'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' | ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! |

வில்லங்கமான படங்கள் எடுத்து, வில்லங்கமான கருத்துகளை கூறி தன்னை பரபரப்பிலேயே வைத்திருப்பவர் ராம்கோபால் வர்மா. என்.டி.ஆரின் வாழ்க்கையை மையமாக வைத்து பாலகிருஷ்ணா படம் எடுத்தபோது அதற்கு போட்டியாக 'லஷ்மி என்.டி.ஆர்' என்ற படம் எடுத்து சர்ச்சையை கிளப்பினார். அதில் என்.டி.ராமராவை பெண் பித்தராக சித்தரித்திருந்தார். ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து 'யாத்ரா' என்ற படம் வெளியானது. தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
இந்த படத்திற்கு போட்டியாக 'வியூகம்' என்ற படத்தை இயக்கி வருகிறார் ராம் கோபால் வர்மா. இது தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கையை மையமாக கொண்டது. ஜெகன் மோகன் ரெட்டியாக அஜ்மல் நடிக்கிறார். இந்த படத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, நடிகர் பவன் கல்யாண் ஆகியோரை காமெடியாக சித்தரித்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு தெலுங்கு தேசம் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், ராம் கோபால வர்மா அலுவலகம் முன்பாக கூடிய தெலுங்கு தேசம் கட்சியினர் 'வியூகம்' படத்தின் போஸ்டர்களை தீயிட்டுக் கொளுத்தினர். ராம் கோபால் வர்மாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து, போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் வந்து போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர்.
இதுகுறித்து ராம் கோபால் வர்மா தனது எக்ஸ் தளத்தில், “சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் உங்களது நாய்கள் எனது அலுவலகத்தில் வந்து குரைத்துக் கொண்டிருந்தது; காவலர்கள் வரவே ஓடிவிட்டார்கள்” என பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில் வியூகம் படத்தை தடை செய்ய கோரி சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ''வியூகம் படத்தில் சந்திரபாபு நாயுடுவை தவறாக காட்டி உள்ளனர். அவரது கவுரவத்தை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த படத்தை எடுத்து உள்ளனர். இதனை டிரைலரில் பார்க்க முடிகிறது. டிரைலரில் இருப்பது போலவே படம் முழுவதும் இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே வியூகம் படத்தை தடை செய்ய வேண்டும்'' என்று கூறியுள்ளார்.