ரூ.1.10 கோடி இழப்பீடு கேட்டு மாணவன் போட்ட வழக்கு : அமரன் பட செல்போன் எண் நீக்கம் | சூரி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை! | ஒரு உயிர் பலி : சிறப்புக் காட்சிகளை ரத்து செய்தது தெலங்கானா அரசு | புஷ்பா 2 - முதல்நாள் வசூல் முதல் கட்டத் தகவல் | டொவினோ தாமஸின் ‛ஐடென்டிடி' டீசர் வெளியானது | அரபு நாடுகளில் புஷ்பா 2 படத்தின் 19 நிமிட காட்சிகள் நீக்கம் | சுரேஷ் கோபி மகனுக்கு சண்டை சொல்லித்தரும் மம்முட்டி | புஷ்பா 2 - அமெரிக்காவில் முதல் நாளில் 4 மில்லியன் வசூல் | பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ : தெலுங்கில் சாதிப்பாரா ஜோதி கிருஷ்ணா | இறுதிக்கட்டத்தில் 'திருவள்ளுவர்' படம் : இளையராஜா இசை |
ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் மீது சினிமா ரசிகர்களின் பார்வை அதிகமாகவே விழும். இந்த வருடம் டாப் நடிகர்களின் படங்கள் எதுவும் வெளிவரவில்லை. ஆனால், அதற்கடுத்த இடங்களில் உள்ள நடிகர்களின் படங்கள், வளரும் நடிகரின் படம் என வெளிவந்தன.
சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்', ஜெயம் ரவி நடித்த 'பிரதர்', கவின் நடித்த 'பிளடி பெக்கர்' ஆகிய நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகின. தெலுங்கிலிருந்து டப்பிங் செய்யப்பட்ட, துல்கர் சல்மான் நடித்த 'லக்கி பாஸ்கர்' படமும் வெளிவந்தது.
இந்த வருட தீபாவளி போட்டியில் 'அமரன்' படம் தனிப் பெரும் வெற்றியாக அமைந்துவிட்டது. தமிழகத்தில் மட்டுமே 100 கோடி, மற்ற மாநிலங்களில் 50 கோடி, வெளிநாடுகளில் 60 கோடி என 210 கோடியைக் கடந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் மூலம் சிவகார்த்திகேயன் 'டாப் 5' நடிகர்களின் பட்டியலுக்கு முன்னேறிவிட்டார். அவருடைய இத்தனை வருட திரையுலக வாழ்க்கையில் 25வது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். இதுவரையில் இல்லாத அளவிற்கு பெரும் வெற்றி அவருக்குக் கிடைத்திருக்கிறது.
'அமரன்' படத்தின் வெற்றி என்பது படத்தின் கருவுக்கு, கதைக்கு, காட்சிப்படுத்துதலுக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. அடுத்து ஒரு பயோபிக் படத்துக்கு முக்கிய அம்சமான பொருத்தமான நட்சத்திரத் தேர்வு. முகுந்த் வரதராஜன் ஆக சிவகார்த்திகேயன், இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆக சாய் பல்லவி இருவரது நடிப்புத்தான் இந்தப் படத்தை மக்கள் வெகுவாக ரசிக்கவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனெவே குடும்பத்து ரசிகர்களிடம் ஒரு வரவேற்பு உண்டு. அது இந்தப் படம் மூலம் இன்னும் அதிகமாகி உள்ளது. கடந்த இருபது வருடங்களில் சாய் பல்லவி போன்ற யதார்த்தமான ஒரு நடிகையைத் தமிழ் சினிமா பார்க்கவில்லை என்று சொல்லுமளவிற்கு அவரது நடிப்பு அமைந்தது. அதிலும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியின் மூலம் படத்தை விட்டு வெளியே போகும் முன் ரசிகர்களை கட்டிப் போட்டுவிட்டார் சாய் பல்லவி.
இப்படி அனைத்து அம்சங்களும் ஒரு சேர அமைந்ததே 'அமரன்' படத்திற்கான வரவேற்புக்கும், வெற்றிக்கும் காரணம்.
அப்படி ஒரு தரமான படம் வந்த போது 'பிரதர், பிளடி பெக்கர்' போன்ற படங்கள் வெளிவர முடிவு செய்ததை தள்ளி வைத்திருக்க வேண்டும். 'அமரன்' படத்துடன் ஒப்பிடும் போது இந்த இரண்டு படங்களும் ஏணி வைத்தால் கூட எட்டாத அளவிற்கான தரத்தில் அமைந்து போயின. தீபாவளி விடுமுறைக்கு ஒரு படத்தை குடும்பத்தோடு போய் பார்க்க வேண்டும் என்று விரும்பியவர்களுக்கு முதல் தேர்வாக 'அமரன்' மட்டுமே இருந்தது. அதனால், அவர்கள் 'பிரதர், பிளடி பெக்கர்' போன்ற படங்களை கண்டு கொள்ளவேயில்லை. குறைந்தபட்சம் அந்தப் படங்களில் ரசிகர்களை வசீகரிக்கும் ஏதாவது ஒன்றாவது இருந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் அப்படங்களில் இடம் பெறவில்லை. 'அமரன்' படத்தை அந்த இரண்டு தயாரிப்பாளர்களும் சாதாரணமாக நினைத்துவிட்டார்களோ என்றுதான் யோசிக்க வைக்கிறது. தவறான நாளில் தங்களது படங்களை வெளியிட்டு தள்ளாடிப் போய்விட்டார்கள் என்பதே உண்மை.
பெயருக்கேற்றால் போல் இந்த தீபாவளி போட்டியில் 'லக்கி பிரைஸ்' அடித்துவிட்டது 'லக்கி பாஸ்கர்' படத்திற்கு. தெலுங்கிலிருந்து டப்பிங் ஆகி வந்த படம் என ரசிகர்கள் பார்க்கவில்லை. அந்தப் படத்தில் இருந்த விஷயம் என்னவென்றுதான் பார்த்தார்கள். இதுவரை தமிழில் இப்படி ஒரு 'பைனான்ஸ் மோசடி' கதையை ரசிகர்கள் பார்த்ததில்லை. அதோடு டப்பிங் படம் பார்த்த உணர்வு இல்லாமல் போனது. அந்தக் கால பம்பாய் தான் படத்தின் கதைக்களம் என்பதும் ஒரு காரணம். அதுவே, ஐதராபாத் ஆக இருந்திருந்தால் கூட தெலுங்குப் படம் பார்க்கிறோம் என்ற எண்ணம் வந்திருக்கும். இன்றைய இளைஞர்கள் விரும்பும் நாயகர்களில் ஒருவராக துல்கர் சல்மான் இருப்பதும் இப்படத்திற்கு முக்கிய வரவேற்பைக் கொடுத்தது.
தீபாவளி படங்களின் மூலம் ஒரே ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு படத்திற்கான வரவேற்புக்கு 'கன்டென்ட்' எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கின்றன. அதிலும் பார்த்துப் பார்த்து போரடித்துப் போன கதையாக இல்லாமல், புதிதாக இருக்கும் கதைகளையே மக்கள் விரும்பி ரசிக்கிறார்கள் என்பதும் தெரிய வருகிறது.
அதோடு, இன்று தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்கும் மக்களின் மனநிலை என்ன என்பதையும் நன்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒரு படத்தை எடுக்கும் முன் அது மக்களை எந்த அளவுக்குக் கவரும் என ஒன்றுக்கு பலமுறை சுய பரிசோதனை செய்து கொள்வதே சாலச் சிறந்தது.