இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
1.பாவலர் தந்த பண்ணைபுரத்து பண்ணிசை. எண்ணிலடங்கா இன்னிசையை தன்னகத்தே சுமந்து, இளவேனிற்கால இளங்காற்றாய் வீசி, இசை என்ற இன்ப மழையை இன்னமும் பொழிந்து கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா அவர்களின் பிறந்த தினம் இன்று…
2. தேனி மாவட்டத்திலுள்ள பண்ணைபுரம் என்ற மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்த ஒரு சிறிய கிராமத்தில், டேனியல் ராமசாமி மற்றும் சின்னத்தாயி தம்பதியரின் மகனாகப் பிறந்தார் இசைஞானி இளையராஜா.
3. கம்யூனிஸ்டு கட்சியின் பிரச்சாரப் பாடகராக இருந்த தனது அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்களோடு இணைந்து கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பல ஊர்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வந்ததே இவரது ஆரம்பகால இசைப்பணியாக இருந்தது.
4. தனது இருபத்தைந்தாவது வயதில் சென்னைக்கு வந்து, சொல்லிலடங்கா போராட்டங்களுக்குப் பின் தன்ராஜ் மாஸ்டர் என்பவரிடம் மேற்கத்திய இசை நுட்பங்களை அறிந்து கொண்டதோடு, பாக், பீத்தோவன், மொசார்ட் ஆகியோரின் பாதிப்பு ஏற்பட, லண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரியில் மேற்கத்திய செவ்வியல் கிதார் இசையில் பயிற்சி மேற்கொண்டு தங்கப்பதக்கமும் வென்றார்.
5. ஆரம்ப காலங்களில் பல்வேறு இசைக் குழுக்களில் ஒரு கிட்டார் இசைக் கலைஞராகவும், காம்போ ஆர்கன் வாசிப்பவராகவும் பயணித்து வந்த இசைஞானி இளையராஜா, 1970களின் தொடக்கத்தில் இசையமைப்பாளர் ஜி கே வெங்கடேஷ் அவர்களிடம் உதவியாளராக பணியமர்த்தப்பட்டு, அவருடைய நூற்றுக் கணக்கான கன்னட திரைப்பட பாடல்களில் தனது சீரிய பங்களிப்பை தந்திருக்கின்றார்.
6. எளியோரும், வலியோரும் ரசிக்கும் வண்ணம், நம் மண் சார்ந்த இசையின் தன்மையையும் அதன் தொன்மையையும் திரையிசை என்ற கருவி மூலம் உலகிற்கே சொன்ன ராகதேவன் இளையராஜா, 1976ஆம் ஆண்டு வெளிவந்த “அன்னக்கிளி' என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் அவர்களால் வெள்ளித்திரைக்கு ஒரு இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டார்.
7. தமிழ் திரையிசையில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்ட ஆண்டாக அமைந்தது 1976. எம் எஸ் விஸ்வநாதன் என்ற மாபெரும் இசைமேதையின் பொற்காலம் முடிந்து, இளையராஜா என்ற இசைஞானியின் பொற்காலம ஆரம்பமான ஆண்டாகவும் மாறியது 1976. அன்று தொடங்கிய இவரது இசைப்பிரவாகம் ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கும் மேல் இவரை தமிழ் திரையிசையின் தனிப்பெரும் ஆளுமையாகவே அடையாளப்படுத்தியிருந்தது.
8. தொழில் மீது கொண்ட பக்தியும், தனது இசை ஞானத்தின் மீதிருந்த நம்பிக்கையும், வலிமையும்தான் இளையராஜா என்ற ஒரு அறிமுக இசையமைப்பாளரை இசைஞானியாக அவதாரம் எடுக்க வைத்தது. படங்களை நம்பி அவர் இல்லை. அவரை நம்பித்தான் படங்கள் இருந்தன என்பதே உண்மை.
9. ஒரு பாடலை உருவாக்க வாரமோ அல்லது மாத கணக்கில் நேரமோ இளையராஜாவிற்கு தேவைப்பட்டதே இல்லை. “தென்றல் வந்து தீண்டும் போது” என்ற பாடலை உருவாக்க இசைஞானி எடுத்துக் கொண்டது வெறும் அரைமணி நேரம்தான்.
10. தெம்மாங்கு மெட்டில் அமைந்த சில பாடல்களுக்கு ஜாஸ் இசையின் பின்னணியிலும், ஒரு நாட்டுப்புறப்பாடலை அபூர்வமான கர்நாடக இசையின் ராகத்தில் அமைக்கும் வல்லமையும் இவருக்கு கைவந்த கலை. இவ்வாறு உருவான இவரது பாடல்கள் ஏராளம்! ஏராளம்!!
11. இசைஞானி இளையராஜாவின் மற்றொரு சாதனை என்பது திரைப்படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு. காட்சியை ஒரு முறை பார்த்ததுமே பின்னணி இசைச் சேர்ப்பின் இசைக் குறிப்புகளை எழுதிக் கொடுத்துவிடுவது அவரது வழக்கமான ஒன்றாகவும், ஒரு அசாத்திய சாதனையாகவும் இன்றும் ஒரு பிரமிப்போடு பார்க்கப்படுகின்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
12. ஆசியாவிலேயே முதல் முறையாக “சிம்ஃபொனி” இசை அமைத்தவர் இசைஞானி இளையராஜா. “சிம்ஃபொனி” கம்போஸ் பண்ண குறைந்தது 6 மாதாமாவது ஆகும். வெறும் 13 நாளில் கம்போஸ் செய்து, மற்ற கம்போஸர்களை மிரளச் செய்தவர்தான் இசைஞானி இளையராஜா.
13. “தேசிய விருதுகள்”, “பத்ம விருதுகள்”, “தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்”, “கலைமாமணி விருது”, “ஃபிலிம்ஃபேர் விருதுகள்”, “கேரள மாநில திரைப்பட விருதுகள்”, “சங்கீத நாடக அகாடமி விருது”, “முனைவர் பட்டம்” என விருதுகளும், பட்டங்களும் இவர் கைவசம் வந்து பெருமை அடைந்திருக்கின்றன.
14. “பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை, ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை, எனது ஜீவன் நீதான் என்றும் புதிது” என்ற அவரது பாடல் போலவே, என்றும் புதிதாய் இசையோடு வாழும் நம் இசைஞானி இளையராஜா அவர்களின் பிறந்த தினமான இன்று, அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பினை பகிர்ந்து, அவரை வாழ்த்துவதில் நாம் பெருமை கொள்வோம்.