குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? | சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? |
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் சங்கத்தின் தலைவராக இருப்பவர் திருப்பூர் சுப்பிரமணியம். திருப்பூரில் சக்தி சினிமாஸ் என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டரையும் நடத்தி வருகிறார். தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்து ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது திரையுலக வட்டார வாட்சப் குழுக்களில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த ஆடியோ பதிவில் இரண்டு முக்கியமான கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். தமிழகத்தில் புதிய திரைப்படங்களுக்கான சிறப்புக் காட்சி காலை 9 மணிக்குதான் நடக்கிறது. அதே சமயம் மற்ற மாநிலங்களில் அதிகாலை வேளைகளில் ஆரம்பமாகிறது. மற்ற மாநிலங்களிலும் சிறப்புக் காட்சிகளை தமிழகத்தில் ஆரம்பமாகும் நேரமான 9 மணிக்கே ஆரம்பிக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
மற்றொரு கோரிக்கையாக சினிமா விமர்சனங்களுக்கு நீதிமன்றத்தை அணுகி இரண்டு வார காலத்திற்கு யாரும் விமர்சனம் செய்யக் கூடாது என தடை வாங்க வேண்டும் என்றும் வைத்துள்ளார். பல கோடி ரூபாய் போட்டு படம் எடுத்தால் அதிகாலை காட்சியில் சினிமாவை பார்த்துவிட்டு, தமிழகத்தில் காட்சிகள் ஆரம்பமாவதற்கு முன்பாகவே யு டியூப் சேனல்களில் விமர்சனம் என்ற பெயரில் படத்தை காலி செய்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். சமீப காலங்களில் இப்படியான விமர்சனங்கள் வரைமுறை இல்லாமல் இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.
மேலும், தியேட்டர் வளாகங்களில் ரசிகர்களின் கருத்து என வீடியோ எடுப்பதை அனுமதிக்கக் கூடாது என நாமே கட்டுப்பாடு விதித்துவிட்டு அதை மீறி வருகிறோம். அப்படி வீடியோ எடுப்பதை தியேட்டர்காரர்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கேரளாவில் சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் நீதிமன்றத்தை அணுகி தனது படங்களுக்கு விமர்சனம் செய்ய தடை வாங்கியதை கேள்விப்பட்டேன், அது போலவே இங்கும் தயாரிப்பாளர் சங்கம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். இந்த வருடத்தில் 'இந்தியன் 2, வேட்டையன்,' படங்களும், சமீபத்தில் 'கங்குவா' படமும் கடுமையான விமர்சனங்களால்தான் மக்கள் வருவது பாதிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பூர் சுப்பிரமணியத்தின் இந்த கோரிக்கை பற்றி திரையுலகில் ஆலோசிப்பார்களா என்பது இனிமேல்தான் தெரியும். அதே சமயம், 'கங்குவா' படத்தின்போது இது பற்றி பேசும் திருப்பூர் சுப்பிரமணியம், 'இந்தியன் 2, வேட்டையன்' படங்கள் வந்த போது இது பற்றி ஏன் பேசவில்லை என சமூக வலைதளங்களில் பல சினிமா ரசிகர்கள் கேள்வி கேட்டுள்ளார்கள்.