நடிகர் பஹத் பாசில் தனது 42வது பிறந்த நாளில் தற்போது அடி எடுத்து வைத்துள்ளார். நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்களும் அவரது ரசிகர்களும் சோசியல் மீடியா மூலமாக பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி அவரை அன்பால் திக்கு முக்காட வைத்து விட்டனர். அது மட்டுமல்ல அவர் தற்போது நடித்து வரும் புஷ்பா 2, மாரீசன் மற்றும் வேட்டையன் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் தனியாக பிறந்தநாள் போஸ்டர் வெளியிட்டு பஹத் பாசிலுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தன.
அந்த வகையில் இந்த மூன்று படங்களில் வேட்டையன் படத்தில் யாருக்கும் எளிதில் கிடைத்திடாத அரிய வாய்ப்பான இந்தியாவின் இரண்டு சூப்பர் ஸ்டார்களான ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் இருவருடனும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு பஹத் பாசிலுக்கு கிடைத்துள்ளது. இந்த இருவருடனும் படப்பிடிப்பு தளத்தில் இணைந்து பஹத் பாசியில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை லைகா நிறுவனம் அவரது பிறந்தநாள் பரிசாக வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து படம் முழுக்க பயணிக்கும் ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் பஹத் பாசில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.