'சூர்யா 45' படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புதிய தோற்றத்தில் கமல் : அடுத்த படத்திற்கு தயார் | நான்கு நாட்களில் ரூ.240 கோடி வசூல் செய்த வேட்டையன்! | அமரன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிம்பு! | முன்னாள் மனைவியின் புகார் எதிரொலி- நடிகர் பாலா திடீர் கைது!! | அந்தரங்க வீடியோ லீக்... அவமானத்தில் முடிந்த அதீத நட்பு : போலீஸில் ஓவியா புகார் | கங்குவா படத்திற்காக ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தயாரிப்பாளர் | எந்த சூழலிலும் யாருக்கும் பயப்பட மாட்டேன் - அடா சர்மா | குபேரா பட ரிலீஸ் குறித்து புதிய தகவல் இதோ! | தனுஷின் 'இட்லி கடை'யில் இணைந்த நித்யா மேனன், அருண் விஜய் |
“மூன்று முடிச்சு”கள் இட்டு திரையுலகில் நாயகியாய் நுழைந்து, “16 வயதினிலே” பலரும் பாராட்டும் பைந்தமிழ் நாயகியாக உருமாறி, “மூன்றாம் பிறை”யாய் வளர்ந்து, இந்தியத் திரையுலகின் முழு நிலவாய் பரிணமித்த முத்தான நாயகி நடிகை ஸ்ரீதேவியின் 61வது பிறந்த தினம் இன்று…
தமிழ் நாட்டில் சிவகாசிக்கு அருகில் உள்ள மீனம்பட்டி என்ற சிற்றூரில், அய்யப்பன் யாங்கர் மற்றும் ராஜேஸ்வரி தம்பதியரின் மகளாக, 1963ம் ஆண்டு ஆகஸ்ட் 13 அன்று பிறந்தார் ஸ்ரீதேவி. இவரது இயற்பெயர் ஸ்ரீ அம்மா அய்யப்பன்.
நடிகை ஸ்ரீதேவி தனது இயல்பான, குறும்புத்தனமான, அழுத்தமான மற்றும் கவர்ச்சியான நடிப்பால் மட்டுமின்றி, தனது அழகாலும் ரசிகர்கள் அனைவரையும் தன்பால் ஈர்க்கச் செய்த ஒரு ஆற்றல் மிகு நடிகையாகவும், கலையுலக ராணியாகவும் தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா உலகில் கோலோச்சி இருந்தவர்.
கதாநாயகர்களை நம்பி, அவர்களது ஆதிக்கம் மேலோங்கி, அவர்களின் கைகளில் இருந்த திரையுலகை நாயகியின் பக்கம் திரும்பச் செய்து, நாடே போற்றும் நல்லதொரு நடிகை என்றும், பாலிவுட் திரையுலகின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்ற நடிகையாய் அறியப்படுபவர்தான் ஸ்ரீதேவி.
“ராணி மேரா நாம்”, “ஜுலி” ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், 1979ல் “16 வயதினிலே” திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பான “சோல்வா சாவன்” என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் தடம் பதித்தார்.
1983வரை தமிழில் பிஸியான, நம்பர் ஒன் நாயகியாக வலம் வந்து கொண்டிருந்த போதே, ஹிந்தி திரையுலகில் கவனம் செலுத்தலானார் ஸ்ரீதேவி. அதன்படி நடிகர் ஜீதேந்திராவுடன் இவர் இணைந்து நடித்து, 1983ல் வெளிவந்த “ஹிம்மத்வாலா” என்ற திரைப்படமும் இவருக்கு இமாலய வெற்றியைத் தர, ஹிந்தி திரையுலகில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார் ஸ்ரீதேவி.
வைஜெயந்திமாலா, வஹிதா ரஹ்மான், ஹேமாமாலினி, ரேகா என திறமையான பல நடிகைகள் தமிழில் இருந்து பாலிவுட்டிற்கு சென்று, தங்களது தனித்துவமிக்க நடிப்பாற்றலால் அங்கே கோலோச்சியிருந்திருந்தாலும், இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்ற தனிப்பெரும் அந்தஸ்தினைப் பெற்று, ஒரு ஆற்றல்மிகு நடிகையாகப் பார்க்கப்பட்டார்.
தமிழில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து 14 திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர், அவரின் ஜோடியாக மட்டும் 9 படங்களில் நடித்திருக்கின்றார். நடிகர் கமல்ஹாசனோடு இணைந்து நடித்த 13 திரைப்படங்களில், “மனிதரில் இத்தனை நிறங்களா” திரைப்படம் தவிர, மற்ற அனைத்து திரைப்படங்களிலும் அவருடைய ஜோடியாகவே நடித்திருக்கிறார் ஸ்ரீதேவி.
தனது திருமணத்திற்குப் பின் முற்றிலும் சினிமா உலகை விட்டு விலகியிருந்த ஸ்ரீதேவி, நீண்ட இடைவெளிக்குப் பின், 2012ம் ஆண்டு வெளிவந்த “இங்கிலீஷ் விங்கிலீஷ்” திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெள்ளித்திரைக்கு மறுபிரவேசம் செய்தார். 2017ல் வெளிவந்த “மாம்” என்ற திரைப்படம்தான் இவர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்த கடைசி திரைப்படம். 2015ம் ஆண்டு வெளிவந்த “புலி” திரைப்படம்தான் இவர் தமிழில் நடித்திருந்த கடைசி திரைப்படம்.
அரை நூற்றாண்டுக்கும் மேலான தனது கலையுலகப் பயணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஏறக்குறைய 275 திரைப்படங்கள் நடித்து, இந்திய அரசின் உயரிய விருதான “பத்மஸ்ரீ விருது” உட்பட எண்ணிலடங்கா ஏனைய விருதுகள் பல வென்று, கலையுலகிற்கே காலத்தை அற்பணித்து, கரைந்து போன காவிய நாயகிதான் நடிகை ஸ்ரீதேவி.
கலையுலகை மறந்து, நிலையில்லா புவி வாழ்வை துறந்து, நித்திரை கொண்ட சித்திரை நிலவு, இங்கு பதித்துச் சென்ற முத்திரைகள்தான் ஏராளம்! ஏராளம்!! என கூறி, கலையுலக தாரகை நடிகை ஸ்ரீதேவியின் பிறந்த தினமான இன்று அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பினை பகிர்ந்து கொள்வதில் நாம் பெருமை கொள்வோம்.