நடிக்கப்பட்டு வெளிவந்தது. இந்தப்படத்தை அர்தேஷிர் இரானியின் இம்பீரியல் பிலிம் கம்பெனி தயாரித்தது. அர்தேஷிர் இரானி இயக்கினார்.
124 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில் மாஸ்டர் விட்டல், சுபைதா, ஜில்லூ, சுசீலா, பிருத்விராஜ் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். ஜோசப் டேவிட், முன்ஷி ஜாகீர் கதை எழுத பெரோஸ்ஷா எம். மிஸ்ட்ரி, பி. இரானி இசையமைத்தனர். வில்போர்டு டெமிங், ஆடி. எம். இரானி ஆகியோர் இப்படத்தினை ஒளிப்பதிவு செய்தனர்.
இந்த படம் தொடங்கப்படுவதற்கு முன்பு படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் 3 மாதம் வரை பயிற்சி செய்து அதன் பின்னரே தங்கள் பணியை செய்தார்கள். காரணம் அன்று பிலிம் ரோல்களின் விலை அதிகம், கிடைப்பதும் அரிதாக இருந்தது.
படத்தின் கதை பார்ஸி நாடகம் ஒன்றை தழுவி எடுக்கப்பட்டது. நாடகத்தின் வசனங்களும், பாடல்களுமே படத்தில் இடம்பெற்றது. தபேலா, ஹார்மோனியம், வயலின் இந்த மூன்றும் தான் இசைக்கருவிகள்.
'ஆலம் ஆரா' என்றால் உலகத்தின் ஆபரணம் என்று பொருள். ஆனால் ஆலம் ஆரா இந்திய சினிமாவின் ஆபரணம்.