ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை |
தமிழ் சினிமாவில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மிகவும் முக்கியமான ஒரு சங்கம். அந்த சங்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த சங்கத்திற்கும் 'பெப்ஸி' என அழைக்கப்படும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் சமீபகாலத்தில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
பெப்ஸியில் தமிழ் சினிமாவைச் சேர்ந்த 23 யூனியன்கள் இணைந்துள்ளன. தமிழ் சினிமா படப்பிடிப்பு இந்த சம்மேளனத்தின் தொழிலாளர்கள் மூலம்தான் நடைபெற்று வருகிறது. இனி, இந்த சம்மேளனத்தின் தொழிலாளர்கள் இல்லாமலேயே படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் கடந்த 20.12.2024 அன்று பத்திரிகை வாயிலாக அறிவித்துள்ளது. மேலும், சம்மேளன உறுப்பினர்களை வைத்து செய்யும் தயாரிப்பாளர்களுடன் தொழிலாளர்கள் சம்மேளனம் ஒத்துழைப்பு வழங்கும் என்று தெரிவித்துள்ளார்கள். அதனை தொடர்ந்து, தொழிலாளர்கள் சம்மேளனத்தில் இணைக்கப்பட்டுள்ள சங்கங்களுக்கு கடந்த 27.01.2025 அன்று சுற்றறிக்கை ஒன்றும் அனுப்பியுள்ளார்கள். அதில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்ததை சுட்டிக்காட்டி மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்கள்.
அவ்வகையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்களின் திரைப்படங்களுக்கு தாங்கள் விரும்பும் தொழிலாளர்களை வைத்து தங்களது திரைப்படங்களின் படப்பிடிப்புகளை நடத்திக் கொள்ளலாம் என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது. தயாரிப்பாளர்கள் பயன்பெறும் வகையில் "தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்" என்ற ஒரு அமைப்பு உருவாக்கும் கட்டத்திற்கு நமது சங்கம் வந்துள்ளது.
தயாரிப்பாளர்கள் தங்களின் திரைப்படங்களுக்கு விரும்பும் தொழிலாளர்களை வைத்து தயாரித்துக் கொள்ளலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இது சம்பந்தமாக நாளிதழ்களில் விளம்பரம் வரவுள்ளது. அதேசமயம் மேற்படி அமைப்பில் சேர்ந்து பணியாற்ற விரும்பும் தொழிலாளர்கள் விளம்பரத்தினை பார்த்து அதில் இருக்கும் முகவரியை தொடர்பு கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த அறிக்கையைத் தொடர்ந்து பெப்ஸி அமைப்பு அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் தமிழ் சினிமாவுக்கென தனி தொழிலாளர் அமைப்பு ஏற்படுத்தும் தயாரிப்பாளர் சங்க முயற்சிக்கு வரவேற்பு கிடைக்கும் என்றும் தெரிகிறது.